Last Updated : 24 Jun, 2025 02:51 PM

2  

Published : 24 Jun 2025 02:51 PM
Last Updated : 24 Jun 2025 02:51 PM

’நான் தவறு செய்துவிட்டேன்’ - நீதிமன்றத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் வாக்குமூலம்

சென்னை: ‘போதைப்பொருள் பயன்படுத்தி தவறு செய்துவிட்டேன். வெளிநாடு எதற்கும் செல்ல மாட்டேன், வழக்கு விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பேன்’ என போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகர் ஸ்ரீகாந்த் தனது ஜாமீன் மனுவில் தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைதான நடிகர் ஸ்ரீகாந்தை நேற்றிரவு எழும்பூர் பெருநகர குற்றவியல் 14-வது நீதிமன்ற நடுவர் முன்பு போலீஸார் ஆஜர்படுத்தினர். அப்போது, போதைப் பொருளை யாருக்கும் விற்பனை செய்யவில்லை எனவும், தான் மட்டுமே பயன்படுத்தியதாகவும் நீதிபதியிடம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேலும், போதைப்பொருளை பயன்படுத்தி தவறு செய்துவிட்டதாகவும், தனது மகனை கவனித்துக் கொள்ள வேண்டும் எனவும், குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகமாக இருக்கிறது எனவும் கூறி நடிகர் ஸ்ரீகாந்த் ஜாமீன் கேட்டுள்ளார். இதனை ஏற்க மறுத்த நீதிபதி, போதைப் பொருள் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் ஜாமீன் மனுவை தாக்கல் செய்ய அறிவுறுத்தினார். நடிகர் ஸ்ரீகாந்துக்கு ஜூலை 7-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. அவர் முதல் வகுப்பு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து அவர் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனுவில், ‘போதைப்பொருள் பயன்படுத்தி தவறு செய்துவிட்டேன். உடல்நிலை சரியில்லாத மகனை கவனித்துக் கொள்ள வேண்டும். குடும்பத்தில் பல பிரச்சினைகள் உள்ளன. நான் கண்டிப்பாக அவர்களுடன் இருந்தாக வேண்டும். வெளிநாடு எதற்கும் செல்ல மாட்டேன், வழக்கு விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீகாந்த் சிக்கியது எப்படி? - கடந்த 17-ம் தேதி இரவு சந்தேகத்தின்பேரில் இளைஞர் ஒருவரை பிடித்து நுங்கம்பாக்கம் போலீஸார் விசாரித்தனர். அவர் வைத்திருந்த பையில் 11 கிராம் போதைப் பொருள் இருந்தது தெரியவந்தது. அதை பறிமுதல் செய்த போலீஸார், இதை வைத்திருந்த சேலம் மாவட்டம், சங்ககிரியைச் சேர்ந்த பிரதீப் குமார் என்ற பிரடோவை (38) கைது செய்தனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணை அடிப்படையில், அவருக்கு போதைப்பொருள் விநியோகித்ததாக மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவைச் சேர்ந்த ஜான் (38) என்பவரை ஓசூரில் கடந்த 18-ம் தேதி கைது செய்தனர். அவரை சென்னை அழைத்து வந்து நடத்தப்பட்ட விசாரணையில், அவர் யாருக்கெல்லாம் போதைப்பொருளை விநியோகம் செய்தார் என்ற பட்டியலை கொடுத்தார். அந்த பட்டியலில் தமிழ் நடிகர் ஸ்ரீகாந்தும் இடம்பெற்றிருந்தார்.

இதையடுத்து நுங்கம்பாக்கம் போலீஸார் ஸ்ரீகாந்தை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டிலிருந்து நேற்று, நுங்கம்பாக்கம் காவல் நிலையத்துக்கு வரவழைத்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின்போது, தான் போதைப்பொருளை பயன்படுத்தியது கிடையாது என்று ஸ்ரீகாந்த் வாதம் செய்துள்ளார். இருப்பினும் அவரது வீட்டில் போலீஸார் சோதனை நடத்தினர். ஆனால், எதுவும் சிக்கவில்லை.

இதையடுத்து ஸ்ரீகாந்தின் ரத்த மாதிரி பரிசோதிக்கப்பட்டது. இதில் அவர் போதைப்பொருள் பயன்படுத்தி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வகை போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தால் 45 நாட்கள் வரை இந்த பரிசோதனையில் கண்டறியலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து ஸ்ரீகாந்தை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஸ்ரீகாந்த் மட்டும் அல்லாமல் திரை பிரபலங்கள் பலரும் போதைப் பொருளை பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதுகுறித்தும் போலீஸார் விசாரணையில் இறங்கி உள்ளனர்.

2002-ம் ஆண்டு வெளியான ‘ரோஜாக்கூட்டம்' திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான ஸ்ரீகாந்த், அடுத்தடுத்து ஏப்ரல் மாதத்தில், மனசெல்லாம், பார்த்திபன் கனவு, பம்பர கண்ணாலே, நண்பன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார். தற்போது போதைப்பொருள் விவகாரத்தில் சிக்கி அவர் கைது செய்யப்பட்டிருப்பது, அவரது ரசிகர்கள் மட்டும் அல்லாமல் சினிமா வட்டாரத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x