Published : 14 Jul 2025 09:48 AM
Last Updated : 14 Jul 2025 09:48 AM
பிரபல தெலுங்கு தயாரிப்பாளரும் இயக்குநருமான வி.பி.ராஜேந்திர பிரசாத், தான் இயக்கிய ‘அந்தஸ்தலு’ என்ற படத்துக்காக தேசிய விருதைப் பெற்றவர். தெலுங்கில் சுமார் ஒன்பது படங்களை இயக்கிய பிறகு தமிழில் அவர் இயக்கிய முதல் படம், ‘எங்கள் தங்க ராஜா’.
இது சோபன் பாபு, சாரதா, கிருஷ்ண குமாரி நடித்து தெலுங்கில் வெளியான ‘மானவுடு தானவுடு’ என்ற படத்தின் ரீமேக். இதில் சிவாஜி - மஞ்சுளா ஜோடியாக நடித்தனர். இருவரும் இணைந்து நடித்த முதல் படம் இது.
இவர்கள் தவிர, சவுகார் ஜானகி, மேஜர் சுந்தர்ராஜன், ஆர்.எஸ்.மனோகர், எஸ்.வி.ராமதாஸ், நாகேஷ், ரமா பிரபா, சிஐடி சகுந்தலா, காந்திமதி என பலர் நடித்தனர். அமைதி, அடக்கத்துடன் பெண்களை கண்டால் வெட்கத்தோடு போகும் டாக்டர் ராஜாவாகவும், முரட்டுத்தனமான பட்டாக்கத்தி பைரவனாகவும் இருவேறு கதாபாத்திரங்களில், ஒவ்வொரு காட்சியிலும் பிரம்மாதப்படுத்தி இருப்பார் சிவாஜி கணேசன்.
சவுகார் ஜானகிக்கு வழக்கம்போல் கண்ணீர் வேடம். அபலைப் பெண்ணாக உருக வைப்பார். காமெடி ஏரியாவை நாகேஷ் கவனித்துக்கொள்ள, வில்லத்தனத்தை மிரட்டலாக செய்திருப்பார், மனோகர். சண்டைக் காட்சிகளின் பிரம்மாண்டம் அப்போது பேசப்பட்டது.
ஈஸ்ட்மேன் கலரில் உருவான இந்தப் படத்துக்கு கே. வி. மகாதேவன் இசையமைத்தார். கண்ணதாசனின் வரிகளில் பாடல்கள் இனிமையாக அமைந்தன. ‘கல்யாண ஆசை வந்த காரணத்தைச் சொல்லவா’, ‘இரவுக்கும் பகலுக்கும் இனி என்ன வேலை’, ‘கற்பாம் மானமாம் கண்ணகியாம் சீதையாம்’ பாடல்கள் இப்போதும் பலரின் ஹிட் லிஸ்டில் இருக்கின்றன. பாலமுருகனின் கூர்மையான, அழுத்தமான வசனம் படத்துக்குப் பலம் சேர்த்தது.
சிவாஜிகணேசன் நடிப்பில் 1973-ம் ஆண்டு, பாரதவிலாஸ், ராஜராஜசோழன், பொன்னூஞ்சல், எங்கள் தங்க ராஜா, கவுரவம், மனிதருள் மாணிக்கம், ராஜபார்ட் ரங்கதுரை ஆகிய ஏழு திரைப்படங்கள் வெளியாயின. அந்த வருடம் இதே தேதியில் வெளியான ‘எங்கள் தங்க ராஜா’ தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் நூறு நாட்களுக்கு மேல் ஓடியது.
தான் தயாரித்து இயக்கிய இந்தப் படம் ஹிட்டானதை அடுத்து சிவாஜி நடிப்பில் மேலும் சில படங்களை இயக்கினார் ராஜேந்திர பிரசாத்.
சிவாஜி - மஞ்சுளா நடிப்பில் ‘ஆதவன்’ என்ற படத்தையும் ‘எங்கள் தங்க ராஜா’வில் வரும் பட்டாக்கத்தி பைரவன் கேரக்டரை மட்டும் வைத்து ‘பட்டாக்கத்தி பைரவன்’ என்ற படத்தையும் அவர் இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT