Last Updated : 18 Jun, 2025 11:22 AM

 

Published : 18 Jun 2025 11:22 AM
Last Updated : 18 Jun 2025 11:22 AM

வீடு மற்றும் உணவகங்களில் வருமான வரித்துறை சோதனை: ஆர்யா விளக்கம்

சென்னை: சென்னையில் நடிகர் ஆர்யாவின் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. மேலும் அவருக்கு சொந்தமானது என சொல்லப்படும் உணவகங்களிலும் சோதனை நடந்து வருகிறது. இந்நிலையில், வருமான வரித்துறை சோதனை நடக்கும் உணவகத்துக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என ஆர்யா விளக்கமளித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவரான ஆர்யா, ‘அறிந்தும் அறியாமலும்’, ‘பட்டியல்’, ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’, ‘நான் கடவுள்’, ‘ஆரம்பம்’, ‘மதராசப்பட்டினம்’, ‘சார்பட்டா பரம்பரை’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து முத்திரை பதித்தவர். இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகை சாயிஷாவுடன் திருமணம் நடந்துவந்தது.

நடிகர் ஆர்யா தனது உறவினர்கள் மூலம் சென்னையில் ‘ஷீ ஷெல்’ எனும் பெயரில் உணவகங்கள் நடத்துவதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், அண்ணா நகர், கீழ்ப்பாக்கம், கொட்டிவாக்கம், வேளச்சேரி உள்ளிட்ட இடங்களில் உள்ள ‘ஷீ ஷெல்’ உணவகங்களில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகர் ஆர்யாவின் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

வருமான வரித்துறை சோதனை நடக்கும் உணவகத்துக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை எனவும், அந்த உணவகத்தின் உரிமையாளர் வேறு ஒருவர் என்றும் நடிகர் ஆர்யா விளக்கமளித்துள்ளார். கேரளாவைச் சேர்ந்த குன்ஹி மூசா என்பவரே இந்த 'ஷீ ஷெல்' உணவகத்தின் உரிமையாளர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தரமணியிலுள்ள குன்ஹி மூசாவின் இல்லத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x