Published : 23 Jun 2025 08:52 AM
Last Updated : 23 Jun 2025 08:52 AM

‘மாடி வீட்டு மாப்பிள்ளை’: ரவிச்சந்திரன் ஜெயலலிதாவின் காமெடி திரைப்படம்!

தெலுங்கில் அக்கினேனி நாகேஸ்வர ராவ், ஜமுனா நடித்து சூப்பர் ஹிட்டான காமெடி படம், ‘இல்லரிகம்’. டி.பிரகாஷ் ராவ் இயக்கிய இந்தப் படம் 1959-ம் ஆண்டு வெளியாகி அங்கு சூப்பர் ஹிட்டானது. இதே கதையை 1961-ம் ஆண்டு ‘சாசுரல்’ என்ற பெயரில் எல்.வி.பிரசாத் இந்தியில் தயாரித்தார். டி.பிரகாஷ் ராவ் இயக்கிய இதில், ராஜேந்திர குமாரும் சரோஜா தேவியும் நடித்தனர். சரோஜாதேவிக்கு இது 2-வது இந்திப் படம்.

பின்னர், இயக்குநர் எஸ்.கே.ஏ.சாரி, ‘மனே அளியா’ என்ற பெயரில் 1964-ம் ஆண்டு கன்னடத்தில் ரீமேக் செய்தார். கல்யாண் குமார், ஜெயலலிதா நடித்தனர். அங்கும் வரவேற்பைப் பெற்றதை அடுத்து, 1966-ம் ஆண்டு மலையாளத்தில் ‘களிதோழன்’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. எம்.கிருஷ்ணன் நாயர் இயக்க, பிரேம் நஸிர், ஷீலா நடித்தனர். ஹிட்.

இதையடுத்து தமிழில் ‘மாடி வீட்டு மாப்பிள்ளை’ என்ற பெயரில் ரீமேக் செய்தனர். ரவிச்சந்திரன் மற்றும் ஜெயலலிதா ஜோடியாக நடித்தனர். கன்னட படத்தை இயக்கிய எஸ்.கே.ஏ.சாரி தமிழிலும் இயக்கினார். நாகேஷ், ரமாபிரபா, வி.கே.ராமசாமி, பாலாஜி, டி.எஸ்.முத்தையா, மேஜர் சுந்தர்ராஜன், உதய சந்திரிகா, பி.கே.சரஸ்வதி உள்பட பலர் நடித்தனர்.

பணக்கார தம்பதிகளான மேஜர் சுந்தர்ராஜன், பி.கே.சரஸ்வதியின் மகள் மீனா (ஜெயலலிதா). அவர், தன்னுடன் படிக்கும் ஏழை கல்லூரி மாணவரான சோமுவை (ரவிச்சந்திரன்) காதலிக்கிறார். இது அம்மாவுக்குப் பிடிக்கவில்லை என்றாலும் அப்பாவின் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்கிறார். மீனாவின் வீட்டிலேயே, வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்கிறார். மாப்பிள்ளையைப் பிடிக்காத மாமியார், மருமகனை அவமானப்படுத்துகிறார். இதற்கிடையே அவர் உறவினர் மகனான பாலாஜி, மேஜரின் சொத்துகளைக் கைப்பற்றத் திட்டம் போடுகிறார். இதனால் குடும்பத்துக்குள் சிக்கலை ஏற்படுத்துகிறார். ஒரு கட்டத்தில் ஜெயலலிதாவுக்கும் ரவிச்சந்திரனுக்கும் பிரிவு ஏற்பட்ட பிறகு குடும்பம் எப்படி ஒன்று சேர்கிறது என்பது படம்.

காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்ட படம் இது. ஏ.எல்.நாராயணன் வசனத்தையும் கண்ணதாசன் பாடல்களையும் எழுதினர். டி.சலபதி ராவ் இசை அமைத்தார். தெலுங்கில் ஏராளமான படங்களுக்கு இசை அமைத்துள்ள இவர், தமிழில் மீண்ட சொர்க்கம், அன்பு மகன், புனர்ஜென்மம் என சில படங்களுக்கு இசை அமைத்திருக்கிறார். பிரசாத் ஆர்ட் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படத்தில் ரவிச்சந்திரன் ரவுடியாகவும் சில காட்சிகளில் வருவார். அந்த வேடம் அவருக்கு அப்படியே பொருந்தியதாக அப்போது பத்திரிகைகள் எழுதின. ஜெயலலிதா நடிப்பிலும் நடனத்திலும் மிரட்டியிருந்தார். கஞ்ச பிரபுவான வி.கே.ராமசாமிக்கும் அவர் மகளைக் கட்டிய நாகேஷுக்குமான காட்சிகள் ரசிகர்களை மொத்தமாகச் சிரிக்க வைத்தன.

1967-ம் ஆண்டு இதே தேதியில் வெளியான இந்தப் படத்தில், ரவிச்சந்திரனுக்கும் ஜெயலலிதாவுக்குமான போட்டி பாடல் ‘கேட்டுப் பார் கேள்விகள் நூறு’, ’நெஞ்சுக்கு முகமே கண்ணாடி’, ‘என்னை மன்னிக்க வேண்டும்’, நாகேஷ் ஆடி பாடும் ‘மாடி வீட்டு மாப்பிள்ளை’ என்பது உள்பட பாடல்கள் வரவேற்பைப் பெற்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x