Published : 03 Aug 2025 07:50 AM
Last Updated : 03 Aug 2025 07:50 AM
சென்னையின் புழல் சிறையிலிருந்து சேலம் நீதிமன்றத்துக்குக் கணக்கு (உதயா) என்கிற விசாரணைக் கைதியை, போலீஸ் வாகனத்தில் அழைத்துச் செல்கின்றனர். அவரைப் பாதுகாப்பாகக் கொண்டு சேர்க்கும் போலீஸ் ‘எஸ்கார்ட்’களில் ஒருவராக உடன் பயணிக்கிறார் வேந்தன் (அஜ்மல்). ஆனால், சேலத்தைச் சென்றடையும் வழி நெடுக, கணக்கைக் கொலை செய்ய ஒரு கூலிப்படை சளைக்காமல் துரத்தி வந்து தாக்குகிறது. இன்னொரு பக்கம், போலி என்கவுன்டர் மூலம் கணக்கின் கதையை முடிக்கச் சில போலீஸ் அதிகாரிகள் திட்டமிடுகிறார்கள். போட்டிப் போட்டு இவர்கள் ஏன் கணக்கைக் கொல்ல நினைக்கிறார்கள்? ‘எஸ்கார்ட்’ மாறனால் கணக்கைக் காப்பாற்ற முடிந்ததா என்பது கதை.
ஒரு கொலை விசாரணைக் கைதியின் கடந்த காலத்தை, துண்டாடப் பட்ட பிளாஷ் - பேக்குகள் வழியாகச் சொல்லும் திரைக்கதை உத்தி ஈர்க்கிறது. கணக்கின் காதல் வாழ்க்கையைச் சிறிது சிறிதாகத் தெரிந்துகொண்டு, அவனைப் பாதுகாக்கத் தொடங்கும் வேந்தனுக்கும் கணக்குக்கும் இடையில் அன்பும் அக்கறையும் பூக்கும் தருணங்களை நன்றாகவே சித்தரித்திருக்கிறார்கள். பேருந்துக்குள் நடக்கும் சண்டை, அது கவிழ்ந்து விழும் காட்சி ஆகியவற்றைப் பிரம்மாண்டமாகவும் நம்பும்படியாகவும் படமாக்கியிருக்கிறார் ஸ்டன்ட் சில்வா.
உயர்பொறுப்பில் இருப்பவர்களுக்கு ஏவல், எடுபிடி வேலைகள் செய்ய வேண்டிய நிலையிலிருக்கும் எளிய போலீஸ்காரர்கள், எப்போதும் அப்படியே இருந்துவிட மாட்டார்கள் என்பதை வேந்தன் கதாபாத்திரம் வழியாகக் காட்டிய விதம் நன்று. வேந்தனாக அஜ்மல் தன் கதாபாத்திரத்தின் அப்பாவித்தனத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.
சின்னச் சின்னக் குற்றங்களைச் செய்யத் தொடங்கும் ஒருவன், பெரிய குற்றம் நோக்கி நகர்வதற்கான காரணத்தைஇன்னும் அழுத்தமாக அமைத்திருக்கலாம். அதேபோல், சிறைப் பறவை என்று தெரிந்தே கணக்கைக் காதலிக்கும் மலருக்கும் (ஜான்விகா) பொருத்தமான காரணத்தை வைக்கவில்லை.
குற்ற வாழ்க்கையிலிருந்து ஒருவன் மீள நினைப்பதற்கான உந்து சக்தியாகக் காதலும் அமைதியான வாழ்க்கை தரும் நிம்மதியும் இருக்கலாம் என்பதைக் கணக்கு கதாபாத்திரம் வழியாகச் சொல்லிய விதம் ஈர்க்கிறது. எதிர்பாராத தீவிர தருணங்களைக் கொண்டிருக்கும் அக்கதாபாத்திரத்தை உதயா தனது நடிப்பால் உரமேற்றியிருக்கிறார். காதல் காட்சிகளில் நடிப்பில் உற்சாகத்தைத் தெறிக்கவிட்டிருக்கிறார். கணக்கின் காதலி மலராக வரும் ஜான்விகா, தோற்றம், நடிப்பு இரண்டாலும் மனதில் தங்கிவிடுகிறார்.
பொருத்தமான இடத்தில் தங்கும் விடுதி ஊழியராக வந்து, குணச்சித்திரம் காட்டிச் செல்லும் யோகிபாபு, உதயாவையும் அஜ்மலையும் மரணக் கலாய் செய்யும் ஒன்லைனர்கள் திரையரங்கில் அப்பாஸ் அள்ளுகின்றன. மருதநாயகத்தின் ஒளிப்பதிவு, நரேன் பாலகுமாரின் இசை ஆகிய அம்சங்கள், ‘ஓவர் டீடெய்ல்டு’ திரைக்கதையைத் தாங்கிப் பிடித்திருக்கின்றன. காதல், நகைச்சுவை, த்ரில்லர், சீரியஸ் என்கிற கலவையான உணர்வுகளால் கோர்க்கப்பட்ட, சமூகம் உருவாக்கிய குற்றவாளி இவன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT