Published : 18 Jun 2025 06:49 PM
Last Updated : 18 Jun 2025 06:49 PM
“கலையில் மட்டும்தான் அழுவதை கூட ரசிக்க முடியும்” என்று நடிகர் காளி வெங்கட் கூறியுள்ளார்.
கார்த்திகேயன் மணி இயக்கத்தில் சத்யராஜ், காளி வெங்கட், ரோஷினி ஹரிப்பிரியன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘மெட்ராஸ் மேட்னி’. இதனை ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் வழங்க, மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் தயாரித்தது. இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் எதிர்பார்த்த வரவேற்பினைப் பெற்றது.
இதனை முன்னிட்டு பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் காளி வெங்கட் பேசும்போது, “இப்படத்துக்கு வழங்கிய ஆதரவுக்கும், இதற்கும் மேலும் தொடர்ந்து வழங்கப் போகும் ஆதரவுக்கும் நன்றி. இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநருக்கு நன்றி. இப்படத்தின் கதை எனது தந்தையை நினைவுபடுத்தியது. அவருக்கு சமர்ப்பிக்க இதைவிட சிறந்த வாய்ப்பு கிடைக்காது என்று இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன்.
இந்தப் படம் வெளியான பிறகு ரசிகர்களின் வரவேற்பை தெரிந்து கொள்வதற்காக திரையரங்கத்துக்க்கு சென்ற போது, சிலர் என்னை கட்டிப்பிடித்து அழுதனர். என் சட்டை ரசிகர்களின் கண்ணீரால் நனைந்தது. இந்த அனுபவம் புதிதாக இருந்தது மறக்க முடியாததாகவும் ஆகிவிட்டது. நடிக்கும்போது அந்த கதாபாத்திரம் ரசிகர்களிடத்தில் இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என நினைக்கவில்லை. கலையில் மட்டும்தான் அழுவதை கூட ரசிக்க முடியும். இது சினிமாவில் உள்ள நடிகர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வரம்.
நான் இதற்கு முன்பு அதிகமாக பார்த்த படம் ‘கார்கி’. தற்போது அதைவிட அதிகமாக பார்த்த படம் ‘மெட்ராஸ் மேட்னி’. ஏனெனில் இந்தப் படத்தின் ஒலி அமைப்பு மிகச் சிறப்பாக இருந்தது. இந்தப் படத்தில் ஒரு பாடலை பாடிய வடிவேலு சாருக்கு நன்றி. மேலும் இந்த திரைப்படத்தில் நடித்த நடிகர்கள் நடிகைகள் மற்றும் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கையை படமாக்குவதில் என்ன இருக்கிறது என்ற கேள்விக்கு இயக்குநர் இந்தப் படத்தை பதிலாக அளித்திருக்கிறார். இதனால் நான் இயக்குநரை மனதார பாராட்டுகிறேன். மேலும் இந்தக் கதையை அவர் சொன்ன விதத்தை நான் முக்கியமானதாக பார்க்கிறேன்.
ஒரு கவிதையை மொழிபெயர்த்து அதனை திரைப்படமாக உருவாக்குவது போல் இருந்தது.
இயக்குநர் கார்த்திகேயன் மணி தொடர்ந்து இது போன்ற படங்களையும் இயக்க வேண்டும். மேலும், இந்தப் படம் ஏராளமானவர்களுக்கு புது நம்பிக்கையை அளித்திருக்கிறது. இதற்காகவும் இயக்குநர் கார்த்திகேயன் மணிக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT