Published : 02 May 2025 08:39 AM
Last Updated : 02 May 2025 08:39 AM
சென்னை: “எப்போது ஓய்வு பெறுவது என்பது நான் திட்டமிடும் ஒன்றல்ல. நான் ஓய்வு பெற வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். நான் எதையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ள விரும்பவில்லை” என்று நடிகர் அஜித் தெரிவித்துள்ளார்.
தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் நடிகர் அஜித் கூறியது: “எப்போது ஓய்வு பெறுவது என்பது நான் திட்டமிடும் ஒன்றல்ல. நான் ஓய்வு பெற வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். நான் எதையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ள விரும்பவில்லை. மக்கள் தங்கள் வாழ்க்கையைப் பற்றி குறை கூறுகிறார்கள். காலை விழித்து உயிருடன் இருப்பதே ஒரு வரம். நான் இங்கு தத்துவம் பேசவில்லை.
எனக்கு பல அறுவை சிகிச்சைகளும் காயங்களும் ஏற்பட்டிருக்கின்றன. புற்றுநோயிலிருந்து தப்பிய பல நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் எனக்கு உள்ளனர். வாழ்க்கை எவ்வளவு மதிப்புமிக்கது என்பதை நாம் அறிவோம். என் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் நான் பயன்படுத்த விரும்புகிறேன். அதை மிக அதிகமாக பயன்படுத்த விரும்புகிறேன்.
என்னுடைய நேரம் வரும்போது, என்னை படைத்தவன், ‘நான் இந்த ஆன்மாவுக்கு ஒரு வாழ்க்கையைக் கொடுத்தேன், இவன் அதை முழுமையாக பயன்படுத்தி இருக்கிறான். அதன் ஒவ்வொரு நொடியையும் நேர்மறையான வழியில் பயன்படுத்தினான்’' என்று நினைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நான் வாழ்க்கையை இப்படித்தான், ஆர்வத்துடன், நேரத்தை வீணாக்காமல் வாழ விரும்புகிறேன்.
நடிப்பு எப்போதும் என் தேர்வாக இருந்ததில்லை. நான் ஒரு விபத்தில் நடிகன் ஆனவன். நான் ஓர் அரசு நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தேன். பள்ளிப் படிப்பு முடிந்ததும், நான் ஒரு ஆட்டோமொபைல் நிறுவனத்தில் வேலை செய்தேன். நான் அவர்களுடன் சுமார் ஆறு மாதங்கள் பயிற்சியாளராக இருந்தேன்.
நான் ரேஸில் கலந்து கொள்ள தொடங்கும்போது, எனக்கு 18 வயது. என் அப்பா என்னிடம், 'அஜித், மோட்டார் ஸ்போர்ட்ஸ் மிகவும் விலை உயர்ந்தது, நான் உன்னை பொருளாதார ரீதியாக ஆதரிக்க முடியாது. அதேநேரம், உன்னை என்னால் தடுக்கவும் முடியாது. நீதான் உன் வழியைத் தேடிக் கொள்ள வேண்டும்' என்று சொன்னது எனக்கு நினைவிருக்கிறது.
நான் ரேஸ் டிராக்கில் இருந்தபோது, ஒரு மாடல் ஒருங்கிணைப்பாளர் என்னை அணுகினார். அவர் தனது விசிட்டிங் கார்டை என்னிடம் கொடுத்து, எனக்கு மாடலிங்கில் ஆர்வம் இருந்தால் அவரைத் தொடர்பு கொள்ளச் சொன்னார். நான் அதைப் பயன்படுத்திப் பார்க்கலாமா என்று யோசித்தேன். அங்கு நான் சம்பாதித்த பணத்தை ரேஸில் செலவிட்டேன்.
ஆரம்பத்தில், எனக்கு ஒரு தெலுங்கு பட வாய்ப்பு கிடைத்தது - அந்த மொழி எனக்குப் பேசத் தெரியாது. எனினும் நான் அதைத் தொடர முடிவு செய்தேன். ஆனால் என் பெற்றோர் மிகவும் கவலைப்பட்டு, 'அஜித், நம் குடும்பத்தில் யாரும் திரைப்படத் துறையில் இருந்ததில்லை. யோசித்துப் பார்த்து முடிவு செய்' என்றார்கள்.
நான் இருட்டில் குதிக்கிறேன் என்று எனக்கு தெரியும். ஆனால், நடிகர்களாக விரும்பிய நண்பர்கள் சிலர், எனக்கு வந்த வாய்ப்பை நான் மறுத்துவிட்டேன் என்பதை கேள்விபட்டு கடும் கோபம் அடைந்தனர். கிடைக்கும் வாய்ப்பை இப்படி நழுவவிடுவது பெரும் தவறு என்றனர். இப்படித்தான் நடிகர் ஆனேன்” என்று அஜித் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT