Published : 02 Jun 2025 08:51 PM
Last Updated : 02 Jun 2025 08:51 PM
லண்டன் சிம்பொனி இசைக் கலைஞர்களுடன் ஆகஸ்ட் 2-ம் தேதி தமிழகத்தில் இசை நிகழ்ச்சி நடைபெற இருப்பதாக இளையராஜா தெரிவித்துள்ளார்.
இன்று தனது 83-வது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார் இசையமைப்பாளர் இளையராஜா. அவருக்கு பலரும் நேரில், தொலைபேசி வாயிலாகவும், இணையத்திலும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இன்று காலை தனது அலுவலகத்தில் பத்திரிகையாளர்கள் மத்தியில் இளையராஜா பேசும்போது, “எனக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய முக்கிய பிரமுகர்களுக்கும், திரையுலக பிரபலங்களுக்கும், நேரில் வந்து வாழ்த்திய ரசிகர்களுக்கும் நன்றி. எனக்கு பிறந்தநாள் வாழ்த்து கூற வெளியூரில் இருந்து எல்லாம் சிரமப்பட்டு வந்திருக்கிறார்கள். இணையத்தில் பிறந்தநாள் வாழ்த்து கூறிக் கொண்டிருப்பவர்களுக்கும் நன்றி.
ரசிகர்கள் என் மீது வைத்திருக்கும் அன்பைப் பார்த்தால் வாயடைத்து போகிறது. வார்த்தைகளே வரவில்லை. என்னை பார்ப்பது சாதாரண விஷயம். அதற்காக இவ்வளவு சிரமப்பட்டு வருகிறார்கள். என்னை பார்க்க போகிறோம் என்று ஒரு வாரம் தூங்காதவர்கள் எல்லாம் இருக்கிறார்கள். இவர்களுக்கு எல்லாம் நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை.
என் ரசிகர்களுக்கு ஓர் இனிப்பான செய்தி. வரும் ஆகஸ்ட் 2-ம் தேதி லண்டனில் எனது சிம்பொனிக்கு இசையமைத்த கலைஞர்கள் இங்கு வந்து இசையமைக்க இருக்கிறார்கள். என் மக்களுக்காக இதை செய்யவுள்ளேன். எனது இசையை அங்கு போய் இசையமைத்து என்ன பயன்? இங்கு என் மக்கள் அந்த இசையைக் கேட்டு மேம்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார் இளையராஜா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT