Published : 18 Aug 2025 07:44 AM
Last Updated : 18 Aug 2025 07:44 AM

திருஞானசம்பந்தர் மீது காதல் கொண்ட ‘பூம்பாவை’!

சேலத்தில் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தை டி.ஆர்.சுந்தரம் 1937-ல் ஆரம்பித்தபோது, அதில் வேலைக்குச் சேர்ந்தார், நடிகையும் பாடகியுமான யு.ஆர்.ஜீவரத்தினம். அவருடைய திறமையைக் கண்ட டி.ஆர்.சுந்தரம், தனது முதல் படமான ‘சதி அகல்யா’வில் (1937) அவரை அறிமுகப்படுத்தினார். பிறகு, ‘சந்தான தேவன்’ (1937), ‘பக்த கவுரி’ (1941) ஆகிய படங்களில் அடுத்தடுத்து நடிக்க வைத்தார். அவர் பாடிய பாடல்கள் அப்போது மிகவும் பிரபலமானதை அடுத்து புகழ் பரவியது. அவர் அடுத்து முதன்மை வேடத்தில் நடித்த படம், ‘பூம்பாவை’.

அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான திருஞானசம்பந்தரை, பூம்பாவை என்ற இளம்பெண் காதலித்ததாக நாட்டுப்புறக் கதை ஒன்று இருக்கிறது. அந்தக் கதையின் பின்னணியில் உருவான திரைப்படம் இது.

மயிலாப்பூரில் சிவநேசன் என்ற சிவபக்தருக்குத் தெய்வீகக் குழந்தை ஒன்று பிறக்கிறது. பூம்பாவை என்ற பெயர் சூட்டப்பட்ட அவர், சிவனடியார்களிடம் அன்புகொண்டு இருக்கிறார். தனது தம்பி ஏலேலசிங்கனுக்கு திருமணம் செய்துவைத்தால் சிவநேசனின் செல்வம் அனைத்தையும் அனுபவிக்கலாம் என நினைக்கிறார், பூம்பாவையின் மாற்றாந்தாய் பொன்னம்மாள். அதற்கு மறுப்புத் தெரிவிக்கிறார் சிவநேசன். இந்நிலையில் சிவபெருமான், அடியார் வேடத்தில் சிவநேசனிடம் யாசகம் கேட்டு வருகிறார். பூம்பாவை, யாசகம் கொடுக்கிறார். பெற்றுக்கொள்ளும் சிவபெருமான், அன்பின் மிகுதியால் விலைமதிப்பில்லாத மாணிக்கத்தை அவரிடம் கொடுத்துச் செல்கிறார்.

இந்நிலையில் நகை வியாபாரியான சிவநேசனிடம் மயிலாப்பூர் அரசன் ஒரு கிரீடம் செய்ய ஆணையிடுகிறார். அதில் ஒரு மாணிக்கக் கல்லைப் பதித்துத் தருமாறும் சொல்கிறார். அடியார் கொடுத்த மாணிக்கக் கல் அன்பின் மிகுதியால் கொடுத்தது என்றும் அது விற்பனைக்கு அல்ல என்றும் சொல்லும் சிவநேசன், அரசன் விரும்பினால் தருவதாகச் சொல்கிறார். இதற்கிடையே அடியார் வேடத்தில் வரும் சிவபெருமான், பூம்பாவையிடம் அந்த மாணிக்கக் கல்லைத் தானமாகப் பெற்றுச் சென்று விட, அதை அரசனிடம் சொல்கிறார் சிவநேசன். ஏற்க மறுக்கும் அரசன், அவரை நாட்டை விட்டு வெளியேறச் சொல்கிறார். சோழநாட்டுக்குக் குடும்பத்துடன் செல்லும் சிவநேசன், அங்கு திருஞானசம்பந்தரின் அற்புதச் செயல்களைக் கண்டு பூரிப்படைகிறார். பூம்பாவையின் மனம் அவர் மீது செல்கிறது. அவரைத் தனியாகச் சந்தித்தபோது தனது ஆசையைச் சொல்கிறார் பூம்பாவை. ‘உலக ஆசைகளில் ஈடுபடாமல் தெய்வீக அறிவைத் தேடு’மாறு அவளிடம் கூறுகிறார் சம்பந்தர். இதற்கிடையே அரவம் தீண்டி இறந்துவிடும் பூம்பாவையை, தனது சக்தியால் உயிர்த்தெழ வைக்கிறார்.

அவள் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மீண்டும் கேட்கிறாள். ஆனால் உயிர் கொடுத்ததால் இப்போது தான் தந்தையைப் போன்றவர் என்று கூறி, அவளுக்குத் தெய்வீக அறிவைக் கொடுப்பதாகக் கதை செல்லும்.

கதையை கம்பதாசன் எழுத, சோமையாஜுலு வசனம் எழுதினார். கிருஷ்ணன் - பஞ்சு மேற்பார்வையில், பாலாஜி சிங் இயக்கினார் என்கிறது டைட்டில். ஆனால், கிருஷ்ணன் - பஞ்சுதான் இயக்கினார்கள் என்றும் சொல்கிறார்கள். புருஷோத்தம் ஒளிப்பதிவு செய்த இந்தப் படத்துக்கு அட்டேபள்ளி ராமராவ் இசை அமைத்தார். படத்தில் ஏகப்பட்ட பாடல்கள். அதில் காலம் வீண் போகுதே, ஓம் நமச்சிவாயா ஆகிய பாடல்கள் அப்போது பிரபலமாயின.

யு.ஆர்.ஜீவரத்தினம் பூம்பாவையாக நடித்தார். கே.ஆர்.ராமசாமி திருஞானசம்பந்தராகவும் கே.சாரங்கபாணி, பூம்பாவையின் தந்தை சிவநேசனாகவும் டி.ஆர். ராமச்சந்திரன் ஏலேலசிங்கனாகவும் கே.ஆர். செல்லம் பொன்னம்மாளாகவும் நடித்தனர். மேலும் ஏ.ஆர்.சகுந்தலா, எஸ்.வி.சஹஸ்ரநாமம், டி.பாலசுப்ரமணியம், என்.எஸ். கிருஷ்ணன், டி.ஏ.மதுரம், எம்.ஆர்.துரைராஜ், கே.பி.ஜெயராமன் என பலர் நடித்தனர்.

கீழ்ப்பாக்கத்தில் உள்ள நியூடோன் ஸ்டூடியோவில் உருவாக்கப்பட்ட இந்தப்படம், வெற்றி பெற்றது. 1944-ம் ஆண்டு ஆக.11-ம் தேதி சில குறிப்பிட்ட திரையரங்குகளில் மட்டும் வெளியான இந்தப் படம் பின்னர், ஒரு வாரத்துக்குப் பிறகு இதே நாளில் அதிகமான திரையரங்குகளில்
வெளியிடப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x