Published : 10 Aug 2025 01:23 PM
Last Updated : 10 Aug 2025 01:23 PM
நடிகர் ரஜினிகாந்த் நடித்து வெளியாக உள்ள ‘கூலி’ திரைப்பட சிறப்புக் காட்சிக்கு டிக்கெட் ரூ.400 விற்பதால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விலையை குறைக்காவிட்டால், சிறப்புக் காட்சியை புறக்கணிக்க கும்பகோணம் பகுதி ரஜினி ரசிகர்கள் முடிவு செய்துள்ளனர்.
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘கூலி’ திரைப்படம் வரும் 14-ம் தேதி வெளியாக உள்ளது. கும்பகோணம் பகுதியில் இந்த படத்துக்கான சிறப்புக் காட்சிக்கு ஒரு டிக்கெட் ரூ.400 வசூலிக்கப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்துள்ள அவரது ரசிகர்கள், கூடுதல் கட்டணம் வசூலிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கும்பகோணம் பகுதியில் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.
இதுதொடர்பாக ரஜினிகாந்த் ரசிகர் மன்ற கும்பகோணம் ஒன்றியச் செயலாளர் இன்பராஜ் கூறியது: ரஜினி ரசிகர்களாக கடந்த 30 ஆண்டுகளாக பயணித்து வருகின்றோம். அவரது திரைப்படம் வெளிவரும் போது, பல்வேறு நலத்திட்ட உதவிகள், போஸ்டர்கள் உள்ளிட்ட எங்களது சொந்த செலவில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்து வருகின்றோம். இங்குள்ள பெரும்பாலான ரசிகர்கள் வசதி படைத்தவர்கள் இல்லை. ஆனாலும் ரஜினிக்காக மட்டும் ரசிகர்களாக உள்ளோம். இந்த நிலையில், கூலி திரைப்படம் வரும் 14-ம் தேதி கும்பகோணத்தில் உள்ள 3 தியேட்டர்களில் வெளியாக உள்ளது.
ஆனால், இதில் சிறப்புக் காட்சிக்கு ரூ.190, ரூ.200 என நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் மட்டும் தான் வசூலிக்க வேண்டும். ஆனால், கூலி திரைப்பட சிறப்பு காட்சிக்கு ரூ.400 வசூலிக்கின்றனர். இதுதொடர்பாக அவர்களிடம் கேட்டபோது, வினியோகஸ்தர்கள் தான் வசூலிக்க சொல்லி உள்ளனர் என பதில் கூறுகின்றனர். இது ரசிகர்களை வேதனைக்கு உள்ளாகியுள்ளதுடன், அவர்களை முடக்கும் விதமாக உள்ளது. இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். மேலும், இதைக் கண்டித்து மாநகரில் போஸ்டர்கள் அச்சிட்டு ஒட்டி உள்ளோம்.
இதைத்தொடர்ந்து நேற்று(நேற்று முன்தினம் மாலை)நடைபெற்ற அவசர ஆலோசனைக் கூட்டத்தில், இந்த கட்டண விவகாரம் தொடர்பாக ரஜினிகாந்த் வீட்டுக்குச் சென்று புகார் தெரிவிப்பது, தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் ஆகியோர் மீது மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு புகார் அனுப்புவது, கட்டணத்தை குறறைக்காவிட்டால் சிறப்புக் காட்சியை புறக்கணிப்பது என முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT