Published : 25 Jul 2025 05:16 PM
Last Updated : 25 Jul 2025 05:16 PM
‘கடைக்குட்டி சிங்கம்’, ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ என குடும்ப சென்டிமென்ட் கதைகளின் மூலம் வெற்றியை கொடுத்த பாண்டிராஜ் மீண்டும் அதே களத்தை கையில் எடுத்துள்ள படம் ‘தலைவன் தலைவி’. ‘பொட்டல முட்டாயே’ பாடல், ட்ரெய்லர் வைரலான நிலையில், ‘மகாராஜா’வுக்குப் பிறகு விஜய் சேதுபதிக்கு நல்ல ஓபனிங் உடன் வெளியாகியுள்ளது.
மதுரையில் பரோட்டா கடை வைத்திருப்பவர் ஆகாசவீரன் (விஜய் சேதுபதி). பக்கத்து ஊரைச் சேர்ந்த அரசியுடன் (நித்யா மேனன்) ஆகாசவீரனுக்கு திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. காதலிக்கத் தொடங்கும் இருவரும் மனதளவில் ஈர்க்கப்படுகின்றனர். ஆனால் ஹீரோவின் பின்னணியை தெரிந்துகொள்ளும் ஹீரோயின் குடும்பத்தினர் இந்த வரன் வேண்டாம் என்று சொல்கின்றனர். இன்னொரு பக்கம் நாயகியை திருமணம் செய்தால் ஹீரோவின் பெற்றோர் எதிர்காலத்தில் மருமகளால் ஒதுக்கப்படுவார்கள் என்று ஜோசியக்காரர் சொல்வதை கேட்டு இந்த திருமணத்தை நிறுத்த நினைக்கின்றது ஹீரோ குடும்பம்.
ஆனால், இரு வீட்டாரின் எதிர்ப்பையும் தாண்டி ஹீரோயினை தன் வீட்டுக்கு அழைத்து வந்து திருமணம் செய்துகொள்கிறார் ஹீரோ. நன்றாக சென்று கொண்டிருக்கும் குடும்ப வாழ்க்கையில் மாமியார் - மருமகள் பிரச்சினை, நாத்தனார் பிரச்சினை என ஆரம்பிக்கும் விரிசல் போகப் போக பெரிதாகி ஒரு கட்டத்தில் கணவன் - மனைவி இருவரும் பிரியும் நிலைக்கு வந்துவிடுகிறது. இருவரும் மீண்டும் சேர்ந்தார்களா, இல்லையா என்பதை நான்-லீனியர் பாணியில் அலசுகிறது ‘தலைவன் தலைவி’.
தனது முந்தைய படங்களில் உறவுகளின் புனிதம், குடும்பத்தின் பெருமை ஆகியற்றை பேசிய பாண்டிராஜ், அதே உறவுகளால் ஏற்படும் சிக்கல்கள், சொந்தக்காரர்கள் என்ற பெயரில் உண்டாக்கும் பிரச்சினைகளை இதில் பேசியதன் மூலம் முந்தைய படங்களில் தான் காட்டிய கற்பிதங்களை தானே உடைத்துள்ளார். கணவன் - மனைவிக்கு நடுவே ஏற்படும் சின்ன சின்ன பிரச்சினைகள் கூட சுற்றி இருப்பவர்களால் எப்படி பூதாகரமாகிறது என்பதை படம் முழுக்க கலகலப்பாக சொல்லி இருக்கிறார்.
படத்தில் வரும் ஏராளமான சின்னச் சின்ன தருணங்கள் ரசிக்கவும் சிரிக்கவும் வைக்கின்றன. குறிப்பாக நித்யா மேனனை பெண் பார்க்க வரும்போது நடக்கும் காட்சிகள், நித்யா மேனனை ஹீரோவின் அப்பா சரவணன் கல்லாவில் உட்கார சொன்னபிறகு வீட்டில் தொடங்கும் ஈகோ பிரச்சினை, அதைத் தொடர்ந்து வரும் காட்சிகள் ஆகியவற்றை உதாரணமாக சொல்லலாம். பாண்டிராஜின் முந்தைய படங்களைப் போல இதில் வரும் அனைவரும் நல்ல குணத்தின் மறு உருவம் அல்ல. கிட்டத்தட்ட படத்தில் வரும் அத்தனை கதாபாத்திரங்களிடமும் பிரச்சினை இருப்பதாக காட்டியிருப்பதும் அதற்காக வைக்கப்பட்ட காட்சிகளும் சிறப்பு.
