Published : 11 Aug 2014 08:38 PM
Last Updated : 11 Aug 2014 08:38 PM
சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்து வரும் 'இறுதி சுற்று' படத்தின் மூலம் இந்தியில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் சந்தோஷ் நாராயணன்.
'அட்டகத்தி', 'குக்கூ', 'பீட்சா', 'சூது கவ்வும்' உள்ளிட்ட பல படங்களில் தனது இசையால் படத்திற்கு அழகுக்கூட்டியவர் சந்தோஷ் நாராயணன். இவரது இசைக்கு பல தரப்புகளிலும் இருந்து வாழ்த்துகள் குவிந்தன. தற்போது வெளியாகி வரவேற்பு பெற்றிருக்கும் 'ஜிகர்தண்டா' படத்திற்கும் இசையமைப்பாளர் இவர் தான்.
'சூது கவ்வும்' படத்திற்கு இவர் பண்ணிய தீம் மியூசிக், அப்போது தமிழ்நாட்டில் பலரது ரிங் டோனாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது சுதா கொங்கரா என்ற பெண் இயக்குநர் இயக்கத்தில் மாதவன் நடித்து வரும் 'இறுதி சுற்று' என்ற படத்தின் மூலம் இந்தியில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் சந்தோஷ் நாராயணன். இப்படம் தமிழ் மற்றும் இந்தி என இரு மொழிகளிலும் தயாராகிறது.
இப்படத்தை சசிகாந்த் மற்றும் சி.வி.குமார் இணைந்து தயாரிக்கிறார்கள். தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பாளராக வலம் வரும் சி.வி.குமார் தயாரிக்கும் முதல் இந்திப் படம் இதுவாகும். இப்படத்திற்காக மாதவன் தனது உடலமைப்பை எல்லாம் மாற்றி அமைத்திருக்கிறார். நாசர், ரித்திகா, மும்தாஜ் உள்ளிட்ட பலர் மாதவனுடன் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்கள்.
பிரபல இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணியாற்றிய சுதா கொங்கரா ஸ்ரீகாந்த், விஷ்ணு நடிப்பில் வெளியான 'துரோகி' என்னும் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT