Published : 21 Apr 2025 10:12 AM
Last Updated : 21 Apr 2025 10:12 AM
சென்னை: தன்னுடைய படங்களில் ஆபாச காட்சிகளோ, இரட்டை அர்த்த வசனங்களோ இடம்பெற்றதே இல்லை என என்று இயக்குநர் சுந்தர்.சி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து யுடியூப் பேட்டி ஒன்றில் சுந்தர்.சி கூறியது: “என்னுடைய படங்களுக்கு அதிகமாக வரும் பார்வையாளர்கள் யாரென்று பார்த்தால் குழந்தைகளும், ஃபேமிலி ஆடியன்ஸும்தான். எனவே அவர்கள் ரசிக்கும்படிதான் நான் காட்சிகள் வைப்பேன். மிகவும் ஆபாசமான காட்சிகள், என் படங்களில் இருக்காது. டபுள் மீனிங் வசனங்களை என் படங்களில் நான் வைப்பதில்லை.
ஒருவேளை அப்படி டபுள் மீனிங் இருந்தால் அது பார்ப்பவர்களுக்கு அப்படி தெரிந்திருக்கலாம். நான் எந்த எண்ணத்தில் வைத்திருக்க மாட்டேன். காரணம், எழுதும்போதே டபுள் மீனிங் வசனங்களை நான் தவிர்த்து விடுவேன். அதே போல ஆபாச வசனங்களும் இருக்காது.
என் படங்களில் கிளாமர் இருக்கும். நாம் வைக்கும் ஆங்கிள் தான் முக்கியம். புடவை கட்டிக் கொண்டு வந்தால் கூட டாப் ஆங்கிள் வைத்தால் தப்பாகி விடும். ஹீரோயின் கவுன் போட்டுக் கொண்டு வரும்போது லோ ஆங்கிள் வைத்தால் அதுதான் ஆபாசம். ஆனால் அதை என் படங்களில் எப்போதுமே செய்வதில்லை. முடிந்த அளவுக்கு நான் குடும்பத்தோடு அமர்ந்து பார்க்கும் அளவுக்கு அழகாக ஷூட் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுவேன்.
என் படங்களில் பாலியல் வன்கொடுமை காட்சிகளோ, ஸ்பெஷல் ஐட்டம் பாடல்களோ நான் வைத்ததில்லை. என் குடும்பத்தோடு உட்கார்ந்து நான் ஜாலியாக படம் பார்க்க வேண்டும்” என்று சுந்தர்.சி தெரிவித்தார்.
சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கேங்கர்ஸ்’. நீண்ட வருடங்கள் கழித்து இப்படத்தில் சுந்தர்.சி – வடிவேலு காமெடி கூட்டணி இணைந்திருக்கிறது. இப்படம் ஏப்ரல் 24-ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT