Published : 06 Jun 2025 07:33 AM
Last Updated : 06 Jun 2025 07:33 AM

தக் லைஃப்: திரை விமர்சனம்

டெல்லியில் சகோதர தாதாக்களான, ரங்கராய சக்திவேல் (கமலஹாசன்) மற்றும் மாணிக்கம் (நாசர்) மீது போலீஸ் என்கவுன்டர் முயற்சி நடக்கிறது. இதில் சம்பந்தமில்லாத அமரனின் (சிம்பு) தந்தை இறந்துவிடுகிறார். அமரனை அழைத்து வந்து சக்திவேல் வளர்த்து ஆளாக்குகிறார்.

திடீரென ரங்கராய சக்திவேல் மீது நடக்கும் கொலை முயற்சியில் அமரனை, சந்தேகிக்கிறார் சக்திவேல். இதைப் பயன்படுத்தி ரங்கராய சக்திவேலுக்கும் அமரனுக்கும் இடையே கொம்பு சீவி விடுகிறார்கள். அப்போது ஓர் உண்மை, அமரனுக்குத் தெரிய வர, சக்திவேலைக் கொல்லத் துணிகிறார். இதிலிருந்து தப்பிக்கும் சக்திவேல், அமரனையும் அவருடன் இருப்பவர்களையும் பழிவாங்கத் துடிக்கிறார். இந்த மோதலில் என்ன நடக்கிறது, யார் யாரைக் கொல்கிறார்கள் என்பது கதை.

முப்பத்து ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு கமல்ஹாசனும் மணிரத்னமும் இணைந்த இப்படத்துக்கு நிறைய எதிர்பார்ப்பு இருந்தது. தாதாக்களை நாயகர்களாகக் கொண்டாடும் படங்களின் வரிசையில் வந்திருக்கும் மற்றொரு படம். பிளாஷ் பேக்கில் கதை தொடங்கும் போதே, நிமிர்ந்து உட்கார வைக்கிறது. அதைத் தொடக்கக் காட்சிகள் தக்க வைத்துக் கொள்கின்றன. சக்திவேலுக்கும் அமரனுக்குமான காட்சிகள் முதல் பாகத்தில் நன்றாகவே இருக்கின்றன.

மணிரத்னம் படங்களில் வழக்கமாக கதைக்கு நெருக்கமாகவே திரைக்கதையும் சேர்ந்து பயணிக்கும். ஆனால், நிகழ்காலத்துக்குக் கதை திரும்பும்போது ஏமாற்றமும் தொடங்குகிறது.

சகோதரர்கள் எப்படி டெல்லியில் தாதாக்களாக இருக்கிறார்கள் என்பதற்கு எந்த முன் காட்சியும் இல்லை. இதுபோன்ற கதைகளில் வழக்கமாக என்ன இருக்குமோ, அதே போட்டி, பொறாமை, துரோகம் இதிலும் இருக்கிறது. சிறைக்கு செல்லும் முன், தனக்குப் பிறகு அமரன்தான் என்பதை மறைமுகமாக அறிவிக்கும் சக்திவேலுக்கு அமரன் மீது எழும் ஈகோ, சந்தேகம், பொறாமை எல்லாம் முரணாக இருக்கிறது.

படத்தின் போக்கையே மாற்றும் இந்தக் காட்சிகளுக்குப் பின்னணியில் எந்த அழுத்தமான காட்சிகளையும் வைக்காமல் போனது ஆச்சரியம்தான். தம்பியை அண்ணனே போட்டுத்தள்ள துடிப்பது, குற்றுயிரும் குலையுயிருமாக இருந்தாலும் மீண்டும் மீண்டும் சக்திவேல் எழுந்து நின்று சண்டைப் போடுவது, தப்பிப்பது எல்லாம் மிகை.

இரண்டாம் பாகத்தில் பழி வாங்கும் படலம் தொடங்கிவிடுகிறது. இடையிடையே குடும்பம், திருமணத்தை மீறி ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பது என்று சக்திவேலைக் காட்டி இன்னும் கண்ணைக் கட்டுகிறார்கள். வழக்கமான தாதா படமாகவும் இல்லாமல், மணிரத்னம், கமல் படமாகவும் அல்லாமல் எடுத்திருப்பது பார்வையாளர்களுக்கு ஏமாற்றம்தான். இருந்தாலும் இந்த இருவர் கூட்டணி படத்தின் மேக்கிங்கில் மிரட்டி இருக்கிறது. டீ ஏஜிங் தொழில்நுட்பத்தில் கமல்ஹாசனை காட்டியிருப்பது ரசிக்க வைக்கிறது.

வளர்த்தகடா தாதாவின் மார்பிலேயே பாயும் ‘ஜில்லா’ கதையை சில இடங்களில் ஞாபகப்படுத்துகிறது படம்.

ரங்கராய சக்திவேல் கதாபாத்திரத்தில் கமல் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார். வயதுக்கு மீறிய காட்சிகளிலும் நடித்திருக்கிறார். அமரன் கதாபாத்திரத்தில் துடிப்பான இளைஞராக சிம்பு தன் பங்கைச் சிறப்பாகச் செய்திருக்கிறார். முதல் பாகத்தில் கமலுக்காக உருகுவது, இரண்டாம் பாகத்தில் கொல்லத் துடிப்பது என அவரின் நடிப்பை ரசிக்கலாம். கொடுத்த வேலையை த்ரிஷா செய்திருக்கிறார். என்றாலும் இப்படத்துக்கு அவர் கதாபாத்திரம் ஏன் என்று குழப்பத்தையும் தவிர்க்க முடியவில்லை.

கமலின் மனைவியாக அபிராமி, அண்ணனாக நாசர், மகளாக சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, போலீஸ் அதிகாரியாக அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி, வடிவுக்கரசி, சின்னி ஜெயந்த், வையாபுரி, பகவதி, ஜோஜூ ஜார்ஜ் என பெரிய நடிகர் பட்டாளமே நடித்திருக்கிறது.

ஏ.ஆர். ரஹ்மான் இசையில் ஹிட்டான, ‘முத்தமழை…’ , ‘விண்வெளி நாயகா’ பாடல்கள் படத்தில் இல்லை. பின்னணி இசை, காட்சிகளுக்கு உணர்வூட்டுகிறது. ரவி.கே.சந்திரனின் ஒளிப்பதிவில் ஜெய்சல்மாரில் நடக்கும் கார் சேஸிங், நேபாளத்தின் பனிமலை உள்பட பல காட்சிகள் கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம் போலிருக்கிறது. இரண்டே முக்கால் மணி நேரம் ஓடும் படத்தில் கொஞ்சம் கத்திரி போட்டிருக்கலாம், படத் தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x