Published : 22 Jun 2025 11:29 PM
Last Updated : 22 Jun 2025 11:29 PM
குடிக்குப் பின்னால் இருக்கும் சமூக உளவியல், பொருளாதார வேர்கள் என்னவென்று கேட்கும் படம் ‘குட் டே’ என்று இயக்குநர் ராஜுமுருகன் தெரிவித்துள்ளார்.
அரவிந்தன் இயக்கத்தில் பிரித்திவிராஜ் ராமலிங்கம், காளி வெங்கட், மைனா நந்தினி, பக்ஸ், வேல ராமமூர்த்தி, போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘குட் டே’. ஜூன் 27-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் ராஜுமுருகன் மற்றும் பாலாஜி தரணிதரன் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
இந்த விழாவில் இயக்குநர் ராஜுமுருகன் பேசும்போது, “இந்தப் படம், ஒரு குடிகாரனின் வாழ்க்கையை கொண்டாடுவதற்காக செய்யவில்லை. குடிக்குப் பின்னால் இருக்கும் சமூக உளவியல், பொருளாதார வேர்கள் என்னவென்று கேட்கும் படம். எனக்கும் அந்த அனுபவம் இருந்ததால்தான் இதன் அழுத்தம் புரிகிறது. நாகராஜனுடைய ஒரு சிறுகதையை படித்த மாதிரி, வைக்கம் பஷீருடைய அந்த உலகத்துக்குள்ள போய்விட்டு வந்த மாதிரி ஒர் உணர்வை இந்தப் படம் கொடுத்தது.
போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் என்பது தவிர்க்க முடியாத சமூக அழுத்தங்களால் உருவாகிறது. இந்த படம் அந்த உண்மையை மிக அழகாகச் சொல்கிறது. படம் பார்ப்பவர்களில் ஒரே ஒரு இதயத்தையாவது மாற்றக்கூடிய படம்தான் பெரிய படம். இந்தப் படமும் அந்த வகையிலான படம்தான். கார்த்திக் நேதா ஒரு அழகான கவிஞர். கோவிந்த வசந்தா இசை படம் முழுக்க ஆன்மாவாக இயங்குகிறது. இந்தப் படத்தில் பணியாற்றிய எல்லோரும் மிகச் சிறந்த பணியைச் செய்திருக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார் ராஜுமுருகன்.
‘குட் டே’ படத்தின் திரைக்கதை மற்றும் வசனம் எழுதியிருக்கிறார் பூர்ணா ஜே.எஸ் மைக்கேல். ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் பணிகளை மதன்குணதேவ் செய்துள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைக்க, பாடல்கள் மற்றும் கூடுதல் வசனத்தைப் பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா எழுதியுள்ளார். இப்படத்தின் தமிழக உரிமையினைக் கைப்பற்றி ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT