Published : 30 Jun 2025 07:13 AM
Last Updated : 30 Jun 2025 07:13 AM
மதுரையை சேர்ந்த ராம் என்கிற ராமச்சந்திரனுக்கு (விக்ரம் பிரபு), முப்பது வயதைத் தாண்டியும் திருமணம் நடக்கவில்லை. ஒரு காலத்தில் அவர் பல பெண்களை நிராகரித்த நிலையில் இப்போது அவரை பலர் நிராகரிக்கின்றனர்.
‘அவன் ராசிக்கு பெண்ணே கிடைக்காது’ என்று சொல்லப்படும் நிலையில் அவருக்கு வேறு ஊரில், வேறு சாதியில் அம்பிகா (சுஷ்மிதா பட்) என்ற பெண்ணை, தரகர் மூலம் பார்க்கிறார்கள். இதற்காக கோபிசெட்டிப்பாளையம் செல்கின்றனர், ராமின் குடும்பத்தினர். இந்த நேரத்தில் கரோனா பொது முடக்கம் அறிவிக்கப்படுகிறது. பெண் வீட்டிலேயே அவர்கள் சில வாரங்கள் தங்கி இருக்க வேண்டிய சூழல். இந்தக் காலக்கட்டத்தில் ராமின் உறவினர்களால் ஏற்படும் குழப்பத்தில் அவர் திருமணத்துக்குச் சிக்கல் ஏற்படுகிறது. அந்த சிக்கல் தீர்ந்ததா? ராமின் திருமணக் கனவு என்னவாகிறது என்பது கதை.
திருமண வயதைத் தாண்டியும் பெண் கிடைக்காமல் இருக்கும் ஒரு மணமகன், குடும்பத்திலும் சமூகத்திலும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை வைத்துக் கொண்டு ஒரு பீல் குட்' படத்தை காமெடியாக தர முயன்றிருக்கிறார், இயக்குநர் சண்முகபிரியன். அது முதல் பாதிவரை நன்றாக ‘ஒர்க் அவுட்’ ஆகி இருக்கிறது.
மற்றவர்கள் ஏதும் சொல்லிவிடுவார்கள் என்பதற்காகவே திருமணம் செய்து கொள்ள வேண்டுமா? என்று ஆரம்பித்து திருமணம் குறித்த விஷயங்களை இரண்டாம் பாதியில் சீரியஸாக பேசுகிறது படம். மணப்பெண்ணிடம் இருந்து ராமுக்கு வரும் மெசேஜ், அதன் பின்னுள்ள ட்விஸ்ட், அதுவே பிற்பகுதி கதை நகர்தலுக்கு லாஜிக்காக அமைவது என சின்ன சின்ன விஷயங்கள் ரசிக்க வைக்கின்றன. ஆனால், ஒட்டுமொத்தமாக எளிதில் கணிக்கக் கூடிய திரைக்கதையால் வேகமாக ஓட வேண்டிய படம் ஒரே இடத்தில் தங்கி விடுவதும் லாஜிக் இல்லாத காட்சிகளும் படத்தின் பெரும் குறை. பின் பகுதியில் வரும் ஆக்ஷன் காட்சி தேவையற்றத் திணிப்பு.
திருமணமாகாமல் இருக்கும் ஓர் இளைஞனின் உணர்வை, நடிப்பில் சிறப்பாகக் கொண்டு வந்திருக்கிறார், விக்ரம் பிரபு. மனதுக்குள் சோகத்தை வைத்துக்கொண்டு, அதிகம் பேசாத மணப்பெண்ணின் இயல்பை உடல் மொழி மூலம் சுஷ்மிதா பட் வெளிப்படுத்தி இருப்பது அழகு. அவர் தங்கையாக வரும் மீனாட்சி தினேஷ், அதிக வாய்ப்பில்லை என்றாலும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
சின்ன விஷயங்களைக் கூட பெரிதுபடுத்தியும், ‘எப்படா பிரச்சினையை இழுக்கலாம்’ என்கிற மனநிலையிலே வரும் அருள்தாஸ், மணமகனின் தந்தை கஜராஜ், நண்பன் ரமேஷ் திலக், மது போதைக்கு அலையும் சித்தன் மோகன் என துணைக் கதாபாத்திரங்களும் சிறந்த பங்களிப்பை கொடுத்திருக்கிறார்கள். சத்யராஜின் சிறப்பு தோற்றம் கதைக்கு எந்த விதத்திலும் உதவவில்லை.
ஷான் ரோல்டன் இசையில் பாடல்கள் வேகத்தடைதான் என்றாலும் பின்னணி இசை, கதையின் தன்மையை பார்வையாளர்களுக்கு சரியாகக் கடத்த உதவியிருக்கிறது. ஒரே வீடுதான் கதைக் களம். ஆனால் மதன் கிறிஸ்டோபரின் ஒளிப்பதிவும் முரளியின் கலை இயக்கமும் கண்களை உறுத்தாத காட்சிகளுக்கு உத்தரவாதம் தருகின்றன. டெக்னிக்கலாக சிறப்பாக இருந்தாலும் திரைக்கதையில் மெனக்கெட்டிருந்தால், இந்த ‘லவ் மேரேஜ்’ இன்னும் பிடித்திருக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT