Published : 14 Jun 2025 10:04 AM
Last Updated : 14 Jun 2025 10:04 AM

‘குபேர குசேலா’: குசேலர் - குபேரன் ஈகோ பற்றிய படம்!

குசேலன் பற்றிய புராணக் கதை பெரும்பாலானோர் அறிந்ததுதான். கிருஷ்ணரும் குசேலரும் பள்ளித் தோழர்கள். குசேலர், 27 குழந்தைகளுடன் வறுமையில் வாடுகிறார். இதனால் அவர் மனைவி, உங்கள் பால்ய நண்பர் கிருஷ்ணரைச் சந்தித்து, ஏதாவது உதவி பெற்று வருமாறு சொல்கிறார். அதோடு அவரைச் சந்திக்க வெறுங்கையுடன் போகக்கூடாது என்பதால், ஒரு பையில் அவல் கொடுத்து அனுப்புகிறார்.

குசேலரை வரவேற்கும் கிருஷ்ணருக்கு அவலைக் கொடுக்கிறார். ஒரு பிடி அவலை அவர் சாப்பிட்டதும் குசேலரின் குடிசை, மாளிகையாகிறது. இன்னொரு பிடி சாப்பிட, குசேலர் வீட்டு மண்பாண்டங்கள், தங்கப் பாத்திரங்களாக மாறுகின்றன. நகைகள் குவிகின்றன. இது குசேலருக்குத் தெரியாது. சில நாட்கள் கிருஷ்ணரின் விருந்தாளியாக இருந்துவிட்டு, சொந்த ஊருக்குத் திரும்பும் குசேலர், வெட்கப்பட்டுக் கொண்டு, கிருஷ்ணனிடம் உதவி ஏதும் கேட்கவில்லை.

ஊர் வந்து சேர்ந்த குசேலர் தனது குடிசை, மாளிகையாக மாறி இருப்பதைக் கண்டு ஆச்சரியமடைகிறார். வீட்டுக்குள் நுழைந்தால் எங்கும் தங்கம். கிருஷ்ணரின் மகிமையைக் கண்டு குசேலர் கண்ணீர் வடிப்பது புராண கதை.

இந்த கதையை ‘குசேலா’ என்ற பெயரில் இயக்குநர் கே.சுப்பிரமணியம் படமாக எடுத்தார். 1936-ம் ஆண்டு வெளியான இதில் குசேலராக பாபநாசம் சிவன் நடித்தார். குசேலர் மனைவியாகவும், கிருஷ்ணராகவும் எம்.எஸ்.சுப்புலட்சுமி நடித்தார்.

ஏழை குசேலன், குபேர குசேலனாக மாறிய பிறகு என்ன நடந்திருக்கும் என்பது பற்றி கற்பனையாக உருவான படம், ‘குபேர குசேலா’. குசேலரை பூலோக குபேரன் என்று மக்கள் அழைப்பதால், செல்வத்தின் அதிபதியான குபேரனுக்கு ஈகோ வருகிறது. ஆத்திரம் அடைகிறார். இதனால் குசேலனுக்கு எதிராகக் களமிறங்குகிறார். இதற்கிடையில் கிருஷ்ணர், பூவிலிருந்து ஓர் அழகான பெண்ணை உருவாக்குகிறார். இதனால் ஏற்படும் குழப்பங்கள் எப்படித் தீர்கின்றன என்பது படம்.

இந்தக் கற்பனை கதையை, சினிமாவுக்காக எழுதியவர் பி.எஸ்.ராமையா. அவர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஆர்.எஸ்.மணியுடன் இணைந்து இயக்கிய படம் இது. அந்தக் காலகட்டத்தில் முன்னணி நடிகராக இருந்த பி.யு.சின்னப்பா, குபேர குசேலராகவும், பாபநாசம் சிவன், பக்த குசேலராகவும் நடித்தனர். கிருஷ்ணராக பி.எஸ்.கோவிந்தன் நடித்தார். இவர்கள் தவிர, ஆர்.பாலசுப்பிரமணியம், என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஆர்.ராமசாமி, நாராயணன், டி.எஸ்.துரைராஜ், பி.ஜி.குப்புசாமி, கிருஷ்ணன், டி.ஏ.மதுரம், மீனலோச்சனி, புளிமூட்டை ராமசாமி ஆகியோரும் நடித்தனர். பூவிலிருந்து உருவான பெண் மல்லிகாவாக, டி.ஆர்.ராஜகுமாரி நடித்தார். ஜுபிடர் சோமுவும், முகைதீனும் இணைந்து தயாரித்தனர்.

குன்னக்குடி வெங்கட்ராம ஐயர், எஸ்.எஸ்.பாலகிருஷ்ணன் இசையமைத்தனர். பாபநாசம் சிவன் மற்றும் உடுமலை நாராயண கவி பாடல்களை எழுதி இருந்தனர். படத்தில் 17 பாடல்கள். ‘நடையலங்காரம் கண்டேன்’, ‘என்னை விட்டெங்கே சென்றீர்’ உள்ளிட்ட சில பாடல்கள் அப்போது ஹிட்டாயின.

1943-ம் ஆண்டு இதே நாளில் வெளியாகி வெற்றி பெற்ற இந்தப் படத்தில், பி.யு.சின்னப்பா மற்றும் தென்னிந்திய சினிமாவின் முதல் கனவு கன்னியான ராஜகுமாரி ஜோடியின் நடிப்பு பேசப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x