Last Updated : 02 Aug, 2025 11:26 AM

5  

Published : 02 Aug 2025 11:26 AM
Last Updated : 02 Aug 2025 11:26 AM

கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டும் அசாத்திய கலைஞன் - யார் இந்த எம்.எஸ்.பாஸ்கர்? 

தமிழில் நகைச்சுவையில் கொடிக்கட்டி பறந்தாலும், இன்னொரு பக்கம் குணச்சித்திர நடிப்பில் கலக்கியவர்கள் பலர் உண்டு. ஆனால் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, பின்னர் குணச்சித்திரமோ, வில்லத்தனமோ, ஒரே ஒரு காட்சியில் வரும் கேரக்டரோ, எந்த கதாபாத்திரத்தை ஏற்றாலும் அதுவாகவே மாறி தனது ஆளுமையை நிரூபிப்பவர்கள் ஒருசிலரே. அப்படி, தான் ஏற்று நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் உயிர் கொடுப்பவர்களில் ஒருவர்தான் எம்.எஸ்.பாஸ்கர்.

நாகப்பட்டினத்தில் பிறந்து வளர்ந்த எம்.எஸ்.பாஸ்கர், டப்பிங் கலைஞராக தனது சினிமா பயணத்தை தொடங்கினார். சொஸைட்டி ஃபார் நியூ டிராமா என்னும் நாடகக் குழுவின் அங்கமாக இருந்த எம்.எஸ்.பாஸ்கர், அனைத்திந்திய வானொலியிலும் தூர்தர்ஷனிலும் ஒளி/ஒலிபரப்பப்பட்ட நாடகங்கள் சிலவற்றில் நடித்துள்ளார். தூர்தர்ஷன் தமிழில் ஒளிபரப்பான புகழ்பெற்ற 'விழுதுகள்' தொடரிலும் அவர் நடித்திருக்கிறார்.

தன் அக்கா டப்பிங் துறையை சேர்ந்தவர் என்பதால் தானும் அதே துறையில் பணியாற்ற விரும்பினார் எம்.எஸ்.பாஸ்கர். தெலுங்கிலிருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்படும் படங்களில் பெரும்பாலும் நகைச்சுவை நடிகர்களுக்கு அவர் டப்பிங் பேசினார். பின்னர் தொலைக்காட்சிகளுக்கென்றே பிரத்யேகமான மொழிமாற்றம் செய்யப்பட்ட ஆங்கிலப் படங்கள் பலவற்றில் பலவகையான கதாபாத்திரங்களுக்கு அவருடைய அபாரமான குரல் திறன் பயன்பட்டது.

உலகப் புகழ்பெற்ற ‘தி ஷெஷாங்க் ரிடம்ஷன்’ படத்தில் டப்பிங் வெர்ஷனின் தமிழ் ஒலிச்சித்திரம் கேட்போருக்கு மார்கன் ஃப்ரீமேன் கேரக்டரில் நடித்தது எம்.எஸ்.பாஸ்கர்தான் என்பதை உணர்வர். அந்த அளவுக்கு கச்சிதமாக டப்பிங் பேசியிருப்பார் எம்.எஸ்.பாஸ்கர்.

விசு இயக்கத்தில் 1987-ல் வெளியான 'திருமதி ஒரு வெகுமதி' படம்தான் பாஸ்கர் நடித்த முதல் திரைப்படம். தொடர்ந்து சில படங்களில் சின்னச் சின்ன வேடங்களில் தலைகாட்டி வந்தார். 90-களின் தொடக்கத்தில் தமிழ்நாட்டு இல்லங்களை தொலைகாட்சிகள் ஆக்கிரமிக்க தொடங்கியபோது, டிவி சீரியல்கள் இல்லத்தரசிகளின் பிரதான பொழுதுபோக்காக மாறியது. இந்த காலகட்டத்தில் பாஸ்கருக்கு பல சீரியல் வாய்ப்புகள் கிடைத்தன.

