Published : 16 Jun 2025 09:05 AM
Last Updated : 16 Jun 2025 09:05 AM
தமிழ் சினிமாவில் 80-களின் இறுதியிலும் 90-களிலும் டாப் ஹீரோவாக இருந்தவர் ராமராஜன். ரஜினி, கமல் படங்களுக்கே கடும் சவாலாக இருந்தன அவர், படங்கள். கிராமத்து பேக்ரவுன்ட், காதல், மோதல், குடும்ப சென்டிமென்ட், அற்புதமான பாடல்கள்... இதுதான் ராமராஜன் பட ஃபார்முலா. இந்த அடிப்படையில் வெளியான அவரின் பல படங்கள் வெற்றி பெற்றிருக்கின்றன. அதில் ஒன்று, மக்களைக் கொண்டாட வைத்த, ‘கரகாட்டக்காரன்’. மதுரை நடனா தியேட்டரில் ஒரு வருடத்துக்கும் மேல் ஓடிய இந்தப் படம் சில பகுதிகளில் தொடர்ந்து ஹவுஸ்-புல் காட்சிகளாக, 200 நாட்களுக்கு மேல் ஓடியது.
கங்கை அமரன் இயக்கிய இந்தப் படத்தில் முத்தையா என்ற கரகாட்டக் கலைஞராக, ரசிகர்களின் மனதை அள்ளியிருப்பார் ராமராஜன். இதில்தான், கனகா நாயகியாக அறிமுகமானார். அவருக்கும் காமாட்சி என்ற கரகாட்டக்காரி வேடம்தான். கூடவே அத்தை மகனைக் காதலித்து சோகம் சுமக்கும் கதாபாத்திரம். கவுண்டமணி தவில், நாதஸ் செந்தில், ஊர் பெரிய மனிதர் சின்னராசுவாக சந்தானபாரதி, கனகாவின் தந்தையாக சண்முகசுந்தரம், ராமராஜனின் அம்மாவாக காந்திமதி, சந்திரசேகர், கோவை சரளா ஆகியோர் நடித்திருந்தனர்.
கதை ரொம்ப சிம்பிள். ‘தில்லானா மோகனாம்பாளி’ன் இன்னொரு வடிவம். அதில் நடனக் கலைஞரான பத்மினியை காதலிப்பார் நாதஸ்வர வித்வான் சிவாஜி கணேசன். இதில் இரண்டு கரகாட்டக் கலைஞர்கள் காதலிக்கிறார்கள். ஊர் மற்றும் குடும்பப் பிரச்சினைகளை மீறி அவர்கள் எப்படி ஒன்று சேர்கிறார்கள் என்பது படம்.
‘தில்லானா மோகனாம்பாள்’ கதையின் இன்ஸ்பிரேஷன்தான் இந்தப் படத்துக்கு காரணம் என்பதைக் கங்கை அமரனே வெளிப்படையாகச் சொல்லி இருக்கிறார். இந்தப் படத்தில் கவுண்டமணி - செந்திலுக்கான காமெடி காட்சிகள் வரவேற்பைப் பெற்றன. குறிப்பாக அந்த வாழைப்பழ காமெடி ‘கன்னா பின்னா’ ஹிட். இது ஒரு மலையாளப் படத்திலிருந்து சுட்டது என்கிறார்கள்.
‘இந்தியாவிலேயே, நம்ம வேல்டுலயே கார் வச்சிருக்கிற கரகாட்ட கோஷ்டி நம்ம கோஷ்டிதான்’, செந்திலை அடிக்கடி அடித்துவிட்டு, “அதை ஏன்ட்டா என்ன பார்த்து அப்படி ஒரு கேள்வி கேட்டே” என்று கவுன்டர் அடிக்கிற கவுண்டரின் நடிப்பும் அந்த கேள்விக்கான பதில் பார்வையாளர்களுக்குத் தெரியும்போது வருகிற குபீர் சிரிப்பும் படத்தின் பிளஸ். திருவிழாவில் காணாமல் போன குழந்தை போலவே பம்மி நிற்கும் செந்திலின் நடிப்பும் அவர்களுக்கேற்ற ஜோடியாக கோவை சரளாவின் எக்ஸ்பிரஷனும் இந்தப் படத்தின் ஹிட்டுக்கான காரணங்களில் ஒன்றாக அமைந்தன.
படத்தின் வெற்றிக்கு இன்னொரு காரணமாக அமைந்தது, இளையாராஜாவின் மனதை மயக்கிய பாடல்கள். ‘இந்த மான் உந்தன் சொந்த மான்’ மற்றும் ‘மாங்குயிலே பூங்குயிலே’ என்று மெலடியில் இழைந்து, ‘குடகு மலை காற்றில் வரும் பாட்டுக் கேட்குதா’ என சோகத்தில் கரைந்து, ‘மாரியம்மா.. மாரியம்மா...’, ‘முந்தி முந்தி வினாயகரே’, ‘ஊரு விட்டு ஊரு வந்து’ என துள்ளலிசைப் பாடல்களை தந்த இளையராஜா, டைட்டிலில் ‘பாட்டாலே புத்தி சொன்னான்’ என்று தனது குரலில் ஆரம்பிக்கும் போதே படத்தின் மீது ஈர்ப்பு வந்துவிடும் நமக்கு. இந்த ஒரு பாடலை தவிர மற்ற பாடல்களை கங்கை அமரன் எழுதினார். டைட்டில் பாடலில், படத்தில் பணிபுரிந்த அனைவரையும் அறிமுகப்படுத்தி இருந்தார் கங்கை அமரன்.
இந்தப் படத்தில் கவுண்டமணி பயன்படுத்தும் 1960-ம் ஆண்டு மாடலான செவர்லே இம்பாலா கார், பட ரிலீஸுக்கு பிறகு அதிகம் பிரபலமானது. விஜயா மூவிஸ் சார்பில் கருமாரி கந்தசாமியும் ஜே துரையும் தயாரித்தனர். ஏ.சபாபதி ஒளிப்பதிவு செய்தார். வெறும் 28 நாட்களில் முடிக்கப்பட்ட படம் இது. 1989-ம் ஆண்டு இதே நாளில் வெளியான இந்த சூப்பர் ஹிட் படம், ‘கரகாட்ட கோபையா’ என்ற பெயரில் டப் செய்யப்பட்டு தெலுங்கிலும் வெளியானது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT