Published : 12 Jul 2025 09:57 AM
Last Updated : 12 Jul 2025 09:57 AM

பார் மகளே பார் - ‘மெக்கானிக் மாடசாமி’யாக சோ அறிமுகமான படம்!

ராஜ்கபூர், மாலா சின்ஹா நடித்து 1958-ம் ஆண்டு வெளியான இந்தி திரைப்படம், ‘பர்வாரிஷ்’. இந்தப் படத்தின் பாதிப்பில் தமிழில் ‘பெற்றால் தான் பிள்ளையா?’ என்ற தலைப்பில் நாடகம் ஒன்று நடத்தப்பட்டு வந்தது. அதன் கதையில் சின்ன மாற்றம் செய்து உருவாக்கப்பட்ட திரைப்படம், ‘பார் மகளே பார்’. இயக்குநர் பீம்சிங், சிவாஜி கணேசன் காம்போ-வின் ‘ப’ வரிசை படங்களில் ஒன்று, இது.

சிவாஜி கணேசனுடன் சவுகார் ஜானகி, முத்துராமன், விஜயகுமாரி, ஏ.வி.எம் ராஜன், புஷ்பலதா, குமாரி ருக்மணி, வி.கே.ராமசாமி, எம்.ஆர்.ராதா, சோ, மனோரமா என பலர் நடித்தனர்.

கதைப்படி ஜமீன்தாரான சிவாஜி கணேசனுக்கும் அவர் மனைவி சவுகார் ஜானகிக்கும் நீண்ட காலத்துக்குப் பிறகு பெண் குழந்தை பிறக்கிறது. குடும்ப கவுரவத்துக்கும் பாரம்பரியத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் ஜமீன்தார், குழந்தை பிறக்கும் நேரத்தில் ஊரில் இல்லை. ஜமீன்தார் மனைவிக்கு குழந்தை பிறக்கும் அதே நேரத்தில் இன்னொரு பெண்ணுக்கும் குழந்தை பிறக்கிறது.

இரண்டு குழந்தைகளையும் கிளீன் பண்ணுவதற்காக செவிலியர்கள் கொண்டு செல்கிறார்கள். மின் பிரச்சினை காரணமாக செவிலியர்கள் இறந்துவிட, இரண்டு பெண் குழந்தைகளில் தனது மகள் யார் என்கிற அடையாளம் தெரியவில்லை சவுகார் ஜானகிக்கு. இந்நிலையில், குழந்தை பெற்ற கணவனால் கைவிடப்பட்ட பெண், குழந்தையை விட்டுவிட்டுச் சென்றுவிடுகிறார். இரண்டு குழந்தைகளில் தனது மகள் யார் என்பது தெரியாமலேயே இருவரையும் தனது குழந்தையாக பாவித்து வளர்க்கிறார் சவுகார் ஜானகி. பிறகு என்ன நடக்கிறது என்று கதை செல்லும்.

‘பெற்றால்தான் பிள்ளையா’ நாடகத்தில் ஆண் குழந்தைகள் என்று இருந்ததை, சினிமாவுக்காக பெண் குழந்தைகள் என மாற்றிவிட்டனர். நாடகத்தில், ஒரு மகனாக ஒய்.ஜி.மகேந்திரன் நடித்திருந்தார். பெண்கள் என மாற்றியதால் நாடகம் சினிமாவாக்கப்பட்டபோது ஒய்.ஜி.மகேந்திரனுக்கு நடிக்க வாய்ப்பில்லாமல் போய்விட்டது. அவருக்கு பதில் விஜயகுமாரி நடித்திருந்தார். இன்னொருவர் புஷ்பலதா.

‘பெற்றால் தான் பிள்ளையா’ நாடகத்தில் ‘மெக்கானிக் மாடசாமி’ என்ற கதாபாத்திரத்தில், சென்னை வழக்கில் பேசி நடித்திருந்தார் சோ. படத்திலும் அவருக்கு அதே கதாபாத்திரம் கொடுக்கப்பட்டது. இந்தப் படம் மூலம் தான் அவர் சினிமாவில் அறிமுகமானார். சிவாஜியின் அன்னை இல்லம் வீட்டிலும் இந்தப் படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்டன.

விட்டல் ராவ் ஒளிப்பதிவு செய்த இந்தப் படத்துக்கு விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசை அமைத்தனர். ‘அவள் பறந்து போனாளே’, ‘பார் மகளே பார்’, ‘நீரோடும் வைகையிலே’, ‘மதுரா நகரில் தமிழ் சங்கம்’ ஆகிய பாடல்கள் ஹிட்டாயின. 1963-ம் ஆண்டு ஜூலை 12-ல் வெளியான இந்தப் படம் வரவேற்பைப் பெற்றது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x