Published : 25 Jun 2025 12:58 PM
Last Updated : 25 Jun 2025 12:58 PM
நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா, நிமிஷா சஜயன், பாலாஜி சக்திவேல், சுப்பிரமணிய சிவா, போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘DNA’. அம்பேத்குமார் தயாரிப்பில் உருவான இப்படத்தினை ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிட்டது. முதலில் வசூல் குறைவாக இருந்தாலும், மக்களிடையே வரவேற்பு பெற்றதால் நாளுக்கு நாள் வசூல் அதிகரித்தது.
இந்த வரவேற்புக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பத்திரிகையாளர்களை சந்தித்தது படக்குழு. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டனர்.
இதில் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் பேசும்போது, “தமிழ் சினிமாவின் தற்போதைய சூழலில் ஒரு படத்தின் வெற்றி என்பது ஒரு இயக்குநர் நல்ல படத்தை இயக்குவதில் மட்டுமில்லை. அந்தத் திரைப்படம் சரியான தேதியில் வெளியாக வேண்டும். இது இயக்குநர்களின் கைகளில் கிடையாது. அந்தத் திரைப்படத்திற்கு சரியான விளம்பரம் கிடைக்கப் பெற வேண்டும். அதுவும் இயக்குநர்களின் கைகளில் கிடையாது. அந்தத் திரைப்படம் விநியோகஸ்தர்களின் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். அதுவும் அந்த இயக்குநரின் கைகளில் கிடையாது. அதனைத் தொடர்ந்து அந்தப் படத்திற்காக போஸ்டர் ஒட்டுவது முதல் விளம்பரப்படுத்துவது வரை உழைப்புதான் வெற்றியை தீர்மானிக்கிறது.
அந்த வகையில் ஒரு படம் வெற்றி பெற வேண்டும் என்றால் பலர் ஒன்று கூட வேண்டியதிருக்கிறது. பலரின் ஒத்துழைப்பும், ஆதரவும் கிடைக்க வேண்டும். அந்த வகையில் இந்த படத்துக்கு கிடைத்த வெற்றிக்கு பின்னணியில் உழைத்த அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆனந்துக்கும், திவ்யாவுக்கும் இடையேயான கதை 2009-ஆம் ஆண்டில் இருந்து என்னிடம் இருக்கிறது. ஆனந்தும், திவ்யாவும் பெயர்தான் வேறு வேறு. ஆனால் இந்த கதாபாத்திரங்களை என்னுடைய வாழ்வில் சந்தித்திருக்கிறேன். அவர்களின் வலியை இதில் பதிவு செய்திருக்கிறேன். இவர்களின் வாழ்வில் திருமணம் என்பது நடைபெறுமா என என்னுடைய மனதில் எழுந்த கேள்விதான் இந்தப் படத்தின் கதையை எழுத தூண்டியது.
இதன் மூலம் ஒரு வலிமையான கதையை, ஒரு வலிமையான உணர்வுடன் இணைந்து சொல்லும்போது அதற்கு வெற்றி கிடைக்கிறது. இதனை இன்னும் 10 ஆண்டுகள் கழித்த பின்னர் சொன்னாலும் வெற்றியைப் பெறும். அதற்கான வரவேற்பும், அன்பும் மக்கள் அளிப்பார்கள் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. அந்த உண்மையான ஆனந்துக்கும், அந்த உண்மையான திவ்யாவுக்கும் இந்த திரைப்படத்தின் வெற்றியை சமர்ப்பிக்கிறேன்.
இந்தப் படம் உருவானதற்கு காரணமாக இருந்த சுரேஷ் சந்திரா, சந்தோஷ், ஒளிப்பதிவாளர் பார்த்திபன், படத் தொகுப்பாளர் சபு ஜோசப், எழுத்தாளர் அதிஷா, இசையமைப்பாளர்கள், பின்னணி இசையமைத்த ஜிப்ரான், ஒலி கலவை பொறியாளர் தபஸ் நாயக், இணை இயக்குநர் போன்ற தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், விஜி சந்திரசேகர், போஸ் வெங்கட், இயக்குநர் சுப்பிரமணிய சிவா, இயக்குநர் பாலாஜி சக்திவேல், ரமேஷ் திலக், அதர்வா முரளி, நிமிஷா சஜயன் என நடிகர், நடிகைகளுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்றைய சூழலில் ஒரு திரைப்படத்தை காண மக்களையும், ரசிகர்களையும் திரையரங்கத்திற்கு வரவழைக்க வேண்டும் என்றால், பல தரப்பினரும் இணைந்து பணியாற்ற வேண்டிய சூழல் இருக்கிறது. இதன் மூலம் நிறைய நல்ல சினிமாக்கள் வரவேண்டும். ஆரோக்கியமான சினிமா சூழல் உருவாக வேண்டும் என்ற இலக்குடன் தான் பயணிக்கிறோம்.
சினிமா மூலம் மக்களும் பயனடைய வேண்டும். அதில் பணியாற்றிய கலைஞர்களும் பயனடைய வேண்டும். அந்த வகையில் ஒரு திரைப்படத்தின் விமர்சனமும், பார்வையும் அமைய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். மேலும் படைப்பாளிகளும், விமர்சகர்களும் கைக்குலுக்கி, ஆரோக்கியமான சினிமா சூழலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முடியும் என்பது குறித்து மனம் திறந்து விவாதிக்க விரும்புகிறேன்” என்று பேசினார் நெல்சன் வெங்கடேசன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT