Published : 03 Jun 2025 07:36 AM
Last Updated : 03 Jun 2025 07:36 AM

‘வதந்தி பரப்பி காலி பண்ண நினைத்தால் முடியாது’ - நடிகர் தனுஷ் ஆவேசம்

தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப், தலிப் தாஹில் உள்பட பலர் நடித்துள்ள படம், ‘குபேரா’. சேகர் கம்முலா இயக்கியுள்ள இந்தப் படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 5 மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படம் ஜூன் 20-ம் தேதி வெளியாகிறது. தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இதன் பாடல் வெளியீட்டு விழா, சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் நடைபெற்றது.

நடிகர் தனுஷ் பேசும்போது கூறியதாவது: இது கலிகாலம். வெறுப்பு, எதிர்மறை மற்றும் பொறாமை செழித்து வளரும் காலம்; நன்மையை விட தீமை மேலோங்கி வளர்கிறது. எனக்கு எதிராக எவ்வளவு வேண்டுமானாலும் வதந்திகள் பரப்பலாம். எதிர்மறையான விஷயங்களைக் கிளப்பலாம்.

எனது பட ரிலீஸுக்கு ஒன்றரை மாதத்துக்கு முன் என்னைப் பற்றி ‘நெகட்டிவிட்டி’ பரப்புகிறார்கள். தம்பிங்களா, கொஞ்சம் தள்ளிப் போய் விளையாடுங்க. இங்கு வந்திருப்பவர்கள் அனைவரும் என் ரசிகர்கள் மட்டும் கிடையாது. 23 வருடமாக என்னுடன் வருகிற வழித்துணைகள். நீங்கள் ஒரு நான்கு வதந்தியை பரப்பி, என்னை காலி பண்ண நினைத்தால் அதை விட முட்டாள்தனம் எதுவுமே கிடையாது. ஒரு செங்கல்லை கூட அசைக்க முடியாது.

எண்ணம் போல் வாழ்க்கை. சந்தோஷமாக இருங்கள். மகிழ்ச்சியை வெளியே தேடாதீர்கள். அது உங்களுக்குள்தான் இருக்கிறது. நான் ஒரு வேளை சாப்பாட்டுக்கு வழியில்லாமலும் இருந்திருக்கிறேன். இப்போது நல்ல நிலையிலும் இருக்கிறேன். எந்த நிலையில் இருந்தாலும் நான் சந்தோஷமாகத்தான் இருப்பேன். ஏனென்றால் சந்தோஷத்தை நான் வெளியில் தேடுவது கிடையாது. இவ்வாறு தனுஷ் பேசினார். படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x