Last Updated : 06 May, 2025 10:03 AM

29  

Published : 06 May 2025 10:03 AM
Last Updated : 06 May 2025 10:03 AM

“விஜய்யிடம் தெளிவான அரசியல் பார்வை இல்லை” - பிரகாஷ்ராஜ் கருத்து

தவெக தலைவர் விஜய்யிடம் தெளிவான அரசியல் பார்வையோ, மக்கள் பிரச்சினைகள் குறித்த புரிதலோ இல்லை என்று நடிகர் பிரகாஷ்ராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.

அரசியலில் தீவிர பாஜக எதிர்ப்பாளர் நடிகர் பிரகாஷ்ராஜ். பிரதமர் மோடியை பலமுறை தனது எக்ஸ் தளத்தில் கடுமையாக சாடியிருக்கிறார். மேலும், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணையும் சாடி பலமுறை பேட்டியளித்துள்ளார். தற்போது பிரகாஷ்ராஜ் அளித்துள்ள பேட்டியில் பவன் கல்யாண் மற்றும் விஜய் இருவரின் அரசியல் வருகை குறித்து காட்டமாக பேசியிருக்கிறார்.

அதில், “பவன் கல்யாண் தனது சகோதரர் சிரஞ்சீவியின் குடும்பத்தில் இருந்து வந்தவர். அவரது ரசிகர்கள் பட்டாளத்தை மட்டுமே தொண்டர்களாகக் கொண்டவர். அவர் இதனை ஏற்காமல் இருக்கலாம். ஆனால், அதுதான் நிஜம்.

அதேபோல் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி ஒரு பிரபலமான இயக்குநர். அவர் தனது நட்சத்திர அந்தஸ்தைப் பெறுவதற்கு முன்பே அவரை அறிமுகப்படுத்த ஏராளமான படங்களை தயாரித்தவர். பவன் கல்யாண் பல வருடங்களுக்கு முன்பே அரசியலுக்கு வந்தவர், விஜய் அரசியலுக்கு புதியவர்.

நான் அவர்களோடு படங்களில் நடிக்கும்போது ஒருபோதும் அரசியல் பற்றி தீவிரமாகப் பேசியதில்லை. அவர்கள் நடிகர்கள். அதன் பிரபலத்தைக் காரணமாக வைத்து அரசியலில் நுழைந்தனர். ஆனால், இருவரிடமும் தெளிவான அரசியல் பார்வையோ அல்லது மக்கள் பிரச்சினைகள் குறித்த புரிதலோ இல்லை.

பவன் கல்யாண் தனது கட்சி தொடங்கி 10 ஆண்டுகளில், அவரிடம் ஒரு தொலைநோக்கு பார்வையோ அல்லது மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்த புரிதலோ இருப்பதை பார்த்ததில்லை. அதை நான் விஜய்யிடமும் காணவில்லை. ஆனால், பவன் கல்யாண் அல்லது விஜய் போன்றவர்கள் அரசியலில் நுழையும்போது, மக்கள் இருக்கும் அமைப்பில் ஒரு வெற்றிடத்தைத் தேடுகிறார்கள். அதன் காரணமாக அவர்களுக்கு சில இடங்கள் கிடைக்கக் கூடும்.

ஆனால், பின்னர் அவர்கள் தங்களை நிரூபிக்க வேண்டும். விஜய் பேசும் பேச்சை கேட்கிறேன். ஆனால், எப்படிப் போராடுவது என்பதில் ஆழமான புரிதல் இல்லை. பவன் கல்யாண் பிரபலமான நடிகர் என்பதால் நாட்டின் தலைவிதியை அவரது கைகளில் கொடுக்க வேண்டுமா? அவர் தனது சித்தாந்தத்தில் சீரற்றவர்” என்று பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x