Published : 03 May 2025 10:00 AM
Last Updated : 03 May 2025 10:00 AM
ஆங்கிலேயர்களும் முகலாயர்களும் நம்மை கிட்டத்தட்ட 800 ஆண்டுகள் மட்டுமே ஆட்சி செய்தனர். ஆனால் சோழப் பேரரசு 2,400 ஆண்டுகள் பழமையானது என்று நடிகர் மாதவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேட்டி ஒன்றில் அவர் பேசியதாவது: “இதைச் சொல்வதால் எனக்குப் பிரச்சினை ஏற்படலாம். ஆனாலும் நான் இதைச் சொல்வேன். நான் பள்ளியில் வரலாறு படித்தபோது, முகலாயர்களைப் பற்றி எட்டு பாடங்கள் இருந்தன. ஹரப்பா மற்றும் மொஹஞ்சதாரோ நாகரிகங்களைப் பற்றி இரண்டு அத்தியாயங்களும், பிரிட்டிஷ் ஆட்சி மற்றும் சுதந்திரப் போராட்டத்தைப் பற்றி நான்கு பாடங்களும், தென்னிந்திய பேரரசுகள்- சோழர்கள், பாண்டியர்கள், பல்லவர்கள் மற்றும் சேரர்கள் பற்றி ஒரே ஒரு பாடமும் இருந்தன.
ஆங்கிலேயர்களும் முகலாயர்களும் நம்மை கிட்டத்தட்ட 800 ஆண்டுகள் மட்டுமே ஆட்சி செய்தனர். ஆனால் சோழப் பேரரசு 2,400 ஆண்டுகள் பழமையானது. அவர்கள் கடல் பயணத்தின் முன்னோடிகள். ரோம் வரை அவர்களுடைய வணிகப் பயணம் நீண்டிருந்தது. நமது வரலாற்றின் அந்தப் பகுதி எங்கே? நமது வலிமைமிக்க கடற்படைப் படைகளுடன் அங்கோர் வாட் வரை கோயில்களைக் கட்டியது பற்றிய குறிப்புகள் எங்கே? சமணம், பௌத்தம் மற்றும் இந்து மதம் சீனாவிற்கு பரவியது. கொரியாவில் உள்ள மக்கள் பாதி தமிழ் பேசுகிறார்கள், ஏனென்றால் எங்கள் மொழி அவ்வளவு தூரம் சென்றது. இதையெல்லாம் ஒரே ஒரு அத்தியாயத்தில் சுருக்கிவிட்டோம்.
இதையெல்லாம் முடிவு செய்வது யார்? பாடத்திட்டத்தை யார் தீர்மானித்தது? தமிழ் உலகின் பழமையான மொழி, ஆனால் அதைப் பற்றி யாருக்கும் தெரியாது. எங்கள் கலாச்சாரத்தில் மறைந்திருக்கும் அறிவியல் அறிவு இப்போது கேலிக்கு உள்ளாகிறது” இவ்வாறு மாதவன் தெரிவித்தார்.
சிபிஎஸ்இ 7ஆம் வகுப்பு பள்ளி பாடப்புத்தகங்களில் இருந்து முகலாயர்கள் மற்றும் டெல்லி சுல்தான்கள் பற்றிய அனைத்து குறிப்புகளையும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கழகம் (என்சிஇஆர்டி) நீக்கியுள்ளதாக சமீபத்தில் சர்ச்சை எழுந்தது. இந்த மாற்றம், மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை அடிப்படையில் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT