Published : 17 Jun 2025 08:36 PM
Last Updated : 17 Jun 2025 08:36 PM
புதுடெல்லி: “ஒரு திரைப்படத்தை வெளியிட அனைவருக்கும் உரிமை உண்டு. அந்தப் படத்தைப் பார்க்க வேண்டும், பார்க்க வேண்டாம் என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்” என கருத்து தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், ‘தக் லைஃப்’ திரைப்படத்தை திரையிடுவது குறித்து கா்நாடக அரசின் கருத்தைக் கேட்டுத் தெரிவிக்க உத்தரவிட்டுள்ளது. மேலும், அரசியலமைப்புச் சட்டத்தின்படி அனைத்தும் நடைபெற வேண்டுமே தவிர, சிலரது விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்றதுபோல நடக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் கருத்து காட்டமாக தெரிவித்துள்ளது.
சென்னையில் நடைபெற்ற ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன் பேசுகையில் 'தமிழில் இருந்து கன்னட மொழி பிறந்தது’ என குறிப்பிட்டார். இதற்கு கன்னட அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்தக் கருத்துக்கு கமல்ஹாசன் மன்னிப்பு கேட்காததால், கர்நாடக திரைப்பட வர்த்தக சபை இந்த திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிட தடை செய்தது.
இதற்கு எதிராக கமல்ஹாசன் கடந்த ஜூன் 3-ம் தேதி கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதனை விசாரித்த நீதிபதி நாகபிரசன்னா, “கமல்ஹாசனின் கருத்தால் கன்னட மக்களின் மனம் புண்பட்டுள்ளது. அவர் மன்னிப்பு கேட்காவிட்டால் இங்கு அந்த திரைப்படத்தை திரையிட முடியாது” எனக் கூறி மன்னிப்பு கேட்குமாறு வலியுறுத்தினார். அதனை கமல்ஹாசன் ஏற்கவில்லை. இதனால் ‘தக் லைஃப்’ திரைப்படம் கர்நாடகாவில் வெளியாகவில்லை.
இந்த தடையை எதிர்த்து சமூக ஆர்வலர் மகேஷ் ரெட்டி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், “தக் லைஃப் திரைப்படம் மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தின் சான்றிதழ் பெற்று தணிக்கை செய்யப்பட்டுள்ளது. அந்த திரைப்படத்தை கன்னட அமைப்பினர் வாய்மொழி அச்சுறுத்தல் மூலம் கர்நாடகாவில் வெளியிட முடியாமல் தடையை ஏற்படுத்தியுள்ளனர். கமல்ஹாசனின் கன்னட மொழி குறித்த கருத்துகளால் அந்த திரைப்படத்துக்கு சட்டரீதியான தடை எதுவும் விதிக்கப்படவில்லை. இருப்பினும் சட்டத்துக்கு புறம்பாக தடை விதிக்கப்பட்டுள்ளது” என கூறியிருந்தார்.
இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “நமது அரசியலமைப்பு விதிகளை குண்டர்கள் மற்றும் வன்முறையாளர்கள் கைப்பற்றுவதை அனுமதிக்க முடியாது. ஒரு திரைப்படத்தை வெளியிட அனைவருக்கும் உரிமை உண்டு. அந்தப் படத்தைப் பார்க்க வேண்டும், பார்க்க வேண்டாம் என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். எனவே, திரைப்படத்தை வெளியிடுவதை தடை செய்ய முடியாது. இது குறித்து கர்நாடக அரசு முடிவெடுக்க வேண்டும்,” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அப்போது எதிர்மனுதாரர்கள் தரப்பில் இருந்து, “இது மக்களின் உணர்வுப்பூர்வமான விவகாரம் என்பதை நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும்,” என கோரிக்கை விடுத்தனர். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “ஒரு திரைப்படம் தடையில்லாச் சான்று பெற்றிருந்தால், அந்தப் படத்தை எவ்வித பிரச்சினையும் இல்லாமல் திரையிடுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
கன்னட மொழி குறித்து கமல்ஹாசன் தெரிவித்த கருத்துக்கு மன்னிப்பு கோர வேணடும் என கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட முடியாது. இந்த விவகாரத்தில் கர்நாடக உயர் நீதிமன்றத்துக்கு எவ்வித வேலையும் இல்லை. ‘தக் லைஃப்’ படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தொடரப்பட்ட இந்த வழக்கை கர்நாடக உயர் நீதிமன்றமே விசாரிக்கும்.
அரசியலமைப்புச் சட்டத்தின்படி அனைத்தும் நடைபெற வேண்டுமே தவிர, சிலரது விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்றதுபோல நடக்கக் கூடாது. எனவே, இந்த விவகாரத்தில் கர்நாடக அரசின் கருத்தைக் கேட்டு தெரிவிக்க வேண்டும்” என்று அம்மாநில அரசு தரப்பு வழக்கறிஞருக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், விசாரணையை வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT