Published : 21 Jun 2025 08:06 AM
Last Updated : 21 Jun 2025 08:06 AM

உதயணன் வாசவதத்​தா: பாகவதர் சிறை சென்றதால் மாறிய ஹீரோ

உமா பிக்​சர்ஸ் மூலம் படங்​கள் தயாரித்து வந்த ஆர்​.எம்​.ராம​நாதன் செட்​டி​யார், தியாக​ராஜ பாகவதரின் நெருங்​கிய நண்​பர். சென்​னை​யில் இருந்த நியூடோன் ஸ்டூடியோ​வின் நிறு​வனர்​களில் ஒரு​வ​ராக​வும் இருந்த அவருக்​கு, ‘ஆடியோகி​ராஃபி’​யில் தீவிர ஆர்​வம். அதனால் தனது நிறு​வனம் மூலம் தயாரித்த பெரும்​பாலான படங்​களில் ‘ரெக்​கார்​டிஸ்​டா’க​வும் பணி​யாற்​றி​னார். அவர் தயாரித்த ‘உதயணன் வாசவதத்​தா’ படத்​தி​லும் அப்​படித்​தான்.

இது புராணம் கலந்த கற்​பனை கதை. உத்தர பிரதேசத்​தில் கங்கை மற்​றும் யமுனை ஆற்​றின் அரு​கில் அமைந்​திருந்த வச்த நாட்டை ஆண்​ட​வன், உதயணன். இன்​றைய கோசாம்​பி​தான் அதன் தலைநகர். வீணை வாசிப்​ப​தில் திறமை​யானவ​னான உதயணனின் இசையை கேட்​டு, யானை​கள் கூட அசை​வின்றி நிற்​கும். அவன், இளவரசி வாசவதத்​தாவைக் காதலித்து வரு​கிறான். இதற்​கிடையே உதயணனுக்கு ஒரு தெய்​வீக யானையை பரி​சாக அளிக்​கிறார் இந்​திரன். உதயணன் செய்​யும் தவறால், அது அவரை விட்​டுச் சென்று விடு​கிறது. மனம் வருந்​தும் உதயணன் அதைத் தேடிச் செல்​கிறார்.

அப்​போது தனது காதலி வாசவதத்​தாவை வேறொரு நாட்​டில் விட்​டுச் செல்​கிறார். அங்கு வேறொரு பெயரில், நடன​மும் இசை​யும் கற்​றுக்​கொடுக்​கிறார் அவர். இந்​நிலை​யில் மரகதகல்​லில் செய்​யப்​பட்ட போலி யானையை காட்டி உதயணனை வரவழைத்து மன்​னன் ஒரு​வன், அவரை கைது செய்​கிறான். அவனுடைய நாட்​டை​யும் கைப்​பற்​றுகிறான். இந்​தச் சிக்​கல்​களில் இருந்து மீண்டு தனது காதலியை உதயணன் எப்​படிக் கைப்​பிடித்​து, நாட்டை மீட்​கிறான் என்​பது கதை.

இதை அந்த கால​கட்​டத்​தில் பிரபல​மாக இருந்த டி.ஆர்​.ரகு​நாத் இயக்​கி​னார். அவருடைய சகோ​தரர் ராஜா சந்​திரசேகர் இதன் கதையை எழு​தி​னார். முதலில் இதில் நாயக​னாக நடிக்க இருந்​தவர், தமிழ் சினி​மா​வின் முதல் சூப்​பர் ஸ்டா​ரான தியாக​ராஜ பாகவதர். அவர் நடிப்​ப​தாக விளம்​பரங்​கள் கொடுக்​கப்​பட்​டன. ‘இந்​து’ இதழில் முதல் பக்​கத்​தில் தியாக​ராஜ பாகவதர், குதிரை​யில் நிற்​பது போன்ற விளம்​பரம் முழு பக்​கத்​தில் வெளி​யாகி இருந்​தது. பரத​நாட்​டிய கலைஞரும் சிறந்த கர்​னாடக இசைப் பாடகி​யு​மான வசுந்​தரா தேவி நாயகி​யாக நடிக்க ஒப்​பந்​த​மா​னார். அப்​போது அவர் புகழின் உச்​சத்​தில் இருந்​தார். பாகவதரின் குரலில் பாடல்​கள் பதிவு செய்​யப்​பட்​டுப் படப்​பிடிப்பு தொடங்கி நடந்து கொண்​டிருந்த போது, 1945 டிசம்​பர் மாதம் லட்​சுமி காந்​தன் கொலை வழக்​குக்​காகக் கைது செய்​யப்​பட்டு சிறை செல்ல நேரிட்​டது, பாகவதருக்​கு.