படத்தின் தொடக்கத்தில் வைக்கப்பட்ட மகளுக்கு மொட்டையடிக்கும் காட்சியை சுற்றியே மொத்தப் படத்தையும் அமைத்து நான்-லீனியரில் கதையை சொன்னது புத்திசாலித்தனமான ஐடியா. நேர்க்கோட்டில் சொல்லியிருந்தால் இது எடுப்பட்டிருக்குமா என்பது சந்தேகமே. படத்தில் நகைச்சுவைக்கு ஆங்காங்கே வரும் யோகிபாபுவின் ஒன்லைனர்கள் உதவியுள்ளன.
படத்தின் மிகப் பெரிய ப்ளஸ், அதன் நடிகர்கள். விஜய் சேதுபதி - நித்யா மேனனை சுற்றி நடக்கும் கதை என்பதால் இருவருக்குமே சமமான முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பது பாராட்டத்தக்கது. விஜய் சேதுபதியும் ஹீரோயிசத்துக்கு வாய்ப்பிருந்த காட்சிகளில் கூட அதை தவிர்த்திருப்பதன் மூலம் மீண்டும் ஒருமுறை தனித்து நிற்கிறார். இந்த இருவருக்கும் அடுத்தபடியாக படம் முழுக்க ஸ்கோர் செய்பவர் ஹீரோவின் அம்மாவாக வரும் தீபா சங்கர். இந்த கதாபாத்திரம் அவருக்கு தமிழில் பல கதவுகளை திறக்கலாம்.
’பாரதி கண்ணம்மா’ ரோஷினிக்கு முக்கியமான கதாபாத்திரம். அதை நிறைவாக செய்திருக்கிறார். சரவணன், செம்பன் வினோத், ஜானகி சுரேஷ், காளி வெங்கட், மைனா நந்தினி, யோகி பாபு என படத்தில் வரும் அத்தனை கேரக்டர்களும் சிறப்பாக செய்திருக்கின்றனர். குறிப்பாக, பரோட்டாவை படத்தில் ஒரு முக்கிய கேரக்டராக பாவித்திருப்பது ரசிக்கும்படி இருந்தது. படத்தின் ஆரம்ப காட்சிகள் பரோட்டா பிரியர்களை வாய் ஊற வைக்கும்.
படத்தின் குறையென்று பார்த்தால் சில சீரியசான தருணங்களைக் கூட கலகலப்பாக காட்ட முயற்சித்திருப்பது ஒரு கட்டத்தில் ஓவர்டோஸ் ஆகிவிடுகிறது. உதாரணமாக, நித்யா மேனனும் விஜய் சேதுபதியும் சண்டை போடும் காட்சிகளில் இருவரும் மாறி மாறி கத்திக் கொண்டே இருப்பது ஓரளவுக்கு மேல சலிப்பை ஏற்படுத்துகிறது. அதேபோல இரண்டாம் பாதியில் எம்எல்ஏவின் ஆட்கள் இரு குடும்பத்துக்கும் இடையே பஞ்சாயத்து செய்வதாக வரும் காட்சிகள், திரும்ப திரும்ப இரு குடும்பமும் மாறி மாறி சண்டையிடும் காட்சிகள் நெளிய வைக்கின்றன. ஒரு காட்சியில் மைனா நந்தினி ‘இவங்க இன்னும் முடிக்கலையா?’ என்பார். அதுவேதான் பார்ப்பவர்களுக்கு தோன்றுகிறது.
படமே முடிந்தும் கூட சண்டை முடியவில்லை. விவாகரத்து குறித்த காட்சிகளை நகைச்சுவையாக காட்சிப்படுத்தியிருப்பது சரிதான். ஆனால் ஒட்டுமொத்தமாக விவாகரத்து செய்பவர்களை எல்லாம் நோக்கி விஜய் சேதுபதி செய்யும் அட்வைஸ் தேவையற்றது. எல்லாருடைய சூழலும், காரணமும் ஒன்றல்ல.
சந்தோஷ் நாராயணின் பின்னணி இசை படத்துக்கு பக்கபலம். பாடல்களில் ‘பொட்டல முட்டாயே’ குதூகலிக்க வைக்கிறது. எம்.சுகுமாரின் ஒளிப்பதிவு காட்சிகளின் தரத்தை கூட்டியிருக்கிறது. நான்-லீனியராக அமைக்கப்பட்ட திரைக்கதையை தொய்வின்றி நகர்த்த உதவிய எடிட்டர் பிரதீப் ராகவுக்கு ஸ்பெஷல் பாராட்டு.
சில குறைகள், சில இழுவைகள் இருந்தாலும் திருமணத்துக்கு பிந்தைய வாழ்க்கையை முடிந்தவரை கலகலப்பாகவும், சுவாரஸ்யமாகவும் சொன்ன வகையில் ‘ஃபேமிலி என்டர்டெய்னர்’ ஜானரில் மீண்டும் ஒருமுறை ஜெயித்திருக்கிறார் பாண்டிராஜ்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT