Last Updated : 20 Jun, 2025 10:16 PM

 

Published : 20 Jun 2025 10:16 PM
Last Updated : 20 Jun 2025 10:16 PM

‘அஸ்தமிக்கும் சூரியன்’ - ‘ஜனநாயகன்’ புதிய போஸ்டரால் இணையத்தில் விவாதம்!

சென்னை: நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் புதிய போஸ்டர் இணையத்தில் விவாதத்தை கிளப்பியுள்ளது.

விஜய் நடிப்பில் உருவாகி வரும் கடைசி படம் ‘ஜனநாயகன்’. இதில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றது. ஜூன் 22-ம் தேதி விஜய் தனது பிறந்த நாளைக் கொண்டாடவுள்ளார். அன்றைய தினம் ‘ஜனநாயகன்’ படத்தின் முதல் சிங்கிள் அல்லது கிளிம்ப்ஸ் வெளியாகும் என்று தெரிகிறது. இது குறித்து படக்குழு ‘தி ஃபர்ஸ்ட் ரோர்’ என்று சூசகமாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதற்காக ஒரு பிரத்யேக போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், மறைந்து கொண்டிருக்கும் சூரியனுக்கு முன்னால் நடிகர் விஜய் தனது வலது கையை உயர்த்தி நிற்பது போலவும் அவருக்கு கீழே மக்கள் நிற்பது போலவும் அந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த போஸ்டர் வெளியான சில நிமிடங்களிலேயே பல லட்சம் பேரால் எக்ஸ், பேஸ்புக் , இன்ஸ்டா உள்ளிட்ட தளங்களில் பகிரப்பட்டது. விஜய்யின் ரசிகர்களும், அவரது தமிழக வெற்றிக் கழக ஆதரவாளர்களும் இந்த போஸ்டர் திமுக ஆட்சி முடிவுக்கு வரப் போவதை குறிப்பதாகவும், அதற்காகவே சூரியன் அஸ்தமனம் ஆவதைப் போல போஸ்டர் வடிவமைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்து வருகின்றனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் திமுக ஆதரவாளர்கள் பலரும் திமுகவின் சின்னமாக உதயசூரியனுக்கு விஜய் ஓட்டு கேட்பதைப் போல இந்த புதிய போஸ்டர் இருப்பதாக கிண்டலாக பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பான பதிவுகளில் இரு தரப்பினரும் சூடான விவாதங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

கே.வி.என் நிறுவனம் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ஜனநாயகன்’, விஜய், பாபி தியோல், பூஹா ஹெக்டே, கவுதம் மேனன், ப்ரியாமணி, மமிதா பைஜு உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர். இதற்கு ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார். இது விஜய்யின் நடிப்பில் வெளியாகும் கடைசி படம் என்பதால், இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x