Published : 03 Jun 2025 08:31 AM
Last Updated : 03 Jun 2025 08:31 AM
மதயானைக் கூட்டம் இயக்குநர் விக்ரம் சுகுமாரன் திடீர் மரணம் இயக்குநர் விக்ரம் சுகுமாரன் திடீர் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். அவருக்கு வயது 47.
பரமக்குடியை சேர்ந்த விக்ரம் சுகுமாரன், பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார். பின்னர் வெற்றிமாறன் இயக்கிய ‘பொல்லாதவன்’ படத்தில் அசோசியேட்டாக பணியாற்றிய அவர், 'ஆடுகளம்' படத்துக்கு வசனம் எழுதினார். இதையடுத்து கதிர், ஓவியா நடித்த ‘மதயானைக் கூட்டம்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இந்தப் படத்தில்தான் எழுத்தாளர் வேல ராமமூர்த்தி நடிகராக அறிமுகமானார். இதை நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார் தயாரித்தார். இதையடுத்து சாந்தனு நடித்த ‘ராவணக் கோட்டம்’ படத்தை இயக்கினார். பின்னர் அவருக்கு அடுத்த வாய்ப்பு உடனடியாகக் கிடைக்கவில்லை.
இந்நிலையில், மதுரையில் உள்ள தயாரிப்பாளர் ஒருவரிடம் கதை சொல்வதற்காக அங்கு சென்றிருந்தார். கதை சொல்லிவிட்டு சென்னை திரும்புவதற்காக நேற்று முன் தினம் இரவு பேருந்துக்காகக் காத்திருந்தார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர். அதற்குள் அவர் உயிர் பிரிந்துவிட்டது.
பின்னர் அவரது உடல், அவர் வசித்த சென்னை ரெட் ஹில்ஸ் பகுதிக்குக் கொண்டு வரப்பட்டது. அங்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் இறுதிச்சடங்கு நடந்தது. மறைந்த விக்ரம் சுகுமாரனுக்கு ஜெய ரூபா என்ற மனைவி உள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT