Last Updated : 19 Jun, 2025 08:14 AM

2  

Published : 19 Jun 2025 08:14 AM
Last Updated : 19 Jun 2025 08:14 AM

‘சாதாரண மனிதர்களோட கதைகள்ல தான் சுவாரஸ்யம் இருக்கு!’ - இயக்குநர் தமயந்தி நேர்காணல்

‘தடயம்’ படத்துக்குப் பிறகு எழுத்தாளர் தமயந்தி இயக்கியிருக்கும் திரைப்படம், ‘காயல்’. காயத்ரி சங்கர், லிங்கேஷ் முதன்மை பாத்திரங்களில் நடித்திருக்கும் இந்தப் படத்தை ஜே ஸ்டூடியோஸ் சார்பில் ஜேசு சுந்தர்மாறன் தயாரித்திருக்கிறார். விரைவில் வெளியாக இருக்கிற இந்தப் படம் பற்றி தமயந்தியிடம் பேசினோம்.

‘காயல்’ எதை பேசுற படம்?

காதலுக்கு எதிரா சாதி மாதிரியான கொடுமைகள் இன்னும் இருக்குங்கறதை சொல்ற படம் இது. தற்கொலையை எதிர்த்து இயக்கம் நடத்திட்டு இருக்கிற ஒரு பொண்ணு, அவங்களோட காதலை அம்மா புறக்கணிக்கிறாங்க. அதுக்கு காரணமா சாதி இருக்கு. பிறகு அவங்க அண்ணன் மகனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறாங்க. அந்தப் பொண்ணு அதை ஏத்துக்க முடியாம என்ன முடிவு எடுக்கிறா, அந்த முடிவு என்ன மாதிரியான விளைவுகளை கொண்டு வருதுன்னு படம் போகும்.

அனுமோள் முக்கியமான கதாபாத்திரத்துல நடிச்சிருக்காங்களாமே?

ஆமா. சில வருஷங்களுக்கு முன்னால அவங்களை கேரளாவுல சந்திச்சப்ப, இந்தக் கதையை சொன்னேன். அப்போ, “இந்தக் கதையை நீங்க எப்ப படமா பண்ணினாலும் அந்த அம்மா கதாபாத்திரத்துல நான் நடிப்பேன்”னு சொன்னாங்க. சொன்ன மாதிரியே நடிச்சுக் கொடுத்தாங்க. படத்துல எல்லோருமே சிறப்பா நடிச்சிருந்தாலும் ஒரு தாயின் மன உணர்வுகளை அனுமோள் அருமையா வெளிப்படுத்தி இருக்காங்க. கார்த்திக் பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு பண்ணியிருக்கார். அவர் இந்தியில சில படங்கள்ல ஒர்க் பண்ணியிருக்கார். அவர் கூட ஏற்கெனவே மியூசிக் ஆல்பம் பண்ணிருக்கேன். எனக்கு அவர் ‘லைட்டிங் சென்ஸ்’ ரொம்ப பிடிக்கும். பிரவீண் பாஸ்கர் எடிட் பண்ணியிருக்கார். மென்னுணர்வுகளை அவர் அழகான காட்சியா செதுக்குவார். ஜஸ்டின் கெனன்யா இசை அமைச்சிருக்கார். பாரதியாரின் ‘பாயும் ஒளி’ பாடலுக்கு சுதர்சன் என் குமார் இசை அமைச்சிருக்கார்.

‘காயல்’ பெண்களைப் பற்றி பேசும் படமா?

இந்தப் படத்தோட அடிநாதம் ஒண்ணே ஒண்ணு தான். ‘தங்கள் வானத்தின் வாசனையை முகர்ந்த பெண்களுக்கு’ன்னுதான் இந்த படத்தையே ‘டெடிகேட்’ பண்ணியிருக்கேன். என்னால ஒரு வாழ்க்கையை தேர்வு செய்ய முடியும்னா, அதை என்னோட குடும்பம் நம்பணும், சமூகம் நம்பணும். என்னால சரியான ஒன்றை தேர்வு செய்ய முடியுங்கற திறன் இல்லை அப்படிங்கற, என் நம்பிக்கையை குலைக்கிற வேலைதான் இங்க நடந்துட்டு இருக்கு. இது எல்லா பெண்களுக்கும் நடக்குதுன்னு நினைக்கிறேன். தொழில், கல்வி, திருமணம்னு எதையுமே அவங்க வாழ்க்கையை பெண்கள் தீர்மானிக்கிறதில்ல. எழுத்தாளர் பிரபஞ்சன் சொல்ற மாதிரி, அவங்களை சார்ந்தவங்களோட வாழ்க்கையைதான் வாழ்ந்துட்டு இருக்காங்க. அப்படி பெண்களோட தேர்வுகளை மதிக்கிற ஒரு சமூகம் உருவாகணும்னு நினைக்கிறதை பற்றிய கதைதான் இந்தப் படம்.

சாதாரண பெண்களின் வாழ்க்கைதான் இந்தப் படம் என்று சொல்லலாமா?

சாதாரண மனிதர்களின் கதைகள்தான் அதிகம் சொல்லப்படாம இருக்கு. அதுதான் வலுவானது, சுவாரஸ்யமானது. என்னையே எடுத்துக்கோங்க, சாதாரண குடும்பங்கள்ல இருந்து வர்ற, என்னைப் போன்ற பெண்களின் குரல் சினிமா மட்டுமல்லாம, எல்லா பக்கமுமே நிராகரிக்கப்படுது. பாதி பெண்கள் தங்களோட மரணத்துக்கு முன்னால கூட அவங்களோட சின்ன சின்ன ஆசையைக் கூட வெளிய சொல்றதில்லை. சொல்ல முடியாது. மிச்சம் மீதி வார்த்தைகளை மனசுல வச்சிட்டுதான் அவங்க இறந்தும் போறாங்க. அதுபோன்ற பிரச்சினைகளைத் தாண்டி, பெண்கள் கதை சொல்லும்போது, அல்லது ஒரு படம் எடுக்க வரும்போது அதை மக்கள் பார்க்கணும். பிடிச்சிருக்கு, பிடிக்கலைங்கறதை அதுக்குப் பிறகு சொல்லலாம்.

நீங்க பண்ணின ‘தடயம்’ மாதிரி தமிழ்ல சுயாதீன படங்கள் அதிகம் வர்றதில்லையே...

சுயாதீன படங்கள் தமிழ்ல நிறைய வரணும். அது மாதிரி படங்களை தயாரிக்க, லாபத்தை எதிர்பார்க்காத தயாரிப்பாளர்களும் வேணும். பின்னணி இல்லாம சினிமாவுக்கு வர்றவங்களுக்கும் பின்னணி உள்ள வங்களுக்குமான வித்தியாசம் இங்க தெரிஞ்சதுதான். சினிமாவுல உங்க திறமையை நம்பற ஒரு ‘காட்பாதர்’ தேவைப்படுது. அது இல்லாததால நிறைய நல்ல படங்கள் அடையாளம் தெரியாம போயிடுது. இங்க, பெரிய ஜனரஞ்சக வணிகப் படங்கள்தான் திரைப்படங்களா கருதப்படுது. அந்த எண்ணம் மாறணும்.

சோஷியல் மீடியாவில் சினிமாவுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரம் அதிகமாயிடுச் சுன்னு சொல்றாங்களே?

ஒரு படம் தோற்றுப் போறதைக் கொண்டாடற மனநிலை இப்ப அதிகரிச்சிருக்கு. ஒரு பெரிய படம் தோல்வியடைஞ்சா, அது கூடவே வந்திருக்கிற நல்ல படங்களை பற்றிப் பேசறதை விட்டுட்டு, தோல்வியடைஞ்ச படம் பற்றியே தொடர்ந்து பேசறாங்க. எல்லா மனுஷனுக்குள்ளேயும் கசடுங்கறது எல்லா காலத்துலயும் இருந்துட்டு இருக்கு. சோஷியல் மீடியா முகமற்ற தளமா இருக்கிறதால, நீங்க என்ன வேணாலும் எழுத வாய்ப்பிருக்கு. அதனால அவங்க வாழ்க்கையில இருக்கிற ஒட்டுமொத்த வெறுப்பையும் இதுல காட்டறாங்கன்னு நினைக்கிறேன். சினிமான்னு வரும்போது அது எல்லை மீறி போறது வருத்தமா இருக்கு.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x