Last Updated : 03 Aug, 2025 09:07 PM

7  

Published : 03 Aug 2025 09:07 PM
Last Updated : 03 Aug 2025 09:07 PM

என் ரசிகர்களை சுயநலனுக்காக பயன்படுத்த மாட்டேன்: நடிகர் அஜித் அறிக்கை

“நான் இன்று என்னவாக இருக்கிறேனோ, அதற்கு முக்கிய காரணம் என் ரசிகர்களின் அன்பும், ஆதரவும்தான். உங்கள் அன்பை என் சுயலாபத்துக்காகவோ அல்லது தவறாகவோ பயன்படுத்தமாட்டேன்” என்று நடிகர் அஜித் கூறியுள்ளார். திரைப்பட துறையில் அடியெடுத்து வைத்து 33 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு நடிகர் அஜித் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதன் விவரம்: “சினிமா எனும் அற்புதமான பயணத்தில் 33 வருடங்கள் நிறைவு செய்கிறேன். ஆனால், இதனை கொண்டாடுவதற்காக எழுதவில்லை. எனக்கு எண்களின் மீது நம்பிக்கை இல்லை. ஒவ்வொரு வருடமும் எனக்கு முக்கியமானதுதான். இந்தப் பயணத்துக்காக முழுமனதுடன் கைக்கூப்பி நன்றி தெரிவிக்கிறேன்.

இந்தப் பயணம் எனக்கு எளிதாக இல்லை. இந்தத் துறைக்கு எந்த பின்புலமோ அல்லது யாருடைய சிபாரிசோ இல்லாமல்தான் நுழைந்தேன். முழுக்க முழுக்க என் சுயமுயற்சியால் மட்டுமே சினிமாத் துறைக்குள் நுழைந்தேன். காயங்கள், மீண்டும் வருதல், தோல்வி மற்றும் அமைதி என வாழ்க்கை என்னை பல வழிகளில் சோதித்தது. ஆனால், நான் தளர்ந்து போகவில்லை. முயற்சி செய்தேன், மீண்டு வந்தேன், தொடர்ந்து முன்னேறுகிறேன். ஏனெனில், விடாமுயற்சி என்பதை வெறுமனே நான் கற்றுக் கொள்ளவில்லை. அதை பரிசோதித்து அவ்வண்ணமே வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

எண்ணில் அடங்காத அளவுக்கு வெற்றியும், தோல்வியும் சினிமாவில் பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் என் வெற்றி மீது நான் சந்தேகம் கொள்ளும்போதும் உங்கள் அன்புதான் என்னை மீண்டுவர செய்துள்ளது. இந்த அன்புக்கு என்றும் உண்மையாக இருப்பேன். இந்த அன்பை எப்போதும் இறுகப் பிடித்திருப்பேன். ஆனால், என் பயணம் சினிமாவோடு முடிந்துவிடவில்லை.

மோட்டார் ரேசிங் உலகில் வேறுவிதமான சவால்களை எதிர்கொண்டேன். அந்த டிராக் நீங்கள் யார் என்பதை பொருட்படுத்தாது, மன்னிக்காது. அதற்கு தேவை Respect, Focus & Grit! அந்த டிராக்கில் பலமுறை ரத்தம் வரும் அளவுக்கு விபத்து ஏற்பட்டது. என்னை பலமுறை தூக்கி எறிந்திருக்கிறது. இருந்தாலும் தொடர்ந்து பயணிக்கிறேன். இந்த பயணம் விருதுகளுக்காகவோ அல்லது தலைப்பு செய்திகளுக்காகவோ அல்ல. ஒழுக்கம், துணிவு மற்றும் ஒரு குறிக்கோளுக்காக ஏற்படும் வலி என இவற்றின் மூலம் என்னை எனக்கே நிரூபிக்க பயணிக்கிறேன். வீரம் மிக்க நாட்டின் பிரதிநிதியாகவும் இருக்கிறேன்.

அஜித்குமார் மோட்டார் ரேசிங் என்ற பெயரில் 2025-ம் ஆண்டு மீண்டும் விளையாட்டுத் துறைக்கு மட்டும் நுழையவில்லை. வயது வரம்பு, அச்சம், தடைகள் இதைப் பார்த்து தங்கள் மீதே சந்தேகம் கொள்பவர்களுக்கு உத்வேகம் கொடுக்கவும்தான் விளையாட்டுத் துறைக்குள் மீண்டும் வந்தேன்.

நான் இன்று என்னவாக இருக்கிறேனோ அதற்கு முக்கிய காரணம் என் ரசிகர்களின் அன்பும், ஆதரவும்தான். உங்கள் அன்பை என் சுயலாபத்துக்காகவோ அல்லது தவறாகவோ பயன்படுத்தமாட்டேன்.

சினிமாவில் எனக்கான பாதையை வடிவமைத்து, வழிநடத்தி, என்னை நம்பி என் வளர்ச்சிக்கு உதவிய அனைத்து இயக்குநர்கள், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள், பத்திரிகையாளர்கள், சாட்டிலைட் மற்றும் சமூக ஊடகங்கள், விமர்சகர்கள் அனைவருக்கும் நன்றி.

பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், தமிழகத்தின் மதிப்புக்குரிய தலைவர்கள் மற்றும் பல்வேறு சந்தர்ப்பங்களில் எனக்கு அன்பாக இருந்த அதிகாரிகளுக்கும் நன் நன்றி கூறுகிறேன். எனக்கு மதிப்புமிக்க பத்ம பூஷண் விருது வழங்கி, எனது சமூக மரியாதை மற்றும் பொறுப்பை மேலும் பலப்படுத்தியதற்காக இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய அரசுக்கு நன்றி கூறுகிறேன்.

என் வாழ்வின் பலம் மனைவி ஷாலினிதான். எல்லா தருணங்களிலும் அவர் என்னுடன் நின்றிருக்கிறார். என் குழந்தைகள் அனோஷ்கா மற்றும் ஆத்விக் இருவரும் என் வாழ்விற்கு அர்த்தம் கொடுத்தவர்கள். சமூகத்தின் மீது அக்கறை கொள்ளும் மனப்பானையுடன் என்னை வளர்த்த மறைந்த என் தந்தை பி.எஸ்.மணி மற்றும் என் அம்மா மோகினி மணி, என் சகோதரர் மற்றும் என் குடும்பத்தினர் அனைவரின் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றி.

நான் பல சமயங்களில் அதிகம் வெளியே வராமலும், பேசாமலும் இருக்கலாம். ஆனால், சினிமா மட்டுமல்ல, மோட்டார் பந்தயத்திலும் முழு கவனம் செலுத்தி உங்களை மகிழ்விக்க தவறியது இல்லை.

என் நிறை, குறைகள் அனைத்தையும் இந்த 33 வருடங்கள் ஏற்றுக்கொண்டு என் மீது அன்பு வைத்து கொண்டாடியதற்கு நன்றி. உங்களுக்கும் எனக்கும் என்றென்றும் உண்மையாக இருக்க முயற்சிப்பேன். என் மோட்டார் ரேசிங் கரியருக்கும் உங்கள் அன்பும் ஆதரவும் தேவை. நம் நாட்டையும் பெருமைப்படுத்துவேன் என நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார் அஜித்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x