Published : 02 Aug 2025 08:02 AM
Last Updated : 02 Aug 2025 08:02 AM
புதுடெல்லி: மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை சார்பில் 71-வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் நேற்று அறிவிக்கப்பட்டன. 40 பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
இதில் சிறந்த நடிகராக ஷாருக்கான் (ஜவான் - இந்தி திரைப்படம்), விக்ராந்த் மாஸ்ஸி (12-வது பெயில் - இந்தி திரைப்படம்) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். ஜவான் திரைப்படத்தை தமிழ்நாட்டை சேர்ந்த அட்லீ இயக்கியது குறிப்பிடத்தக்கது.
சிறந்த நடிகையாக ராணி முகர்ஜி (மிஸஸ் சாட்டர்ஜி Vs நார்வே - இந்தி திரைப்படம்) தேர்வு செய்யப்பட்டு உள்ளார். சிறந்த துணை நடிகராக எம்.எஸ். பாஸ்கர் (பார்க்கிங் - தமிழ் திரைப்படம்), விஜயராகவன் (பூக்காலம் - மலையாள திரைப்படம்), சிறந்த துணை நடிகையாக ஊர்வசி (உள்ளொழுக்கு - மலையாள திரைப்படம்), ஜான்சி போடிவாலா (வாஸ் குஜராத்தி திரைப்படம்) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். சிறந்த இயக்குநருக்கான விருது சுதிப்தோ சென்னுக்கு (தி கேரளா ஸ்டோரி - இந்தி திரைப்படம்) வழங்கப்பட்டு உள்ளது.
சிறந்த இசைக்கான விருது ஜி.வி.பிரகாஷ் குமார் (வாத்தி - தமிழ் திரைப்படத்துக்கான பாடல்கள்), ஹர்ஷ்வர்தன் (அனிமல் -இந்தி திரைப்பட பின்ணணி இசை) ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.
சிறந்த பின்னணி பாடகருக்கான விருது பிவிஎன்எஸ்.ரோஹித் (பிரேமிஸ்துன்னா - பேபி - தெலுங்கு திரைப்படம்), சிறந்த பின்னணி
பாடகிக்கான விருது ஷில்பா ராவ் (ஜவான் - சலியா - இந்தி திரைப்படம்) ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சிறந்த பாடலுக்கான விருது கசர்லா ஷியாம் (பலகம் - ஊரு பல்லேட்டுரு - தெலுங்கு திரைப்படம்), சிறந்த நடனத்துக்கான விருது வைபவி மெர்சன்ட் (ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி - திந்தோரா பஜே ரே - இந்தி திரைப்படம்), சிறந்த சண்டை பயிற்சிக்கான விருது நந்து பிருத்வி (ஹனுமன் - தெலுங்கு திரைப்படம்), சிறந்த ஒளிப்பதிவுக்கான விருது பிரசாந்து மகோபாத்ரா (தி கேரளா ஸ்டோரி) ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த கதை வசனத்துக்கான விருது ராம் குமார் பாலகிருஷ்ணன் (பார்க்கிங் - தமிழ் திரைப்படம்), சாய் ராஜேஷ் நீலம் (பேபி - தெலுங்கு திரைப்படம்), தீபக் கின்கிரானி (சிர்ப் ஏக் பந்தா காபிஹே - இந்தி திரைப்படம்) சவுன்ட் டிசைனுக்கான விருது சச்சின் சுதாகரன், ஹரிஹரன் முரளிதரன் (அனிமல் - இந்தி திரைப்படம்), சிறந்த எடிட்டிங் விருது மிதுன் முரளி (பூக்காலம் - மலையாள திரைப்படம்) ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.
சிறந்த தமிழ் படமாக பார்க்கிங் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இந்த பிரிவில் படத்தின் தயாரிப்பு நிறுவமான சோல்சர்ஸ் பேக்டரி, பேசன் ஸ்டூடியோ, இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணனுக்கு விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஆவண படப் பிரிவில் சிறந்த ஒளிப்பதிவுக்கான விருது சரவணமுத்து, சவுந்திரபாண்டி, மீனாட்சி சோமன் (லிட்டில் விங்ஸ் - தமிழ் குறும்படம்) ஆகியோருக்கு வழங்கப்பட்டு உள்ளது. சிறந்த தமிழ் திரைப்படம், கதை வசனம், துணை நடிகர் ஆகிய பிரிவுகளில் பார்க்கிங் திரைப்படம் 3 விருதுகளை வென்றுள்ளது.
பார்க்கிங் படத்துக்கு சிறந்த துணை நடிகர் விருது கிடைத்தது பற்றி நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் கூறும்போது, “இந்த விருது கிடைத்ததில் மகிழ்ச்சி. தேர்வு குழுவினருக்கும், அருமையான கதையையும் அதற்கு சிறந்த திரைக்கதையையும் அமைத்த இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணனுக்கும் நன்றி. அடுத்து படம் இயக்க இருக்கிற உதவி இயக்குநர்கள், இதுபோன்ற வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்து இயக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT