Published : 03 Aug 2025 07:54 AM
Last Updated : 03 Aug 2025 07:54 AM

ஹவுஸ்மேட்ஸ் - திரை விமர்சனம்

காதல் திருமணம் செய்துகொள்ளும் கார்த்தியும் (தர்ஷன்) அனுவும் (அர்ஷா சாந்தினி) சென்னை வேளச்சேரியில் பழைய அடுக்குமாடி வீட்டை வாங்கி குடியேறுகிறார்கள். அந்த வீட்டில் அமானுஷ்ய விஷயங்கள் நடக்கின்றன. இதேபோல ரமேஷ் (காளி வெங்கட்), விஜி (வினோதினி) வீட்டிலும் நடக்கின்றன. பின்னர் நடக்கும் ட்விஸ்ட்டுகளில் இந்த 2 குடும்பமும் ஒரே அடுக்குமாடி வீட்டில்தான் வசிக்கிறார்கள் என்பது தெரிய வருகிறது. ஆனால், கார்த்தியும் அனுவும் ரமேஷும் விஜியும் வெவ்வேறு டைம் லைனில் வசிக்கிறார்கள். இதனால் இரண்டு குடும்பங்களுக்கும் பிரச்சினைகள் எழுகின்றன. இதை எப்படித் தீர்த்துக் கொள்கிறார்கள் என்பதுதான் கதை.

வித்தியாசமான கதைக் களத்தைக் கையில் எடுத்து, அதைத் திகிலாகவும் நகைச்சுவையாகவும் கொஞ்சம் எமோஷனல் கலந்தும் இயக்கியிருக்கிறார், இயக்குநர் ராஜ்வேல். முதலில் ஒரு பேய்க் கதை போலவே நகர்ந்து செல்லும் திரைக்கதையில் இது பேய்க் கதை அல்ல என்பது தெரிய வருகிறபோது சுவாரஸியம் பற்றிக் கொள்கிறது. வெவ்வேறு காலகட்டத்தில் அடுக்குமாடி வீட்டில் வசிக்கும் குடும்பங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அழகாகவும் நகைச்சுவையாகவும் படமாக்கி இருக்கிறார்கள். அதுவும், கண்ணுக்கே தெரியாமல் இரு குடும்பங்களும் அறிமுகமாகிக் கொள்ளும் காட்சியில் சிரிப்பு வெடி. வீட்டை விற்க முயலும் காட்சியும், சிறுவனின் பிறந்த நாள் காட்சியும் கலகலப்பூட்டுகின்றன.

அதெப்படி ஒரே வீட்டில் இரண்டு குடும்பங்கள், வெவ்வேறு காலகட்டத்தில் வசிப்பதை உணர முடிகிறது என்பதற்கு ஓர் அறிவியல் காரணத்தை முன் வைக்கிறார்கள். அதற்காகவே ஒரு கதாபாத்திரம் அமைந்திருப்பதும் யதார்த்தமாகவே இருக்கிறது. அந்த அறிவியல் காரணம் பேன்டஸி ரகமாக விரிந்து செல்கிறது. அதைப் பார்வையாளர்களுக்குப் புரியும் வகையில் ஒரு மின்னல் அடித்து வீட்டில் பிளவு ஏற்படுவது போல காட்டியிருப்பதும் அதை விளக்குவதையும் எளிமைப்படுத்தி இருந்தால், இன்னும் சுவாரஸியமாக இருந்திருக்கும். வெவ்வேறு காலகட்டத்தில் வாழும் நபர்கள் சந்திக்க முயற்சிப்பது, அதே பெயருடன் அவர்கள் இருப்பது போன்றவை சற்று குழப்பமாக இருந்தாலும், எமோஷனலை கனெக்ட் செய்து படத்தை முடித்திருப்பது இயக்குநரின் புத்திசாலித்தனம். முதல் பாதியைத் திகிலாகவும் இரண்டாம் பாதியை அறிவியல் கலந்தும் படத்துக்கு வடிவம் கொடுத்திருப்பது ஏமாற்றவில்லை.

நாயகன் தர்ஷன், காதல் மனைவியுடன் ரொமான்ஸ், கோபம், பிரச்சினையிலிருந்து மீளமுடியாமல் தவிப்பது என ஸ்கோர் செய்திருக்கிறார். ஆனால், உணர்வுப் பூர்வமான காட்சிகளில்இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். இன்னொரு நாயகன் என்று சொல்லுமளவுக்கு காளிவெங்கட் அமர்க்களப்படுத்தியிருக்கிறார். நாயகியாக அர்ஷா சாந்தினி, இயக்குநர் கொடுத்த வேலையைக் குறையின்றிச் செய்திருக்கிறார். வினோதினி வைத்தியநாதனின் நகைச்சுவை, எமோஷனல் காட்சிகள் படத்துக்குப் பலம். மாஸ்டர் ஹென்றி அஷ்லே க்யூட்டாக மனதைக் கொள்ளை கொள்கிறார்.

ராஜேஷ் முருகேசனின் பின்னணி இசை படத்தின் ஓட்டத்துக்குக் கைகொடுத்திருக்கிறது. இருவேறு காலகட்டங்களில், வீட்டின் அறைகள் அனைத்தையும் நுணுக்கமாக வேறுபடுத்திக் காட்டி ஸ்கோர் செய்கிறார் கலை இயக்குநர் என்.கே.ராகுல். எம்.எஸ்.சதீஷின் ஒளிப்பதிவு, நிசார் ஷரெப்பின் படத்தொகுப்பு படத்துக்குப் பக்கபலம். ஹவுஸ்மேட்ஸ் - பேய்ப் படம் மாதிரி.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x