Published : 23 Jun 2025 10:24 PM
Last Updated : 23 Jun 2025 10:24 PM
சென்னை: தற்போதைய வேகமான ஓட்டத்தில் கடவுளையும், பக்தியையும் பலரும் மறந்து விடுகிறார்கள். எனவே கலை மூலமாகவும், திரைப்படம் மூலமாகவும் மக்களிடம் பக்தியை பற்றி சொல்ல வேண்டியது அவசியம் என்று நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
முகேஷ் குமார் சிங் இயக்கத்தில், விஷ்ணு மஞ்சு நடித்துள்ள படம் ‘கண்ணப்பா’. இதில் பிரபாஸ், மோகன்லால், சரத்குமார், மோகன் பாபு, அக்ஷய் குமார், காஜல் அகர்வால், ப்ரிட்டீ முகுந்தன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் வரும் ஜூன் 27ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வு இன்று நடைபெற்றது.
இதில் நடிகர் சரத்குமார் பேசியதாவது: “‘கண்ணப்பா’ மக்கள் தெரிந்துக் கொண்டு புரிந்துக் கொள்ள வேண்டிய படமாக இருக்கும். தற்போதைய தலைமுறைகளுக்கு நாம் பல கதைகளை சொல்ல மறந்துவிடுகிறோம். பொன்னியின் செல்வன் கதை மூத்தவர்களுக்கு தெரியும். ஆனால் இளைய தலைமுறைகளுக்கும் அது தெரிய வேண்டும் என்று தான் மணிரத்னம் அதை படமாக எடுத்திருக்கிறார். அதேபோல் தான், கண்ணப்பா கதையும் இளைய தலைமுறையினருக்கு தெரிய வேண்டும் என்று இதற்கு முன்பு பலரும் சொல்லி இருக்கிறார்கள். ஆனால், இதை விஷ்ணு தனது கோணத்தில், சிவபக்தரான கண்ணப்பா அதற்கு முன் எப்படி இருந்தார், அவரது வாழ்க்கை எப்படி இருந்தது என்பதையும் சொல்லியிருக்கிறார்.
அது சிறிய கதையாக இருந்தாலும் கூட, விஷ்ணு கோணத்தில் அது மிக சிறப்பாக வந்திருக்கிறது. அதை அவர் சாதாரணமாகவும் சொல்லவில்லை, பல ஆராய்ச்சிகள் செய்து, கடினமான உழைப்பை செலுத்தி எடுத்திருக்கிறார். அவரது உழைப்புக்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்க வேண்டும்.
கண்ணப்பாவின் கதை இந்தியாவை கடந்து உலகம் முழுவதும் சென்றடைய வேண்டும் என்றால் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். இன்று எவ்வளவு பேருக்கு பக்தி இருக்கிறது என்று தெரியவில்லை. தினமும் கோயிலுக்கு போகாமல் இருக்கலாம். ஆனால் பிரச்சினை வந்தால் நிச்சயம் கோயிலுக்கு செல்வோம். இறைவன் இருக்கிறார் என்பதை மேலும் மேலும் சொல்லி, அதிலும் சிவபக்தியை பற்றி சொல்லி, பக்தி எவ்வளவு முக்கியம் என்பதை சிறப்பாக இப்படத்தில் சொல்லியிருக்கிறார்கள். கடவுள் இருக்கிறார் என்பதை, அது ஏசுவாக இருக்கலாம், அல்லாவாக இருக்கலாம், ஆனால் கடவுள் இருக்கிறார், என்பதை சொல்ல வேண்டும். தற்போதைய வேகமான ஓட்டத்தில் கடவுளையும், பக்தியையும் மறந்து விடுகிறார்கள்.
எனவே கலை மூலமாகவும், திரைப்படம் மூலமாகவும் மக்களிடம் பக்தி பற்றி சொல்ல வேண்டியது அவசியம். அந்த வகையில், ‘கண்ணப்பா’ படத்தை பார்க்கும் போது இப்படி ஒரு சிவபக்தர் இருந்தார் என்பதை மக்கள் அறிந்துக் கொள்வார்கள். பக்தி என்பது அவர் அவர் மனதில் தோன்றுவது தான், அந்த பக்தி பரவசத்தோடு இருக்க வேண்டும் என்று சொல்லக்கூடிய படம் தான் ‘கண்ணப்பா’” இவ்வாறு சரத்குமார் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT