Published : 30 Jun 2025 08:28 AM
Last Updated : 30 Jun 2025 08:28 AM
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த படம், ‘டிராகன்’.
கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன், கே.எஸ்.ரவிகுமார், மிஷ்கின் உள்ளிட்டோர் நடித்து வெளியான இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் சார்பில் கல்பாத்தி அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ், கல்பாத்தி சுரேஷ் தயாரித்துள்ளனர். கிரியேட்டிவ் தயாரிப்பாளராக அர்ச்சனா கல்பாத்தி இருந்தார். இந்தப் படத்தின் நூறாவது நாள் விழா சென்னையில் நடந்தது. படக்குழுவினர் கலந்துகொண்டனர். படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
நடிகர் பிரதீப் ரங்கநாதன் பேசும் போது, “இயக்குநர் அஸ்வத்தும், நானும் நண்பர்கள் என்று தெரியும். அவர் 'ஓ மை கடவுளே' படத்தின் கதையை எழுதிக் கொண்டிருந்த போது ஒரு முறை என்னிடம், ‘இப்படி ஒரு கதாபாத்திரம் இருக்கிறது. அதில் நீ நடிக்கிறாயா?’ என கேட்டார். அதற்கு நான் ‘நடித்தால் ஹீரோவாகத் தான் நடிப்பேன்’ என்று பதிலளித்தேன்.
‘லவ் டுடே’ படத்தில் நடித்து முடித்த பிறகு, அஸ்வத்துக்குத் திரையிட்டு காண்பித்தேன். அப்போது அவரிடம் என்னை ஹீரோவாக வைத்து படம் இயக்குவாயா? எனக் கேட்டேன். காலம் கனியட்டும் என்றார். நாங்கள் இணைந்து பணியாற்ற சிறிது கால அவகாசம் ஆகும் என நினைத்தேன். ஆனால் அதை ஒரே படத்தில் சாதித்து காட்டியது ரசிகர்கள் தான்.
‘டிராகன்’ படத்தை இயக்கியதற்காக அஸ்வத் மாரிமுத்துவுக்கு மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நடித்தால் ஹீரோவாகத் தான் நடிப்பேன் என்று என் மீது நான் வைத்த குருட்டு நம்பிக்கை ரசிகர்களின் ஆதரவால் ஈடேறியது.
இந்த படத்தின் வெற்றிக்கு ஏஜிஎஸ் நிறுவனமும் காரணம். இந்த நிறுவனத்துடன் நான் இணைந்து பணியாற்றிய இரண்டாவது நூறு நாள் படம் இது. ‘லவ் டுடே’ படத்தின் வெற்றி மேஜிக் என்றார்கள். இதனால் மீண்டும் ஒரு வெற்றியை வழங்க வேண்டுமே என நினைத்தோம். இந்தத் தருணத்தில் தான் ‘டிராகன்’ அமைந்தது.
‘கோமாளி’, ‘லவ் டுடே’, ‘டிராகன்’ என என்னுடைய தொடர் மூன்றாவது நூறு நாள் திரைப்படம் இது. மகிழ்ச்சியாக இருக்கிறது. இதில் ‘டிராகன்’ படத்தின் வெற்றி முக்கியமானது. ஏனெனில் ‘கோமாளி’, ‘லவ் டுடே’ ஆகிய இரண்டு திரைப்படங்களின் வெற்றியின் காரணமாக ‘டிராகன்’ படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. இந்த வெற்றி மூலம் ரசிகர்கள் என்னை உயர்ந்த இடத்துக்கு அழைத்துச் சென்று இருக்கிறார்கள். அவர்களுக்கு என்றென்றும் நன்றி உள்ளவனாக இருப்பேன்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT