Published : 21 Jun 2025 02:05 PM
Last Updated : 21 Jun 2025 02:05 PM
காதல் தோல்வியில் போதைக்கு அடிமையாகி குடும்பத்தினரால் வெறுக்கப்படுகிறார் ஆனந்த் (அதரவா). இன்னொருபக்கம் பார்டர்லைன் பெர்சனாலிட்டி டிசார்டர் என்ற மனநலம் தொடர்பான பிரச்சினையில் இருக்கும் திவ்யா (நிமிஷா சஜயன்). போதைப் பழக்கத்திலிருந்து மீளும் ஆனந்துக்கும், திவ்யாவுக்கும் திருமணம் ஆகி அவர்களது வாழ்க்கை மகிழ்ச்சியுடன் செல்கிறது. இருவருக்கும் குழந்தை பிறந்த முதல் நாளிலேயே மருத்துவமனையில் அந்த குழந்தை மாற்றப்படுகிறது.
மற்ற யாருக்கும் அதுகுறித்து தெரியாத நிலையில், அது தன் குழந்தை இல்லை என்று சரியாக கண்டுபிடித்து சொல்கிறார் திவ்யா. அதன் பிறகு தன் குழந்தையை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார் ஹீரோ. குழந்தை கிடைத்ததா? அவர்களிடம் இருக்கும் குழந்தை யாருடையது போன்ற கேள்விகளுக்கு விறுவிறுப்பாகவும், உணர்வுபூர்வமாகவும் பதில் சொல்கிறது ‘டிஎன்ஏ’.
தனது ‘ஃபர்ஹானா’ திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறாத நிலையில், அடுத்ததாக ஒரு மிக முக்கிய பிரச்சினையை கையில் எடுத்துக் கொண்டு அதை விறுவிறுப்பான திரைக்கதையையும், நல்ல நடிகர்களையும் கொண்டு முடிந்த அளவு நேர்த்தியாக சொல்லி இருக்கிறார் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன். அவருடைய ‘ஒருநாள் கூத்து’, ‘மான்ஸ்டர்’ படங்களைப் போலவே நிச்சயம் இதுவும் அவரது பேர் சொல்லும் படமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
படத்தின் தொடக்கத்தில் காட்டப்படும் ஒரு விபத்து, அதைத் தொடர்ந்து வரும் ஹீரோ அறிமுகம், அவருடைய பின்னணி, ஹீரோயினின் பிரச்சினை என ஆரம்ப காட்சிகள் படமாக்கப்பட்ட விதம் மிகச் சிறப்பு. குறிப்பாக அதர்வா, நிமிஷா திருமணம் நடைபெறும் நேரத்தில் நிமிஷாவுக்கு இருக்கும் பிரச்சினை பற்றி ஹீரோ குடும்பத்துக்கு தெரியவரும்போது நடக்கும் காட்சிகளை உதாரணமாக சொல்லலாம். படத்தின் பலமே அதன் உணர்வுபூர்வ காட்சிகள்தான். சின்ன சின்ன இடங்களில் கூட இதயத்தை தொடும் தருணங்கள் நிரம்பியிருக்கின்றன.
படத்தின் பிரச்சினை இரண்டாம் பாதியில், குறிப்பாக படம் க்ரைம் இன்வெஸ்டிகேஷன் பாணிக்கு மாறும்போது தொடங்குகிறது. புகார் கொடுக்கும் ஹீரோவை விசாரணைக்கு போகும் இடமெல்லாம் போலீஸார் அழைத்துச் செல்வது மட்டுமின்றி, ஹீரோவை விசாரிக்க விட்டு ஒரு ஓரமாக நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது எல்லாம் படு அபத்தம். ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் தொடங்கி, எஸ்ஐ, கான்ஸ்டபிள் வரை ஹீரோ இழுத்த இழுப்புக்கு எல்லாம் வருவதாக காட்டியது நம்பும்படி இல்லை.
ஹீரோவும், போலீஸ்காரரான பாலாஜி சக்திவேலும் ஒரு நரபலியை சென்று தடுப்பதாக வரும் காட்சியெல்லாம் முழுக்க முழுக்க ஹீரோயிசத்துக்காக மட்டுமே வைக்கப்பட்டுள்ளது. இது போல படத்தில் பல சமரசங்கள்.
குறிப்பாக இரண்டாம் பாதியில், மெயின் வில்லனை சஸ்பென்ஸாக வைத்திருக்கிறேன் என்ற பெயரில் எங்கெங்கோ சுற்றுகிறது திரைக்கதை. இதில் காயத்ரி ஆடும் ஒரு ஐட்டம் சாங் வேறு. ஆனால் படத்தின் கடைசி 20 நிமிடங்களில், விட்டதை பிடிக்கும் வகையில் ஒரு நேர்த்தியான க்ளைமாக்ஸை அமைத்துள்ளனர். ஆடியன்ஸின் கைதட்டலை பெறும் தியேட்டர் தருணங்கள் இதில் உண்டு.
அதர்வாவுக்கு நீண்ட இடைவெளிக்குப் பிறகு பேர் சொல்லும் கேரக்டர். அதை கச்சிதமாக பற்றிப் பிடித்து ஸ்கோர் செய்துள்ளார். காதல் தோல்வியில் முரட்டுத் தனமாக நடந்து கொள்வதாகட்டும், குழந்தையை பிரிந்து தவிக்கும் நிமிஷாவை கட்டிக் கொண்டு அழும் ஒரு காட்சி ஆகட்டும், சிறப்பான நடிப்பை வழங்கி இருக்கிறார்.
நிமிஷா சஜயனின் நடிப்பும் இந்தப் படத்துக்கு இன்னொரு பக்க பலம். வேறு யாரேனும் ஓவர் ஆக்டிங் நடிகை இதில் நடித்திருந்தால் நிச்சயம் முதலுக்கே மோசமாகியிருக்கும். இரண்டாம் பாதியிலும் நிமிஷாவுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம். க்ளைமாக்ஸ் காட்சியில் கலக்கி இருக்கிறார். சில காட்சிகளில் மட்டும் வந்தாலும் சேத்தன், விஜி சந்திரசேகர், ரமேஷ் திலக், குழந்தைகளை திருடும் பாட்டி உள்ளிட்டோர் நல்ல நடிப்பை தந்துள்ளனர்.
ஜிப்ரானின் பின்னணி இசை சிறப்பு. பாடல்கள் நினைவில் இல்லை. ஒரு த்ரில்லர் படத்துக்கு தேவையான சிறப்பான ஒளிப்பதிவை செய்திருக்கிறார் பார்த்திபன். மிகவும் வீக் ஆன வில்லன் கதாபாத்திரம் படத்தின் மைனஸ்.
என்னதான் த்ரில்லர் பாணியில் விறுவிறுப்பாக கொண்டு சென்றாலும் மெயின் வில்லன் இன்ட்ரோவுக்கு பிறகு அதை நியாயம் செய்யும் வகையிலான காட்சிகள் இல்லை. வில்லனின் பார்வையில் சொல்லப்படுவதாக தடுப்பூசி தவறு என்ற ஒரு ஆபத்தான கருத்து போகிற போக்கில் முன்வைக்கப்படுகிறது. அது வில்லனின் பார்வையா? அல்லது இயக்குநரின் பார்வையா என்று தெரியவில்லை.
ஒரு சில லாஜிக் மீறல்கள் உள்ளிட்ட குறைகள் இருந்தாலும் குழந்தை கடத்தல், அதன் பின்னணி போன்றவற்றை விறுவிறுப்பாகவும், மிக முக்கியமாக உணர்வுபூர்வமான தருணங்களைக் கொண்டும் சொன்ன வகையில் ‘டிஎன்ஏ’வை மனதார வரவேற்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT