Published : 26 Jun 2025 07:21 AM
Last Updated : 26 Jun 2025 07:21 AM

இயக்குநரின் கலைஞராக இருக்கவே விருப்பம்: நிமிஷா சஜயன்

நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில், அதர்வா, நிமிஷா சஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம், ‘டிஎன்ஏ’. ஒலிம்பியா மூவிஸ் தயாரித்துள்ள இந்தப் படம் கடந்த 20-ம் தேதி வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. இதையடுத்து இதன் வெற்றிவிழா சென்னையில் நடந்தது. படக்குழுவினர் கலந்துகொண்டனர். நடிகை நிமிஷா சஜயன் பேசும்போது, “ஒரு திரைப்படம் வெளியாகும் போது, ஹிட் ஆகுமா, ஆகாதா? என்ற பதற்றம் இருந்து கொண்டிருக்கும். ஆனால் இந்தப் படத்துக்குக் கிடைத்த விமர்சனத்தால் படம் வெளியான தருணத்தில் பதற்றம் இல்லாமல் நிம்மதியாக உறங்கினேன். இயக்குநர் நெல்சன் ஃபோன் செய்து படம் வெற்றி என சொன்னபோது மகிழ்ச்சி அடைந்தேன். இந்தப் படத்தில் என்னுடைய நடிப்பு சிறந்ததாக இருக்கிறது என்று பாராட்டினால், அது இயக்குநரைத் தான் சாரும். அவர் சொல்லிக் கொடுத்ததைத் தான் செய்திருக்கிறேன்.‌ நான் எப்போதும் போல் இயக்குநரின் கலைஞராகத்தான் இருக்க விரும்புகிறேன்.

என் மீது நம்பிக்கை வைத்து திவ்யா கதாபாத்திரத்தை அளித்ததற்காக நன்றி. ஒவ்வொரு படத்திலிருந்தும் ஏதேனும் ஒரு விஷயத்தைக் கற்றுக் கொள்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் மனதுக்கு நெருக்கமாக இருந்த படங்களில் இதுவும் ஒன்று.‌ சக நடிகரான அதர்வா மிகுந்த திறமைசாலி. அர்ப்பணிப்பு உள்ளவர். படப்பிடிப்பு தளத்தில் அவருடைய ஒத்துழைப்பை மறக்க முடியாது. அவரின் ஆதரவு இல்லை என்றால் திவ்யா கதாபாத்திரம் இல்லை. இந்தப் படத்தில், பிறந்துநாற்பது நாட்களான குழந்தையை, நடிப்பதற்காக மனமுவந்து வழங்கிய அந்தக் குழந்தையின் பெற்றோர்களுக்கு நன்றி'' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x