சன் டிவியில் ஒளிபரப்பான 'கங்கா யமுனா சரஸ்வதி', 'மாயாவி மாரீசன்' போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்தார். எனினும் எம்.எஸ்.பாஸ்கர் என்னும் பெயரை அனைவரும் அறிந்துகொள்ளவும் அவரை வியந்து பாராட்டவும் வைத்தது 'சின்ன பாப்பா பெரிய பாப்பா' நகைச்சுவை தொடரில் அவர் ஏற்ற பட்டாபி கதாபாத்திரம்தான். இந்த சீரியலில் ஒரு காட்சியை பார்த்த நடிகர் கமல்ஹாசன் தன்னை வீட்டுக்கு அழைத்து பாராட்டியதாக ஒரு பேட்டியில் பாஸ்கர் பகிர்ந்திருந்தார்.

அந்தத் தொடரில் ஒரு காது கேட்கும் திறனற்றவராக இன்னொரு காதின் பின்னால் கையை வைத்தபடி பிராமணத் தமிழில் அவர் பேசிய விதம் பெரும் வரவேற்பை பெற்றது. பட்டாபி என்ற பெயரே அவரின் உண்மையான பெயர் என்றாகிப் போகும் அளவுக்கு அந்த கதாபாத்திரம் பிரபலமானது.

இந்த சீரியலுக்குப் பிறகு அதிகமான திரைப்பட வாய்ப்புகள் பாஸ்கரை தேடி வரத் தொடங்கின. மணிரத்னம் தயாரித்து அழகம் பெருமாள் இயக்கிய 'டும் டும் டும்' திரைப்படத்தில் கதையில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தும் துணைக் கதாபாத்திரம் பாஸ்கருக்கு கிடைத்தது. விஜய்யின் 'தமிழன்' திரைப்படத்தில் பொதுமக்களிடம் எரிந்து விழும், வயது வித்தியாசம் பாராமல் மரியாதைக் குறைவாகப் பேசி இழிவுபடுத்தும் பேருந்து நடத்துநராக கச்சிதமாகக் நடித்திருப்பார் பாஸ்கர்.

இவற்றையெல்லாம் விட பாஸ்கர் நடிக்கும் ‘குடிகாரர்’ பாத்திரங்கள் எப்போதும் பேசப்படும். குறிப்பாக விஜயகாந்த், வடிவேலு நடித்த ‘எங்கள் அண்ணா’ படத்தில் ஒரே ஒரு காட்சியில் குடிகாரராக நடித்திருப்பார் பாஸ்கர். ஆனால் இன்றளவும் குடிகாரர்கள் தொடர்பாக சமூக வலைதளங்களில் மீம்களாக பயன்படுத்தப்படுவது அந்தக் காட்சிதான். அந்த அளவுக்கு அசல் மதுப்பிரியராகவே மாறி காமெடியில் அசத்தியிருப்பார்.

'தசாவதாரம்' திரைப்படத்தில் டூரிஸ்ட் கைடாக, அமெரிக்க வில்லனான ஃப்ளெச்சர் உடன் படம் முழுக்க வரும் கேரக்டரை பாஸ்கருக்கு கமல்ஹாசன் வழங்கி இருந்தார். தமிழ் கலந்த ஆங்கிலம் பேசுபவராக நகைச்சுவையில் அசத்தியிருந்த விதத்தில் முத்திரை பதித்தார் பாஸ்கர்.

ராதாமோகன் இயக்கிய படங்களில் எல்லாம் எம்.எஸ்.பாஸ்கருக்கு என்று ஒரு சிறப்பான கதாபாத்திரம் இருக்கும். அதை அவரும் தனது சிறப்பான நடிப்பால் அதகளப்படுத்தி இருபபார். உதாரணமாக ‘மொழி’ படத்தில் மகனின் மரணம் கொடுத்த அதிர்ச்சியால் மனதளவில் கடந்த காலத்திலேயே தேங்கிப் போய்விட்ட ஒரு கனிவான மனிதராக அவரது கதாபாத்திரம் தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த துணைக் கதாபாத்திரங்களில் ஒன்றாகும். படத்தின் இறுதிக் காட்சியில் உண்மையை உணர்ந்து கதறி அழும் காட்சியைக் கண்டு மனம் கனக்காதவர்களே இருக்க முடியாது.

இது தவிர 'அறை எண்305-இல் கடவுள்', 'சூது கவ்வும்', ’இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம்’, ‘தெய்வத் திருமகள்’, ‘எட்டு தோட்டக்கள்’ என தொடர்ந்து நகைச்சுவை, குணச்சித்திரம் என பன்முகத்தன்மையுடன் கூடிய தனது திறன்மிகு நடிப்பை வெளிப்படுத்தி வந்துள்ளார் பாஸ்கர். அதிலும் ’இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம்’ படத்தில் செவ்விந்தியராக அவர் பேசும் விசித்திரமான மொழியும், அதற்கு சாம்ஸ் கொடுக்கும் மொழிபெயர்ப்பும் இன்று வரை வெடித்து சிரிக்க வைக்கும் நகைச்சுவை காட்சிகள். சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தில் கூட ’ஸ்ட்ரிக்ட்’ ஆன, அதேநேரம் நல்ல மனம் படைத்த முதலாளியாக நடித்து கவனம் ஈர்த்தார். ‘எட்டுத் தோட்டாக்கள்’ படத்தில் வரும் ஓட்டல் காட்சி, என்றும் நம் நெட்டிசன்களின் ஃபேவரிட்.

தமிழில் குணச்சித்திர நடிகர்களுக்கு போதிய புகழ் வெளிச்சம் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்டகாலமாகவே உண்டு. இதனை மறைந்த நடிகர் டெல்லி கணேஷ் ஒரு மேடையில் வெளிப்படையாகவே வேதனையுடன் பதிவு செய்திருந்தார். இதற்கு எம்.எஸ்.பாஸ்கரும் விதிவிலக்கல்ல. என்னதான் பலவகையான கதாபாத்திரங்களில் நடித்து தமிழில் முக்கிய நடிகர் என்ற இடத்தை எம்.எஸ்.பாஸ்கர் பிடித்திருந்தாலும் கூட அவருடைய முழு நடிப்பு ஆளுமையையும் வெளிக் கொண்டு வந்த திரைப்படங்கள் மிகக் குறைவு என்றுதான் சொல்லவேண்டும்.

ஹாலிவுட்டில் குணச்சித்திர நடிகர்களுக்காகவே எழுதப்பட்டு பெரும் புகழ்பெற்ற படங்கள் உண்டு. அப்படியான கதைகள் இங்கு பெருமளவில் எழுதப்படவில்லை. ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கிய ‘பார்க்கிங்’ திரைப்படம் அந்த குறையை போக்கியது. ஹீரோ ஹரீஷ் கல்யாண் தான் என்றாலும் கூட, படத்தின் ஆன்மாவாக விளங்கியது எம்.எஸ்.பாஸ்கரின் நடிப்புதான்.

ஈகோ குணம் தலைக்கேறிய நபராக தன்னை விட பலவயது குறைவான இளைஞனிடம் மல்லுக்கு நிற்கும் கதாபாத்திரம் அது. படம் முழுக்க ஆடியன்ஸின் வெறுப்பை சம்பாதிக்கும் அளவுக்கு அந்த கேரக்டராகவே மாறி சிறப்பாக நடித்திருந்தார். அதற்கான பலனாகத்தான் அப்படத்தில் நடித்த பாஸ்கருக்கு சிறந்த உறுதுணை நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் வழக்கமான ஹீரோயிச க்ளிஷேக்களை உடைத்தெறிந்த அப்படத்தின் நேர்த்தியான உள்ளடக்கத்தின் விளைவாக சிறந்த படம், சிறந்த திரைக்கதைக்காக மேலும் இரண்டு தேசிய விருதுகள் கிடைத்துள்ளன.

எம்.எஸ்.பாஸ்கர் போன்ற திறமையான நடிகர்களை மையப்படுத்தி மேலும் பல திரைப்படங்கள் எழுதப்பட வேண்டும். அதன் மூலம் அபார திறமையும் பன்முக நடிப்பாளுமையும் மிக்க எம்.எஸ்.பாஸ்கர் போன்றோர் இன்னும் பல விருதுகளைப் பெற்று மேலும் பல உயரங்களை அடைவதற்கான கதவுகள் திறக்கப்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x