Published : 22 Aug 2025 12:03 PM
Last Updated : 22 Aug 2025 12:03 PM
சென்னை: கூவத்தூரில் நாளை நடைபெற உள்ள இசையமைப்பாளர் அனிருத் இசை நிகழ்ச்சிக்கு தடை கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள கூவத்தூர் பகுதியில் அமைந்துள்ள மார்க் சொர்ணபூமி எனும் இடத்தில் 'ஹுக்கும்' ( Hukum) எனும் பெயரில் அனிருத்தின் மாபெரும் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பையும், முன்பதிவு பற்றிய விவரங்களையும் அனிருத் வெளியிட்டிருந்தார். பல்லாயிரகணக்கான ரசிகர்கள் பங்கேற்கும் இந்த பிரம்மாண்ட இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட் விற்பனையும் நடந்தது.
இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் அனுமதி பெறாமல் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுவதாக கூறி இந்த இசை நிகழ்ச்சிக்கு தடை கேட்டு செய்யூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பனையூர் பாபு தரப்பில் வழக்கறிஞர் திருமூர்த்தி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று காலை முறையீடு செய்தார்.
இதை தொடர்ந்து, மனு தாக்கல் செய்யும் பட்சத்தில் இன்று பிற்பகல் 2:15 மணிக்கு இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT