Published : 18 Jun 2025 06:22 PM
Last Updated : 18 Jun 2025 06:22 PM
ஷங்கர் இயக்கத்தில் கமல், சித்தார்த், எஸ்.ஜே.சூர்யா, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘இந்தியன் 2’. இப்படம் பெரும் தோல்வியை தழுவியது. மேலும், பட வெளியீட்டுக்கு முன்பு சித்தார்த் அளித்த பேட்டியும் இணையத்தில் கிண்டலுக்கு ஆளானது. அச்சமயத்தில் ‘இந்தியன் 2’ குறித்து சித்தார்த் பேசிய வார்த்தைகளே முழுமையாக மீம்ஸ் ஆனது.
தற்போது சித்தார்த் நாயகனாக நடித்துள்ள படம் ‘3 BHK’. ஜூலை 4-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தை விளம்பரப்படுத்த பேட்டிகள் அளித்து வருகிறார். இதில் ‘3BHK’ படத்தின் ஸ்பெஷல் என்ன என்பது குறித்த கேள்விக்கு, “மக்கள் ஏன் ஒரு படத்தைப் பார்க்க வேண்டும் என்பதுதான் பலருடைய கேள்வியாக இருக்கிறது. இது எனக்கு பிடிக்கும் என்றீர்களே... எனக்கு பிடிக்கவில்லையே என்று அப்புறம் வந்து சண்டைப் போடக் கூடாது. இது எனக்கு பிடிக்காது என்றீர்களே... அதுதான் என் குழந்தைக்கு பிடித்த படம் என்கிறார்கள்.
நீங்கள் ஏன் ஒரு படத்தைப் பார்க்க வேண்டும் என நினைக்கிறீர்களோ, அதற்காக போய் பாருங்கள். போஸ்டர், பாட்டு, டிரெய்லர் எல்லாம் பார்த்துவிட்டு, பார்க்க வேண்டும் என்று தோன்றினால் திரையரங்குக்கு சென்று காசு கொடுத்து டிக்கெட் வாங்கி படத்தைப் பாருங்கள். நான் சொல்கிறேன் என்பதற்காக வராதீர்கள். ஏனென்றால் அது மிகப் பெரிய பொறுப்பு.
ஒருவர், இருவருக்கு படத்தைப் பாருங்கள் என்று சொல்லலாம். 4 கோடி பேருக்கு எப்படி சொல்வது? ‘8 தோட்டாக்கள்’ இயக்குநர் ஸ்ரீகணேஷ் இயக்கியுள்ள படம் ‘3 BHK’. ‘சூர்யவம்சம்’ படத்துக்குப் பிறகு சரத்குமார் – தேவயானி இணைந்து நடித்திருக்கிறார்கள். சித்தார்த் என்ற பையன் ஹீரோவாக நடித்துள்ள படம். தங்கச்சியாக மீத்தா, நாயகியாக சைத்ரா, இசையமைப்பாளராக அம்ரித் எல்லாரும் பணிபுரிந்திருக்கிறார்கள். இதில் ஏதேனும் ஒரு சில விஷயங்கள் பிடித்திருந்தால் ‘3BHK’ படத்தைப் பாருங்கள். இது கூட வற்புறுத்தவில்லை. எனக்கு தோன்றுவதை சொல்கிறேன்” என்று தெரிவித்துள்ளார் சித்தார்த்.
சித்தார்த்திடம் தெரியும் இந்த மாற்றம் ‘இந்தியன் 2’ சமயத்தில் இணையத்தில் பெரும் கிண்டலுக்கு ஆளானதே காரணம் என்று இந்த வீடியோவை பகிர்ந்து வருகிறார்கள் இணையவாசிகள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT