Last Updated : 25 Jun, 2025 12:23 PM

3  

Published : 25 Jun 2025 12:23 PM
Last Updated : 25 Jun 2025 12:23 PM

சாதியை வைத்துக்கொண்டு தமிழ் தேசியம் எப்படி சாத்தியமாகும்? - சத்யராஜ் கேள்வி

விருது விழாவில் சத்யராஜ்.

சென்னை: 'சாதியை வைத்துக்கொண்டு தமிழ் தேசியம் எப்படி சாத்தியமாகும். ஆணவக்கொலை எப்படி நடக்கிறது, ஒரு தமிழன் தான் இன்னொரு தமிழனை வெட்டுகிறான். அப்படியானால் சாதி ஒழியாமல் எப்படி தமிழ் தேசியம் மலரும். எனவே சாதி ஒழிப்பே தமிழ் தேசியம்' என நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.

ஆண்​டு​தோறும் சட்​டமேதை அம்​பேத்​கர் பிறந்​த​நாளை​யொட்​டி, சமூகம், அரசி​யல் உள்​ளிட்ட தளங்​களில் சிறப்பாக பணி​யாற்​றிய ஆளு​மை​களுக்கு விசிக சார்​பில் விருதுகள் வழங்​கப்​படு​கின்​றன. அந்த வகை​யில் இந்த ஆண்​டுக்​கான விருதுகள் வழங்​கும் விழா சென்​னை, கலை​வாணர் அரங்​கில் நேற்று நடை​பெற்​றது.

அதன்​படி, ஆந்​தி​ரா​வில் உள்ள திரா​விட பல்​கலைக்​கழக முன்​னாள் துணைவேந்​தர் கே.எஸ்​.சல​முக்கு ‘அம்​பேத்​கர் சுடர்’ விருது, நடிகர் சத்​ய​ராஜுக்கு ‘பெரி​யார் ஒளி’ விருது வழங்​கப்​பட்​டது. அதே​போல, புதுச்​சேரி முன்​னாள் முதல்வர் வெ.​வைத்​திலிங்​கத்​துக்கு ‘காம​ராசர் கதிர்’ விருது, பவுத்த ஆய்​வறிஞர் பா.ஜம்​புலிங்​கத்​துக்கு ‘அயோத்​தி​தாசர் ஆதவன்’ விருது, தமிழ் தேசிய விடு​தலை இயக்க பொதுச்​செய​லா​ளர் தியாகு​வுக்கு ‘மார்க்ஸ் மாமணி’ விருது, தமிழ்​நாடு ஜமா அத்​துல் உலமா சபை தலை​வர் பி.ஏ.​காஜா முயீனுத்​தீன் பாகவிக்கு ‘கா​யிதேமில்​லத் பிறை’ விருது, யாழ்ப்​பாண தமிழறிஞர் அ.சண்​முக​தாஸுக்கு ‘செம்​மொழி ஞாயிறு’ விருது ஆகியவை நேற்று வழங்கப்பட்​டன.

இந்த விழாவில் விருதினை பெற்றுக்கொண்டு பேசிய நடிகர் சத்யராஜ், “எனக்கு இருந்த மிகப்பெரிய குறை நீங்கிவிட்டது. திருமாவளவனிடமிருந்து ஏதாவது பெறவேண்டும் என பிளான் பண்ணிகிட்டிருந்தேன். பெரியார் படத்தில் நடித்ததற்கு சம்பளம் வேண்டாம் என சொல்லிவிட்டேன். சம்பளம் வாங்காமல் நடித்ததற்காக, அப்படத்தின் 100-வது நாள் விழாவில் ஆசிரியர் வீரமணி அவர்கள் பெரியார் அணிந்திருந்த மோதிரத்தை கருணாநிதியின் கையில் கொடுத்து எனக்கு அணிவித்தார்கள். அது இப்போதும் என் விரலில் உள்ளது.

அதேபோல, எம்ஜிஆரை நான் சந்தித்தபோது, என்னிடம் என்ன வேண்டும் எனக் கேட்டார். அவர் உடற்பயிற்சி செய்யும் டம்பிள்ஸ் வேண்டுமென சொன்னேன். அவர் சிரித்துக்கொண்டே ஏதாவது பெரிதாக கேள் என்றார். எனக்கு பெரிதாக எதுவும் கேட்கத் தெரியாது என்று நான் சொன்னேன். பின்னர் எனக்கு ஒரு கர்லா கட்டையை அவர் கொடுத்தார்.

இன்று அன்புத் தம்பி திருமாவளவனிடம் இருந்து ரூ.50 ஆயிரத்துக்கு காசோலை வாங்கிவிட்டேன். இதனை பணமாக மாற்றி 49,500 ரூபாயை விசிக சார்பில் நன்றாக படிக்கும் மாணவர்களுக்கு வழங்குவேன். ஒரு 500 ரூபாயை மட்டும் பிரேம் போட்டு வீட்டில் வைத்துக்கொள்வேன். இனி ஒவ்வொரு ஆண்டும் அம்பேத்கர் பிறந்தநாளில் 50 ஆயிரம் ரூபாய் மாணவர்களுக்கு உதவி செய்வேன்.

நமக்கு கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது ஒரு பிரச்சினையே இல்லை. நமக்கு பிரச்சினையே சாதிதான், சாதி ஒழிப்பே தமிழ் தேசியம். சாதியை வைத்துக்கொண்டு தமிழ் தேசியம் எப்படி சாத்தியமாகும். ஆணவக்கொலை எப்படி நடக்கிறது, ஜப்பானில் இருந்து வந்தா இங்கே வெட்டுகிறான் அல்லது சீனாக்காரன் வந்து வெட்டுகிறானா?. ஒரு தமிழன் தான் இன்னொரு தமிழனை வெட்டுகிறான். அப்படியானால் சாதி ஒழியாமல் எப்படி தமிழ் தேசியம் மலரும். எனவே சாதி ஒழிப்பே தமிழ் தேசியம். சாதியை வைத்துக்கொண்டு அடங்கு என்று சொன்னால், அடங்க மறுப்போம் அத்துமீறுவோம்.

உலகில் மெஜாரிட்டி நாம்தான். வானமும் நீலம், கடலும் நீலம். யாராக இருந்தாலும் இனி நீலத்தை அரவணைத்துதான் செல்லவேண்டும். அதனால் தான் எங்கு பார்த்தாலும் அம்பேத்கர், அம்பேத்கர் என்று தோள் மீது கைபோடும் நிலைமை வந்துவிட்டது. ஆனால் எதற்காக தோள்மீது கைபோடுகிறார்கள் என்ற கவனம் நமக்கு இருக்க வேண்டும்.

1990களில் விசிகவை மதுரையில் தோற்றுவித்தபோது, பெரியாரின் படத்தை போட்டு பெரியாரிஸ்டுகளையும், அம்பேத்கரிஸ்டுகளை ஒருங்கிணைத்தது திருமாவளவன்தான். ஏனென்றால் இனிமேல் அந்த பிரிவினை இருக்கவே கூடாது. மார்க்ஸ் மகாராஷ்டிராவில் பிறந்திருந்தால் அம்பேத்கராக இருந்திருப்பார். அம்பேத்கர் ஈரோட்டில் பிறந்திருந்தால் பெரியாராக இருந்திருப்பார். பெரியார் ஜெர்மனியில் பிறந்திருந்தால் மார்க்ஸாக இருந்திருப்பார். சூழ்நிலைதான் இந்த தலைவர்களை உருவாக்குகிறது.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலிருந்து திருமாவளவன் பற்றி ஒரு புத்தகம் வெளியிட்டுள்ளார்கள். இவரை ஏன் நாம் வாழும் அம்பேத்கர் என சொல்லக்கூடாது. என்னை வழிநடத்தும் ஆசிரியர்களாக திருமாவளவன் மட்டுமல்ல, விசிகவின் தம்பிகள் அனைவரும் உள்ளனர். பெரியாருக்கு சாதி ஒழிய வேண்டும் என்பதே நோக்கம். அதற்கு தடையாக இருக்கும் கடவுள் என்ற கற்பனை கருத்தியலை அவர் மறுக்கிறார்.

எனவே, எங்களை ஏமாற்றுவதாக நினைத்து நீங்கள் ஏமாற வேண்டாம். ஏதோ முருகனுக்கு ஒரு விழா நடத்தி இவர்களை ஏமாற்றிவிட்டோம் என நீங்கள் நினைக்க வேண்டாம். எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. அப்படியே பார்த்தாலும் முருகன் எங்க ஆளு. அவர் அமைதியாக நின்றுகொண்டே ஆப்பு வைத்துவிடுவார். நீங்கள் அவர் பெயரில் எங்களுக்கு ஆப்பு வைக்கலாம் என நினைக்காதீர்கள்.

தமிழ்நாடு இன்று இந்த அளவுக்கு முன்னேறி இருப்பதற்கு காரணம் பெரியார், அம்பேத்கரின் சிந்தனைகள்தான். பெரியார் படத்தில் நானே ஒரு வசனம் பேசினேன். ‘பொருளாதாரத்தில் என் பாலிசி கம்யூனிசம் தான். ஆனால் ஏழை பணக்காரர் வித்தியாசம் ஒழிய வேண்டுமா அல்லது சாதி ஏற்றத்தாழ்வு ஒழியவேண்டுமா எனக் கேட்டால், முதலில் சாதி ஒழிய வேண்டுமென்றே சொல்வேன். ஏனென்றால் ஒரு சரியான வாய்ப்பு கிடைத்தால் ஒரு ஏழை பணக்காரன் ஆகி விடுவான். ஆனால் என்னதான் வாய்ப்பு கிடைத்து பணக்காரன் ஆனாலும், தாழ்ந்த சாதி என முத்திரை குத்தப்பட்டதை ஒழிக்க முடியாது’ என்று அவர் சொல்வார். அதுபோல என்னதான் தாழ்த்தப்பட்டவர் குடியரசுத் தலைவரே ஆனாலும், கோயிலுக்கு வெளியில்தான் உட்கார வேண்டும், நாடாளுமன்றத்துக்குள் பூஜை செய்யும் போது வரமுடியாது, இதை பெரியார் சொல்லவில்லை. இது லேட்டஸ்டாக நடந்த விஷயம். இந்த விருதுக்கு திருமாவளவனுக்கும், விசிகவுக்கும் நன்றி கூறுகிறேன்” என்றார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x