இதனால் அவர் நடித்த காட்​சிகளை நீக்​கி​விட்​டு, கர்​னாடக இசைப் பாடகர் ஜி.என்​.​பாலசுப்​பிரமணி​யனை ஹீரோ​வாக நடிக்க வைத்​தனர். அப்​போது நன்​றாகப் பாடத் தெரிந்​தால், ஹீரோ வாய்ப்பு தேடி வரும். அப்​படித்​தான் இந்த வாய்ப்பு அவருக்​குக் கிடைத்​தது. நாயகி​யாக வசுந்​தரா தேவி நடித்​தார்.

இவர்​களு​டன் எம்​.எஸ்​.சரோஜா, டி.​பாலசுப்​ரமணி​யம், கே.​சா​ரங்​க​பாணி, காளி என்​.ரத்​னம், சி.டி.​ராஜ​காந்​தம், என்​.கிருஷ்ண​மூர்த்​தி, பி.எஸ்​.வீரப்​பன் (பிறகு​தான் வீரப்பா என பெயர் மாற்​றிக் கொண்​டார்), டி.கே.சம்​பங்​கி, எம்​.​வி.மணி, கொளத்து மணி, ராஜா, கமலம், கே.என்​.​ராஜம் மற்​றும் என்​.​நாகசுப்​ரமணி​யம் என பலர் நடித்​தனர்.

இந்​தப் படத்​துக்கு உதயகு​மாரும், ஏ.எஸ்​.ஏ.​சாமி​யும் வசனம் எழு​தினர். ஏ.எஸ்​.ஏ.​சாமி பின்​னர் கதாசிரியர் மற்​றும் இயக்​குந​ராக புகழ்​பெற்​றார். எம்​.ஜி.ஆரை ஹீரோ​வாக அறி​முகப்​படுத்​தி​ய​வரும் இவரே. சி.ஆர்​.சுப்​ப​ராமன் இசை அமைத்​தார். பாப​நாசம் சிவன், கம்​ப​தாசன் பாடல்​கள் எழு​தினர். மார்​கஸ் பார்ட்லே ஒளிப்​ப​திவு செய்​தார்.

வி.பி.​ராமையா பிள்ளை நடனங்​களை அமைத்​தார். நாயகி நடனம் கற்​றுக்​கொடுப்​பவர் என்​ப​தால், கதக், மணிப்​பூரி, பஞ்​சாபி நடனங்​களை காமினி குமார் சின்ஹா அமைத்​தார். இந்​தப் படத்​தில் நடிகர், நடிகைகளுக்​கான உடைகளை எம்.நடேசன் உரு​வாக்​கி​னார். இவர், பின்​னர் தயாரிப்​பாள​ராக மாறி, எம்​.ஜி.ஆரின் மன்​னாதி மன்​னன், ஜெமினி கணேசனின் ஆசை, சிவாஜி கணேசனின் அன்பு என சில படங்​களைத் தயாரித்​தார்.

1947-ம் ஆண்டு இதே நாளில் வெளி​யான இந்​தப் படத்​தில், ஜி.என். பாலசுப்​பிரமணி​யன், வசுந்​தரா ஆகியோரின் இனிமை​யான பாடல்​கள், நடனம், பிரம்​மாண்ட செட்​டு​கள் இருந்​தா​லும் படம் பெரும் வெற்​றியை பெற​வில்​லை. இந்​தப்​ படம்​ வெளியான ஆண்​டு​தான்​ பாகவதர்​ சிறையி​லிருந்​து விடுதலை செய்​யப்​பட்​டார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x