Last Updated : 15 Aug, 2025 05:40 PM

 

Published : 15 Aug 2025 05:40 PM
Last Updated : 15 Aug 2025 05:40 PM

ரஜினியின் உழைப்பு இளைஞர்களுக்கான வாழ்வியல் பாடம் - ‘கூலி’க்கு சீமான் வாழ்த்து!

சென்னை: சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களுக்கு ரஜினிகாந்தின் புகழ் வாழ்வும், பெற்ற பெருவெற்றிகளும் என்றும் வழிகாட்டும் வாழ்வியல் பாடங்களாகும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ்த் திரையுலகின் தன்னிகரில்லா உச்ச நட்சத்திரமாக, தனிப்பெரும் ஆளுமையாகத் திகழும் ரஜினிகாந்த் தம்முடைய திரைவாழ்வின் பொன்விழா ஆண்டினை காண்பது மிகுந்த மனமகிழ்வை தருகின்றது.

நீண்ட நெடிய தம் கலைப்பயணத்தில் இரண்டு தலைமுறை இளையோர், பெண்கள், குழந்தைகள், முதியோர் என அனைத்து தரப்பு மக்களும் விரும்பும் திரைக்கலைஞராக திகழ்ந்து, தொடர்ந்து 50 ஆண்டுகளாக உச்ச நட்சத்திரமாக ஒளிர்வது இந்தியப் பெருநாட்டில் இதுவரை எவரும் நிகழ்த்திடாத ஈடு இணையற்ற தனிமனித பெருஞ்சாதனையாகும்.

இந்தியப் பெருநாட்டைக் கடந்து, உலகம் முழுக்க பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்களால் ரசித்து கொண்டாடப்படும் அவருடைய நடிப்புத்திறன் வியந்து போற்றத்தக்கதாகும்.

1975 ஆம் ஆண்டு நடிகராக தனது கலைப்பயணத்தை தொடங்கியபோது இருந்த ஆர்வமும், வேகமும், தேடலும் கொண்டு துடிப்புடன் நடித்து, ஏற்ற கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்தாரோ, இன்றளவும் சற்றும் குறைவின்றி உழைப்பினைச் செலுத்தும் அவருடைய அர்ப்பணிப்புதான், அவரின் திரைப்படங்கள் ஒவ்வொன்றையும் இமாலய வெற்றிகள் பெறச் செய்தன. சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களுக்கு அவருடைய புகழ் வாழ்வும், பெற்ற பெருவெற்றிகளும் என்றும் வழிகாட்டும் வாழ்வியல் பாடங்களாகும்.

எந்நிலை உயர்ந்தாலும் தன்னிலை மாறாது இனிமையாகவும், எளிமையாகவும் பழகும் ஆகச்சிறந்த மானுடப் பண்பினை இயல்பிலேயே கொண்ட தமிழ்த்திரையின் உச்சநட்சத்திரம் ரஜினிகாந்த், என்னுடைய நெஞ்சம் நிறைந்த பொன்விழா ஆண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்!

ரஜினிகாந்த், இன்னும் பற்பல ஆண்டுகள் தம் இனிய கலைப்பயணத்தைத் தொடர வேண்டுமென்ற எம் பெருவிருப்பத்தைத் தெரிவிப்பதோடு, 'கூலி' திரைப்படம் மாபெரும் வெற்றிப்படைப்பாக அமைய என்னுடைய அன்பும் வாழ்த்துகளும்' எனத் தெரிவித்துள்ளார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x