Published : 26 Jun 2025 11:55 AM
Last Updated : 26 Jun 2025 11:55 AM
‘வாடிவாசல்’ தள்ளிப்போனதற்கான காரணம் என்னவென்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருந்த படம் ‘வாடிவாசல்’. தாணு தயாரிக்கவிருந்த இப்படம் தாமதமானதால், வெங்கி அட்லுரி படத்துக்கு தேதிகள் ஒதுக்கிவிட்டார் சூர்யா. தற்போது ‘வாடிவாசல்’ எப்போது தொடங்கும் என்பதே தெரியாமல் இருக்கிறது. மேலும், வெற்றிமாறனோ சிம்பு நடிக்கும் படத்தினை தொடங்கிவிட்டார்.
இப்போது நடக்கும் விஷயங்களை வைத்து பார்த்தால், ‘வாடிவாசல்’ டிராப் செய்யப்பட்டதாகவே கருதப்படுகிறது. இது குறித்து விசாரித்தால், சூர்யா – வெற்றிமாறன் இருவரும் இணைந்து படம் பண்ணுவது குறித்து பேசியிருக்கிறார்கள். அப்போது சூர்யா தரப்பில் இருந்து முழுமையான கதையைக் கொடுத்துவிடவும் என்று சொல்லியிருக்கிறார்கள்.
இதற்கு வெற்றிமாறனோ நான் படப்பிடிப்பில் தான் இனிமேல் இந்தக் கதை எப்படி சென்றால் நன்றாக இருக்கும் உள்ளிட்ட விஷயங்களை முடிவு செய்வேன் என்று தெரிவித்திருக்கிறார். ஆனால், சூர்யாவோ எத்தனை நாட்கள் படப்பிடிப்பு, முழுமையான கதை இரண்டுமே முடிவான உடன் படம் பண்ணலாம் என்று திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார். இதற்கு வெற்றிமாறனும் அப்படியொன்றால் முழுமையான கதை என்னவென்று முடிவு செய்துவிட்டு வருகிறேன் என்று கூறிவிட்டார்.
தற்போது வெற்றிமாறனிடம் ‘வாடிவாசல்’ கதை கிட்டதட்ட 60% வரை இருக்கிறது. அதனை முழுமையாக முடித்து சூர்யாவிடம் கொடுக்க வேண்டும். அதே போல் ஒரே பார்ட்டில் மொத்த கதையினையும் சொல்லிவிட வேண்டும், 2 பாகங்கள் எல்லாம் வாய்ப்பில்லை என்பதையும் சூர்யா வெற்றிமாறனிடம் தெளிவாக எடுத்துரைத்துவிட்டார். ‘வாடிவாசல்’ கதையினை முழுமையாக வெற்றிமாறன் எழுதிக் கொடுத்தால் மட்டுமே, அடுத்தகட்டத்துக்கு நகரும். அதுவரை ‘வாடிவாசல்’ எப்போது தொடங்கும் என்ற கேள்விக்கு விடையில்லை என்கிறார்கள் திரையுலகில்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT