Published : 16 Jun 2025 08:11 AM
Last Updated : 16 Jun 2025 08:11 AM
கே.பாக்யராஜ், மீரா கிருஷ்ணன், ஜீவா தங்கவேல், விட்டல் ராவ், குரு அரங்கதுரை, நிஷாந்த், ஜெயந்தி தியாகராஜன், சோபியா வேம்பு, வெடி கண்ணன், பிரியா ஆகியோருடன் ஆழியாறு அறிவுத் திருக்கோயிலை சேர்ந்தவர்கள் நடித்துள்ள படம், ‘ஆனந்த வாழ்க்கை’. இதை வேதாத்திரி மகரிஷியின் ஆசியோடு, எஸ்.கே.எம் மயிலானந்தம் வழிகாட்டுதலின்படி ஆழியாறு அறிவுத் திருக்கோயில் உடன் இணைந்து உலக சமுதாய சேவா சங்கம் தயாரித்துள்ளது.
சத்யா இசை அமைத்துள்ளார். ஆர்.சுப்ரமணிய பாரதி எழுதி இயக்கியுள்ள இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், எஸ்கேஎம் மயிலானந்தம், இயக்குநர்கள் எஸ்.பி முத்துராமன், கே பாக்யராஜ், சமுத்திரக்கனி, கதிர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இயக்குநர் கே.பாக்யராஜ் பேசும்போது, “சொர்க்கம், நரகம் இரண்டும் நம்மிடையே தான் இருக்கிறது. இரண்டுக்கும் வாசல் ஒன்றுதான். அது நம் வாய். அதிலிருந்து வரும் வார்த்தைகளைப் பொறுத்துதான் சொர்க்கம், நரகம் இருக்கிறது. வேதாத்திரி மகரிஷியின் மனவளக்கலை பயிற்சி என்பது அடுத்தவர்களுக்கு, உதவி செய்து வாழாவிட்டாலும் கூட தனக்கான வாழ்க்கையை சிறப்பாக வாழும் முறைய சொல்லித் தருகிறது.
மனவளக்கலையை கற்றுக் கொண்டால் நம் உடல் ஆரோக்கியமாக இருக்கும். நாம் சீராகி விட்டாலே நம்மைச் சுற்றி இருப்பவர்களையும் சீர்படுத்த முடியும். இந்த படத்தில் நடிக்க இயக்குநர் என்னிடம் கதை சொன்னபோது, முதலில் மனவளக்கலை பற்றி நன்கு தெரிந்து கொண்டு, பிறகு நடித்தால் தான் சிறப்பாக இருக்கும் என்று கூறினேன். அதன் பிறகு இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் எனக்கும் என் மனைவி பூர்ணிமாவுக்கும் சில நாட்கள் பயிற்சி அளித்தனர்.
இந்த படத்தைப் பார்த்துவிட்டு ஒரு கிராமத்தை தத்து எடுக்கிறார்களோ இல்லையோ, தங்களைச் சுற்றி உள்ளவர்களில் சிலரையாவது ஒருவருக்கொருவர் கவனித்துக் கொண்டால் அதுவே நல்ல மாற்றம் தான். இந்த படம் பார்க்கும்போது அந்த உணர்வு நிச்சயம் ஏற்படும்” என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT