Published : 05 May 2025 01:00 PM
Last Updated : 05 May 2025 01:00 PM
மெட்ராஸ் கந்தசாமி ராதாகிருஷ்ணன் என்கிற எம்.கே.ராதா, ஏழு வயதிலேயே நாடகத்தில் நடிக்கத் தொடங்கியவர். சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்தில் தேசபக்தி நாடகங்களில் நடித்து மக்கள் மனதில் முன்னணி நடிகராக இடம் பிடித்திருந்தார். எல்லீஸ் ஆர்.டங்கனின் ‘சதி லீலாவதி’யில் நாயகனாக அறிமுகமானவர்.
தொடர்ந்து அனாதை பெண், வனமோகினி, சந்திரலேகா, அபூர்வ சகோதரர்கள் என பல படங்களில் நடித்துள்ளார். அவர் நாயகனாக நடித்த படங்களில் ஒன்று, ‘கண்ணின் மணிகள்’. இதில், அவருடன் பத்மினி, எம்.வி.ராஜம்மா, என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம், சுந்தர், டி.பி.முத்துலட்சுமி, ஏ.கருணாநிதி, எம்.வி.ராஜம்மா, டி.ஏ.மதுரம் என பலர் நடித்தனர்.
அந்த காலகட்டத்தில் பிரபலமாக இருந்த ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான ஜானகிராமன், இந்தப் படத்தைத் தனது மகேஸ்வரி பிக்சர்ஸ் மூலம் தயாரித்து, ஒளிப்பதிவு செய்து இயக்கினார். ஏ.எல்.நாராயணனும் கணபதியப்பனும் வசனத்தை எழுதினர். எஸ்.வி.வெங்கட்ராமன் இசை அமைத்தார்.
பாபநாசம் சிவன், கம்பதாசன், சுப்பு ஆறுமுகம், ஏ.மருதகாசி என பலர் பாடல்கள் எழுதினர். நாகரிக வாழ்க்கையை நையாண்டி செய்து என்.எஸ்.கிருஷ்ணன் பாடிய, ‘காலம் மாறி போச்சே... அகப்பை கணவன் கையிலாச்சே’ என்ற பாடல் அந்த காலத்தில் சூப்பர் டூப்பர் ஹிட்.
இந்த படம் வித்தியாசமான கதையைக் கொண்டிருந்தது. எம்.கே.ராதா, மூத்த போலீஸ் அதிகாரி. அவர் மனைவி எம்.வி.ராஜம்மா. அவர்களின் நோய்வாய்ப்பட்ட குழந்தைக்கு, சுந்தர் சிகிச்சை அளிக்கிறார். குழந்தைக்கு, மருத்துவம் பார்ப்பவர் என்பதால் ராஜம், சுந்தரிடம் அதிக மரியாதை வைத்திருக்கிறார். அதைக் கண்டு ராதா சந்தேகப்படுகிறார். வீட்டில் நிம்மதி குலைகிறது. பிறகு என்ன நடக்கிறது என்று கதை நகரும்.
கருப்பு வெள்ளையில் உருவாக்கப்பட்ட இந்தப் படத்தின் சில காட்சிகள் ‘கேவாகலரி’ல் படமாக்கப்பட்டன. 1951-ம் ஆண்டு மே 5-ம் தேதி வெளியான இந்தப் படம், பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை ஈட்டியது. ஆனால் இந்தப் படத்தின் பிரின்ட் இப்போது கிடைக்கவில்லை என்பது சோகம்.
முந்தைய பகுதி > சௌதாமினி: ‘கட்’ சொல்ல மறந்த இயக்குநர், மழையில் நனைந்தபடி இருந்த நடிகை | அரி(றி)ய சினிமா
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT