Published : 14 Jun 2025 11:55 AM
Last Updated : 14 Jun 2025 11:55 AM
அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘டூரிஸ்ட் பேமிலி’. இந்தியளவில் உள்ள பிரபலங்கள் பலரும் இப்படத்தை பார்த்துவிட்டு படக்குழுவினரைப் பாராட்டினார்கள். உலகளவில் ரூ.85 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை புரிந்தது. இப்படம் சம்பந்தப்பட்ட அனைவருக்குமே நல்ல லாபத்தைக் கொடுத்தது.
’டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் இயக்குநர் அபிஷன் தான் ஆட்டோவில் பயணித்த போது நடந்த அனுபவம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பதிவில் புகைப்படத்துடன் வெளியிட்டு இருக்கிறார்.
அப்பதிவில், “நான் மாஸ்க் அணிந்துக் கொண்டு ஆட்டோ ஒன்றில் வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். அப்போது ஆட்டோர் ஒட்டுநர் திடீரென்று யூடியூப்பில் ‘முகை மழை’ பாடலைப் போட்டுவிட்டார். உடனே என் முகம் பிரகாசித்தது. அவருக்கு அப்படம் பிடித்திருந்ததா என்று கேட்டேன். எவ்வித தயக்கமும் இல்லாமல் “நான் ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தினை திரையரங்கில் 3 முறை பார்த்தேன்” என்று கூறினார்.
மேலும் அவரது கைகளைக்காட்டி “என் கைகளைப் பாருங்கள். இப்படத்தைப் பற்றி பேசுவதே எனக்கு மெய்சிலிர்க்கிறது. அந்தளவுக்கு எனக்கு மிகவும் பிடித்திருந்தது” என்றார். பின்னர் அவர் சசிகுமார் சாரின் கதாபாத்திரத்துடன் எவ்வளவு ஆழமாக இணைந்திருக்கிறார் என்பதைப் பற்றி பேசத் தொடங்கினார்.
குடும்பத்தின் எதிர்காலத்திற்காக கடுமையாக போராடிய தனது தந்தையுடன் சசிகுமார் சாரை ஒப்பிட்டார். அவரது தந்தை இப்போது இல்லை, படத்தைப் பார்த்ததும் வலுவான நினைவுகளை மீண்டும் கொண்டு வந்ததாக கூறினார். அவர் உணர்ச்சிவசப்பட்டு கொஞ்சம் உடைந்து போனார்.
நான் தான் அப்படத்தின் இயக்குநர் என்று அவரிடம் சொன்னவுடன் மகிழ்ச்சியில் திளைத்துவிட்டார். ‘டூரிஸ்ட் பேமிலி’ மீதான தனது அன்பை முழுமனதுடன் வெளிப்படுத்தினார். என்ன ஒரு தருணம். உங்கள் சிறிய பங்களிப்பால் ஒருவர் சிரிக்கிறார், குணமடைகிறார் அல்லது ஆழமாக உணர்கிறார் என்பதை நீங்கள் உணரும் போது வரும் மகிழ்ச்சி உண்மையில் அளவிட முடியாதது” என்று தெரிவித்துள்ளார் அபிஷன்.
அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு, ரமேஷ் திலக், பக்ஸ் பெருமாள் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘டூரிஸ்ட் பேமிலி’. மில்லியன் டாலர் நிறுவனம் தயாரிப்பில் உருவானது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT