Published : 28 Jun 2025 10:42 AM
Last Updated : 28 Jun 2025 10:42 AM
திருப்பூர் ஆயத்த ஆடை நிறுவனம் ஒன்றின் இடைநிலைத் தொழிலாளி சாந்தகுமார். பணியிடத்தில் மேலாளரால் ஏற்படும் அவமானம், மனைவியின் வசை, வீட்டு உரிமையாளர் போலீஸில் கொடுக்கும் புகார் உள்பட பல அழுத்தங்கள் அவரைத் தாக்குகின்றன. அவற்றிலிருந்து தப்பிக்க, மதுவை நாடும் அவர், நிலைகொள்ளாத போதையில் செய்யும் செயல்கள், அவரின் அன்றைய இரவில் பல எதிர் விளைவுகளைக் கொண்டு வருகின்றன. அந்த இரவு முடியும்போது அவர் என்னவாகிறார் என்பது கதை.
கதை என்பதை விட, ஒரு சாமானியனின் போதை இரவில் அவன் சந்திக்கும் மனிதர்கள், நிகழ்வுகள் வழியாக அவனது குணமும் வாழ்க்கையும் சுயசரிதைபோல் விரித்துக் காட்டப்படுவதுதான் படம். கதை சொல்லலில், நம்பகமான காட்சிகளுடன் கூடிய தேர்ச்சிமிக்க திரைக்கதை உத்திகளும், ஒளிப்பதிவில் இரவில் விழித்திருக்கும் திருப்பூர் நகரத்தின் உள்ளோடிய முகமும், இசையில் தன்னிலை உணரும் ஒருவனின் விடுதலைக்கான ஏக்கமும் இயல்பாக இருப்பதால், ஒரு யதார்த்த சினிமாவாக இப்படம் உயர்ந்துவிடுகிறது.
அறை நண்பனிடம், முதலாளியிடம், மேலாளரிடம், மனைவியிடம், வீட்டு உரிமையாளரிடம் தொடங்கி முன்பின் அறிந்திராதவர்கள் வரை சாந்தகுமாரின் தன்மானத்தைச் சுரண்டிப் பார்க்கும் துணைக் கதாபாத்திரங்களுடன் அவருக்கு அமைக்கப்பட்ட முரண் காட்சிகள் அனைத்துடனும் பார்வையாளர்கள் தொடர்புப்படுத்திக் கொள்ள முடியும்.
முதல் பாதியில் ஒரு போலீஸ் வாக்கி டாக்கி, நாயகனின் மனசாட்சியாக மட்டுமல்ல; காவலர்களின் மனக்குரலாகவும் மாறிவிடுவதில் தெறிக்கிறது அவல நகைச்சுவை! இரண்டாம் பாதியில் போதையை மீறிப் பயணிக்கும் சாந்தகுமாரின் குழந்தை தேடலும் ஓர் இறுதிச் சடங்கின் வழியாகக் கிடைக்கும் மீட்சியும் படம் சொல்லும் செய்தியைத் திணிப்பாக ஆக்கிவிடாமல் காப்பாற்றியிருக்கின்றன.
ஒளிப்பதிவு, இசை, படத்தொகுப்பு ஆகிய அம்சங்கள் இப்படத்துக்கு கலாபூர்வம் கூட்டியிருக்கிறது. முதன்மைக் கதாபாத்திரம் ஏற்றிருக்கும் பிருத்திவிராஜ் ராமலிங்கம் தவிர, மற்ற அத்தனை துணைக் கதாபாத்திரங்களுக்கும் தரமான நடிப்பைத் தரும் பிரபல முகங்களைத் தேர்வு செய்திருப்பது திரை அனுபவத்துக்கு வலிமையை கூட்டியிருக்கிறது. அதிலும் வேல.ராமமூர்த்தி, மைனா நந்தினி, வேல்முருகன், திருநங்கை ஜீவா, காளி வெங்கட், பக்ஸ், போஸ் வெங்கட் உள்பட பலரும் மனதில் ஆழமாகப் பதிந்து விடுகிறார்கள்.
முதன்மை கதாபாத்திரம் ஏற்றுள்ள பிருத்திவிராஜ் ராமலிங்கம் அளவான நடிப்பை தந்திருக்கிறார். அவரே தயாரித்திருக்கும் இந்தப் படத்தை முற்றிலும் தரமான திரை அனுபவமாகக் கொடுக்க முயன்று அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT