Published : 06 Jun 2025 03:22 PM
Last Updated : 06 Jun 2025 03:22 PM
மணிரத்னம் - கமல் கூட்டணியின் ‘தக் லைஃப்’ படத்தின் முதல் நாள் வசூல், இந்திய அளவில் ரூ.17 கோடி மட்டுமே என உறுதியான தகவல்கள் கூறுகின்றன. ஒப்பீட்டளவில், சூர்யாவின் ‘ரெட்ரோ’ படத்தின் முதல் நாள் வசூலைக் கூட இப்படம் முந்தவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தக் லைஃப்’. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என அனைத்து மொழிகளிலும் இப்படம் வியாழக்கிழமை வெளியானது. கர்நாடகாவில் மட்டும் கமலின் பேச்சுக்கு எதிர்ப்பு கிளம்பியதால் இப்படம் வெளியாகவில்லை.
விமர்சன ரீதியிலும் பெரிதாக கவனம் பெறாத நிலையில், இந்திய அளவில் ‘தக் லைஃப்’ திரைப்படம் முதல் நாளில் ரூ.17 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது. முன்னதாக, கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த ‘ரெட்ரோ’ படம் முதல் நாளில் ரூ.19.25 கோடி அளவில் வசூலித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மணிரத்னம் - கமல்ஹாசன் - சிம்பு காம்போவில் பெரிய அளவில் விளம்பரப்படுத்தி கூட ‘தக் லைஃப்’ படம் எதிர்பார்த்த வரவேற்பை முதல் நாளில் பெறவில்லை என்பதையே முதல் நாள் வசூல் நிலவரம் காட்டுகின்றன.
சமீபத்தில் வெளியான மாஸ் படங்களை எடுத்துக்கொண்டால் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ ரூ.29.25 கோடியையும், ‘விடா முயற்சி’ ரூ.27 கோடியையும் இந்திய அளவில் முதல் நாளில் வசூலித்து முன்னிலை பெற்றது நினைவுகூரத்தக்கது. உலக அளவில் என்று வரும்போது ‘தக் லைஃப்’ படத்தின் வசூல் நிலவரம் சற்றே ஆறுதல் அளிக்கக் கூடும் எனத் தெரிகிறது. எனினும், ரூ.200 கோடி ப்ளஸ் பட்ஜெட் கொண்ட படத்துக்கு இந்திய அளவில் முதல் நாள் வசூல் ரூ.17 கோடி மட்டுமே என்பது கவனிக்கத்தக்கது. | வாசிக்க > தக் லைஃப்: திரை விமர்சனம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT