Published : 14 Jul 2025 06:48 PM
Last Updated : 14 Jul 2025 06:48 PM
வயது என்பது வெறும் எண் தான் என தனது கடைசி நாட்கள்வரை நிரூபித்துக் காட்டியவர் பழம்பெரும் நடிகை சரோஜா தேவி. எப்போதும் பளிச்சென்ற அரிதாரம், அதிலும் குறிப்பாக ‘மை’ தீட்டப்பட்ட ஆயிரம் கதை பேசும் அந்தக் கண்கள், லிப்ஸ்டிக்கையும் தாண்டிய புன்னகையால் மிடுக்காக தெரியும் முகம் என்று வலம் வந்தார்.
பெயர், புகழ், பல உயரிய விருதுகள் என எல்லாம் சேர்ந்திருந்தாலும், ஒரு கலைஞனுக்கு தன்னால் முடியும் வரை கலையை நிகழ்த்திக் காட்டுவதில்தான் மிகப் பெரிய வெற்றியாக இருக்கும். ஒவ்வொரு நாள் கைதட்டும் கலைஞனுக்கு முதல் பாராட்டு போன்றுதான் இருக்கும். அந்த ஆத்ம திருப்திக்காக அண்மைக் காலம் வரை திரையில் வந்து கொண்டிருந்த சரோஜா தேவி திங்கள்கிழமை தனது 87 வயதில் மண்ணைவிட்டு மறைந்தார்.
‘கலைஞனுக்கு ஏது மறைவு!’ என்பது உண்மை என்பதால் இனியும் நினைவுகளால் நம்மோடு வாழ்ந்து கொண்டிருப்பார். அவர் நம்மைப் பிரிந்த நாளில் அவரது நினைவுகளைப் போற்றுவது அவருக்கான புகழஞ்சலியாக இருக்கும் என்பதால் நினைவுகூர்வோம்.
‘வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்’, கன்னட சினிமாவில் இருந்து தமிழுக்கு சரோஜா தேவியின் நடிப்பைக் கொண்டாடியது. ஹீரோக்களின் களமான சினிமாவில், நடிகையை ‘கன்னடத்துப் பைங்கிளி’, ‘அபிநய சரஸ்வதி’ என்று கொண்டாடினார்கள் தமிழ் ரசிகர்கள். அவரும் அப்படி ஈர்த்திருந்தார்.
‘ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்...’ என்று கண்களால் சரோஜா தேவி கொஞ்சியதாக இருக்கட்டும், ‘சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து’ என்று கைவிரல்களால் அபிநயம் பிடித்ததாக இருக்கட்டும், ஆஹா சரியான பட்டம்தான் கொடுத்தோம் என தமிழ் ரசிகர்களை தங்களுக்கே சபாஷ் சொல்ல வைத்தது.
தமிழ், தெலுங்கு, கன்னடம் என ஐம்பதாண்டு காலமாக திரைப்படத் துறையில் உலாவந்து இருநூறு படங்களுக்கு மேல் நடித்துள்ளார். அதிலும் தமிழ்த் திரையில் 25 ஆண்டுகள் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்த பி.சரோஜா தேவி சினிமாவில் நுழைந்ததே ஒரு விபத்து என்றுதான் சொல்ல வேண்டும். சரோஜா தேவியின் தந்தை பைரவப்பா காவல் அதிகாரி. தாய் ருத்ரம்மா குடும்பத் தலைவி. இவர்களுக்கு நான்காவது மகளாகப் பிறந்தவர் சரோஜா தேவி.
பள்ளிக்கூட பாட்டுப் போட்டியில் பாடியவரை, ‘நீ ஏன் நடிக்கக் கூடாது?’ என்று திரைக்குக் கொண்டுவந்தவர், ஹொன்னப்ப பாகவதர் கவி. அவர், நடித்து, தயாரித்த ‘மகாகவி காளிதாஸா’ என்ற கன்னடப் படத்தில் 1955-ம் ஆண்டு அறிமுகமானார். படம் மிகப் பெரிய வெற்றி. அதற்குத் தேசிய விருதும் கிடைத்தது. தமிழில் உடனடியாக நடிக்க முடியாதபடி கன்னடப் படங்கள் அவருக்குக் குவிந்தன.
‘இல்லறமே நல்லறம்’ என்ற படத்தில் சின்ன வேடத்தில் தமிழில் அறிமுகமானார் சரோஜா தேவி. அதன் பின்னர் இரண்டாவது கதாநாயகி வேடங்களில் நடித்தார். எம்ஜிஆர். சொந்தப்பட நிறுவனம் தொடங்கி இயக்கித் தயாரித்து நடித்த ‘நாடோடி மன்னன்’ தான் தமிழில் அவருக்கு பிரேக் கொடுத்த படம்.
எம்.ஜி.ஆருடன் ‘நாடோடி மன்னன்’ தொடங்கித் ‘திருடாதே’, ‘தாய் சொல்லைத் தட்டாதே’, ‘படகோட்டி’, ‘எங்க வீட்டுப் பிள்ளை’, ‘பெற்றால்தான் பிள்ளையா’, ‘அன்பே வா’ என தமிழ் ரசிகர்கள் மனதில் அவர் ஊடுருவினார்.
சரோஜா தேவின் தமிழ்த் திரைப் பயணத்தில் ‘கல்யாணப் பரிசு’ அவருக்குப் பெரும் பரிசு. ஸ்ரீதர் இயக்குநராக அறிமுகமான இந்தப் படத்தில் நடித்ததன் மூலமாகவே பெரும் நட்சத்திர அந்தஸ்து பெற்றார் சரோஜா தேவி.
பின்னர், சிவாஜி கணேசனுடன் ‘பாகப் பிரிவினை’, ‘பாவமன்னிப்பு’, ‘பார்த்தால் பசி தீரும்’ என்று தொடங்கி ‘புதிய பறவை’யாகக் காதலித்து அவரைக் கைது செய்ய வரும் ரகசிய ஏஜெண்டாகப் பிரமாதப்படுத்தினார். இவ்வாறாக, எம்ஜிஆருடன் 26 படங்களிலும், சிவாஜி கணேசனுடன் 22 படங்களிலும் ஜோடியாக நடித்தார். ஜெமினி கணேசனுடனும் நிறைய படங்களில் நடித்தார்.
படப்பிடிப்பில் ஒழுங்கு, காலம் தவறாமை ஆகியவற்றுக்குப் புகழ்பெற்றவர். அன்றைய நாயகியரில் அதிக சம்பளம் வாங்கியவர் என்ற பெருமையும் கொண்டவர். ஆடை, ஒப்பனைகளில் வெரைட்டி காட்டியவர்.
திருமணத்துக்குப் பிறகும் படங்களில் கதாநாயகியாக நடித்தார். திருமணம் செய்துகொண்டால் வாய்ப்புகள் குறைந்துவிடும் என்ற மாயையை முதலில் தகர்த்தெறிந்தது என இக்கால கதாநாயகிகளுக்கு சரோஜா தேவி முன்னோடி என்றால் அது மிகையாகாது!
சிவாஜி - விஜய் நடித்த ‘ஒன்ஸ்மோர்’ படத்துக்குப் பிறகு, நீண்ட இடைவெளிக்குப் பிறகு சூர்யாவின் ‘ஆதவன்’ படத்தில் நடித்தார் சரோஜா தேவி. அந்தப் படம் முழுவதுமே வடிவேலுவின் கலாய்ப்புகளுக்கு இணையான எனர்ஜியுடன் ரசிகர்களை கலகலப்பூட்டினார் சரோஜா தேவி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT