Last Updated : 02 May, 2025 04:08 PM

1  

Published : 02 May 2025 04:08 PM
Last Updated : 02 May 2025 04:08 PM

‘ரெட்ரோ’ முதல் நாள் வசூல் நிலவரம் என்ன?

சூர்யாவின் ‘ரெட்ரோ’ திரைப்படம் வெளியான முதல் நாளில் தமிழக அளவில் ரூ.17.75 கோடியையும், இந்திய அளவில் சுமார் ரூ.20 கோடியையும் வசூல் செய்துள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம், ‘ரெட்ரோ'. பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், நாசர், பிரகாஷ் ராஜ், சுஜித் சங்கர், சுவாசிகா, கருணாகரன், நந்திதா தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். 2 டி என்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம் மே 1-ல் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.

இந்நிலையில், ‘ரெட்ரோ’ படத்தின் முதல் நாள் வசூல் விவரம் வெளிவந்துள்ளது. தமிழகத்தில் மட்டும் ‘ரெட்ரோ’ முதல் நாளில் ரூ.17.75 கோடி வசூலை ஈட்டியுள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. அதேவேளையில், இந்திய அளவில் இப்படம் முதல் நாளில் ரூ.20 கோடி அளவில் வசூல் செய்துள்ளது.

‘கங்குவா’ உடன் ஒப்பிடும்போது, ‘ரெட்ரோ’ படத்தின் முதல் நாள் வசூல் குறைவுதான். எனினும், ‘கங்குவா’ அளவுக்கு இல்லாமல், ‘ரெட்ரோ’வுக்கு ஓரளவு நல்ல வரவேற்பு இருப்பதால் அடுத்தடுத்த நாட்களில் வசூல் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, வார இறுதி நாட்களில் நல்ல வசூல் வேட்டையை ‘ரெட்ரோ’ நிகழ்த்தும் என்றும் படக்குழு எதிர்பார்க்கிறது. அதேபோல், உலக அளவிலான வசூல் மூலம் இப்படம் நிச்சயம் முதலுக்கு மோசமின்றி லாபம் நோக்கி நகரக் கூடும் என்று திரை வர்த்தகர்கள் கூறுகின்றனர்.

முதல் பாதியில் குறை எதுவும் இல்லாத வகையில் சுவாரஸ்யமாக நகர்ந்த ‘ரெட்ரோ’ திரைக்கதை, அப்படியே இரண்டாம் பாதியில் தலைகீழாக மாறி ஒட்டுமொத்த படத்தையும் கீழே கொண்டு போய் விடுகிறது என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. எனினும், காதலும், ஆக்‌ஷனும் நிறைந்த இப்படத்தில் சூர்யாவின் பெர்ஃபார்மன்ஸ் வெகுவாக ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதேவேளையில், ‘ஜெய் பீம்’ படம் வெளியானது முதலே சமூக வலைதளங்களில் சூர்யா மீது அளவுக்கு அதிகமாக தூவப்படும் வன்மம் என்பது ‘ரெட்ரோ’ ரிலீஸின்போதும் தொடர்ந்துள்ளதையும் கவனிக்க வேண்டும்.

சூர்யாவின் படத்தை பார்க்காமலோ அல்லது படம் வருவதற்கு முன்பாகவோ படம் குறித்த எதிர்மறை கமென்டுகள், மோசமான ஹேஷ்டேகுகள் போன்ற விஷயங்களை வேண்டுமென்றே பரப்புவதும் நடக்கிறது. இந்தப் போக்கு சமீபகாலமாக சமூக ஊடகங்களில் அதிகரித்து வருவது கவலையளிப்பதாக தமிழ் சினிமா வட்டாரங்கள் கருதுகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x