Published : 02 Jun 2025 08:57 AM
Last Updated : 02 Jun 2025 08:57 AM

ஜின்: திரை விமர்சனம்

சிங்கப்பூரில் நட்சத்திர விடுதி ஒன்றில் பேண்ட் பாடகராக இருக்கும் சக்தி (முகேன் ராவ்), இந்தியா வரும்போது, பழமையான பெட்டியை வாங்கிக்கொண்டு திரும்புகிறார். வீட்டில் உள்ள பலரும் அது என்ன பெட்டி எனக் கேட்க, அதற்குள் ‘ஜின்’ என்கிற அதிர்ஷ்டப் பேய் அடைக்கப்பட்டிருப்பதாகக் கூறுகிறார்.

முதலில் மிரண்டாலும் பின்னர், பிரியா (பவ்யா) என்கிற பெண்ணை, சக்தி திருமணம் செய்துகொள்ளச் சம்மதித்ததால் ஜின்னை ஏற்கிறார்கள். ஆனால், பிரியாவை ஒரு கும்பல் கொலை செய்யும் நோக்கத்தில் கொடூரமாகத் தாக்கிவிட்டுப் போக, அதன் பின் ஜின் மீது சந்தேகம் வந்து அது இருக்கும் பெட்டியைத் தூக்கி வெளியே வீசுகிறார் சக்தி. பெட்டிக்குள் இருந்த ஜின் வெளியே வந்ததா, பிரியாவை கொலை செய்ய முயன்றவர்கள் யார் எனக் கதை செல்கிறது.

போரில் வென்ற ஜின் என்கிற அதிர்ஷ்டப் பேயை மலேசிய அரசர் ஒருவர் நூற்றாண்டுகளுக்கு முன் வளர்த்தார். அதை எதிரிகள் பெட்டிக்குள் ஏன் அடைத்தார்கள் என்று ஏஐ-யில் உருவாக்கப்பட்ட அனிமேஷன் கதை சுவாரஸ்யமாக இருக்கிறது. அதை, தற்காலத்தில் சக்தியின் குடும்பத்தினர், அவரது காதல் கதை ஆகியவற்றுடன் இணைந்த விதத்தில் பொருத்தம் இருந்தாலும் அதை சுமாரான திரைமொழியில் சொன்னது பலவீனம்.

பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட பேயை, காமெடியான உருவத்தில் காட்டியதும் ஈர்க்கவில்லை. ஆனால், அதற்கு எழுதப்பட்ட வசனங்களும் குரல் தேர்வும் நன்று. ஜின்னுக்கு பால், பிஸ்கட் வைத்துச் செல்லப் பிராணியாக பராமரிக்க வேண்டும் என்கிறார் சக்தி. ஆனால், ஜின் விரும்பும் உணவோ வேறாக இருக்கிறது.

சக்தியாக வரும் முகேன் ராவ், ஜின்னால் ஆற்றல் பெற்று எதிரிகளைப் பந்தாடும் காட்சிகளில் அட்டகாசம் செய்திருக்கிறார். ஆனால், நடிப்பில் தடுமாறுகிறார். அவரது காதலியாக வரும் பவ்யா, தனது வேலையைக் கச்சிதமாகச் செய்திருக்கிறார். வடிவுக்கரசி, வினோதினி ஆகிய இருவரும் ‘ஃபேன்டஸி’ நகைச்சுவைப் படத்துக்குள் கச்சிதமாகப் பொருந்திக் கவர்கிறார்கள். இமான் அண்ணாச்சி கதாபாத்திரம் இந்தக் கதைக்குள் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

ஜின்னை சந்தேகிக்கும் குடும்பத்தினர், பின்னர் அதை ஏற்றுக்கொள்வதை இன்னும் நம்பகத்தன்மையுடன் உருவாக்கி இருக்கலாம். படம் தொய்வடையும் போது, பால சரவணன் நகைச்சுவையால் ஈடுசெய்கிறார்.

ஃபேன்டஸி + குடும்பம் + காதல் என்கிற பொழுது போக்கு டெம்பிளேட்டுக்கு சுவாரஸியமான ஒருவரிக் கதை அமைந்தும் அதை திரைக்கதையாக்கம், படமாக்கம் செய்வதில் இன்னும் மெனக்கெட்டிருக்கலாம் இயக்குநர் டி.ஆர்.பாலா.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x