Last Updated : 14 Jul, 2025 10:36 PM

 

Published : 14 Jul 2025 10:36 PM
Last Updated : 14 Jul 2025 10:36 PM

“என்னை முதன்மையானவனாகவே பார்க்க விரும்பிய தாயுள்ளம்” - சரோஜா தேவி குறித்து கமல் உருக்கம்

சென்னை: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்தார்.

பழம்பெரும் நடிகர் சரோஜா தேவி உடல்நலக்குறைவால் இன்று (ஜூலை 14) காலையில் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 87. மூச்சுத்திணறல் காரணமாக பெங்களூரு கொலம்பியா ஏசியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சரோஜா தேவி இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “என்னைப் பார்க்கும் இடமெல்லாம் என் எந்த வயதிலும் கன்னம் கிள்ளும் விரலோடு, ‘செல்ல மகனே’ என்னும் குரலோடு இன்னொரு தாயாக இருந்தவர் சரோஜா தேவி அம்மா. மொழி, பிரதேச எல்லை இல்லாது வாழ்ந்த கலைஞர். மறைந்துவிட்டார். என் இரண்டாம் படமான ‘பார்த்தால் பசி தீரும்’ படப்பிடிப்புத் தருணங்கள் தொடங்கி எத்தனை எத்தனையோ அழியா நினைவுகள் நெஞ்சில் அலையடிக்கின்றன. கண்கள் ததும்புகின்றன. என்றைக்கும் என்னை முதன்மையானவனாகவே பார்க்க விரும்பிய தாயுள்ளம். வணங்கி வழியனுப்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

சரோஜாதேவி கன்னடம், தமிழ், தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வந்தவர். இவர் ஐம்பதாண்டு காலமாக திரைப்படத் துறையில் உலாவந்து, 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். ரசிகர்களால் “கன்னடத்துப் பைங்கிளி”, “அபிநய சரசுவதி” போன்ற அடைமொழிகளால் அழைக்கப்படுகிறார். இவர் பல திரைப்பட விருதுகளையும், இந்திய அரசின் பத்மபூஷன், பத்மஸ்ரீ விருதுகளையும் வென்றுள்ளார். அதேபோல, வாழ்நாள் சாதனையாளர்களுக்கான இந்திய அரசின் தேசிய விருதும் இவருக்கு வழங்கப்பட்டது. இவரது மறைவு இந்திய திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x